×

திருமணத் தடை நீக்கும் திருச்சுழி திருமேனிநாதர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து 15 கிமீ தொலைவில் திருச்சுழி உள்ளது. ரமண மகரிஷி அவதரித்த புண்ணியத் தலம், சுவாமி விவேகானந்தர் புனித யாத்திரையின்போது இங்கு வந்து சென்றது உள்ளிட்ட பெருமைகளை கொண்ட இந்த ஊரின் தெற்கு பகுதியில் திருமேனிநாதர் என அழைக்கப்படும் சிவன் கோயில் உள்ளது. ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் சுயம்புலிங்கமாக திருமேனிநாதர் அருள் பாலிக்கிறார்.

தேவாரப் பாடலில் இடம் பெற்றுள்ள 274 சிவாலயங்களில் 202வது தலமாக இந்த கோயில் இடம் பெற்றுள்ளது. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், திருமேனிநாதர், துணைமாலையம்மன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று திருமேனிநாதர் மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வு நடக்கிறது.

தல வரலாறு பல்வேறு பெருமை வாய்ந்த இந்த கோயில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. கோயிலை கட்டியவர்கள் குறித்து சரிவர விபரங்கள் தெரியவில்லை. கோயிலின் கிழக்கு வாயிலை கடந்தவுடன் சன்னதி முன்பு ‘கெளவை கடல்’ என அழைக்கப்படும் மைய மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளம் உள்ளது.

அம்மன் சன்னதி முன்புள்ள அர்த்த மண்டபத்தின் மேற்கூரையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்குசக்கர சிற்பம் உள்ளது. திருமணத் தடை உள்ளவர்கள் திருமேனிநாதர், துணைமாலை நாயகி சன்னதிகளில் விளக்கேற்றி வணங்கினால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். திருமணம் தடைபட்டவர்கள் இங்கு வந்து சுவாமி மற்றும் அம்மனை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

கம்பத்தடி மண்டபத்தில் பலி பீடம், கொடி மரம் உள்ளது. இங்குள்ள ஒரு தூணில் திருவுமுத்திருளி என அழைக்கப்படும் மூச்சுப்பிடியம்மன் சிலை உள்ளது. மூச்சுப்பிடிப்பு உள்ளவர்கள் அம்மனை சுற்றி வந்து வணங்கினால் மூச்சுப்பிடிப்பு உள்பட பல்வேறு நோய்கள் நீங்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது.

*******
திருமேனிநாதருக்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது. அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது. பங்குனி பிரமோற்சவம், ஆடித்தபசு, பிரதோஷம், சித்திரை, விஷூ, கார்த்திகை சோமவாரம், தைப்பூசம், சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. விசேஷ நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர்.

Tags : Tiruchi Thiruninathan ,abolition ,
× RELATED போதிய இருப்பு உள்ளதால்...