×

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் : மாலியவான்

உலகத்திலே, யாருமே கெட்டவர்கள் கிடையாது. இந்த எண்ணம் அழுத்தமாக இருக்க வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே ஒரு கதை  சொல்வார்கள் முன்னோர்கள்.ஒரு சமயம் துரோணர், துரியோதனனை அழைத்து,‘‘துரியோதனா! நீ போய், நல்லவன் ஒருவனை அழைத்து வா!’’  என்றார். துரியோதனனும் உடனேபோய்ப் பல இடங்களிலும் தேடினான். வெறுங்கையுடன் திரும்பினான். குருநாதர்கேட்டார். ‘‘துரியோதனா! என்ன  ஆயிற்று?’’ என்றார். ‘‘நல்லவர்கள் என்று ஒருவர் கூட இல்லை. எல்லோரும் தீயவர்களே!’’ என்றான் துரியோதனன்.அடுத்து தர்மரை அழைத்தார்  துரோணர் ‘‘தர்மா! நீ போய் தீயவன்/கெட்டவன் ஒருவனை அழைத்து வா!’’ என்றார். தர்மரும் போனார். வெறுங்கையுடன் வந்தார்.

‘‘குருநாதா! தீயவர்கள் என்று ஒருவர் கூட இல்லை. எல்லோரும் நல்லவர்கள் தாம்!’’ என்றார். துரியோதனன் அனைவரையும் கெட்டவராகவே  பார்த்தான். தர்மரோ, அனைவரையும் நல்லவராகவே பார்த்தார். ஆகவே,அவரவர் மனத்தில் என்ன உள்ளதோ, அதன்படியே உலகம் - என்பதே  உண்மை. துரியோதனனைப் போல, அனைவரையும் கெட்டவர்களாகவே பார்ப்பவர்களும் உண்டு. தர்மரைப்போல, அனைவரையும் நல்லவர்களாகவே  பார்ப்பவர்களும் உண்டு. உப பஞ்ச பாண்டவர்களின் முடிவு கேட்டு, துரியோதனன் மனம் வருந்தியதும் உண்டு; அசுவத்தாமன் விஷயத்தில் தர்மர்  பொய் சொன்னார் என்ற தகவல்களும் உண்டு. ஆகவே தீயவர்கள்/கெட்டவர்கள் என்று, நாம் யாரையும் சொல்ல வேண்டாம். இதிகாச - புராணங்களில்  தீயவர்கள் என்று குறிப்பிடப்படும் சிலர் செய்த நல்லவைகளை, அதே ஞான நூல்கள் விவரிக்கின்றன. அந்த முறையில் ராமாயணத்தில் வரும்  ‘மாலியவான்’ எனும் கதாபாத்திரத்தைப் பார்க்கலாம்!

வித்யுத்கேசன் - சாலகடங்கடை எனும் ராட்சஸ தம்பதிக்கு, ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்தவுடன், குழந்தையை அங்கேயே,  யாருமற்ற காட்டில் விட்டுவிட்டுப் பெற்றோர்கள் சென்று விட்டார்கள். குழந்தையின் ஜொலிக்கும் அழகில் மயங்கிய தாய், திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.அவர்கள் போன சற்று நேரத்தில், குழந்தை தன் கையை வாயில் வைத்துக்கொண்டு அழத்தொடங்கியது. அப்போது  அங்குவந்த பார்வதி - பரமேசுவரர், குழந்தையின் அழுகுரல் கேட்டு குழந்தையை நெருங்கினார்கள். குழந்தையின் குரல் அழுகுரலாக இருந்தும், அதன்  இனிமை தன்மையும், குழந்தையின் அழகும் கண்டு பார்வதியின் மனம் கசிந்தது.ஆகையால் பார்வதி சிவபெருமானிடம், “இக்குழந்தையைக்காக்க  வேண்டும்” என வேண்டினார்.

பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமானும், அக்குழந்தையைத் தாய்க்குச்சமமான வயதுள்ளவனாகச் செய்து, ஆகாயத்தில்  செல்லக்கூடிய நகரம் ஒன்றையும் படைத்துத் தந்தார். பார்வதிதேவி தன் பங்கிற்கு வரங்கள் தந்தார். “ராட்சஸிகள் ஒரே நாளில் கருச்சுமந்து ஒரே  நாளில் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்படியாகவும், குழந்தை பிறந்தவுடன், அது தாயின் வயதை அடையும்படியாகவும் வரங்கள் தருகிறேன்”  என்பதே பார்வதி தந்த வரம்.தெய்வத் தம்பதியால் காக்கப்பட்டு வரங்களும் பெற்ற அக்குழந்தை பெயர் ‘சுகேசன்’. தாய்க்குச் சமமான வயதும்  வரங்களும் பெற்ற சுகேசனுக்கு, நிலைகொள்ளவில்லை. செல்வ வளங்களாலும், வரங்களாலும் கர்வமடைந்தான். தன்னை இந்திரனுக்குச் சமமாக நினைத்துக் கொண்டான்.

சுகேசனுடைய பெருமையையும் வரபலங்களையும் அறிந்த க்ராமணி எனும் கந்தர்வன், தன் மகளான தேவவதீ என்பவளை சுகேசனுக்குத் திருமணம்  செய்து கொடுத்தான். சுகேசனுக்கும், தேவவதிக்கும் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். அந்த ஆண் குழந்தைகளின் பெயர்கள் மாலியவான்,  சுமாலி, மாலி. இந்த மூவரையும் மூலநூல் வர்ணிக்கும் போது அவர்கள் சிவபெருமானின் மூன்று கண்களைப்போலவும், மூன்று உலகங்களைப்  போலவும், மூன்று யாக அக்னிகளைப் போலவும், மூன்று வேதங்களைப்போலவும், வாதம், பித்தம், சிலேட்டுமம் எனும் மூன்று ரோகங்களைப்  போலவும், கவனிக்கப் படாமலிருக்கும் வியாதிகளைப் போலவும், நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து வந்தார்கள்.

மூவரும் தங்கள் தந்தை சிவபெருமானிடமிருந்து அபூர்வமான வரங்களைப் பெற்றார் என்பதை அறிந்து, தாங்களும் அவ்வாறே வரம்பெறத்  தவம்செய்யத் தீர்மானித்தார்கள்.கடுந்தவம் தொடங்கியது. யாராலும் மேற்கொள்ள முடியாத அம்மூவரின் தவம்கண்டு, ஜீவராசிகள் அனைத்தும்  நடுங்கின. அவர்கள் செய்த தவத்தைப்பற்றி, மூலநூல் மேலும் விவரிக்கும் ஓர் உண்மையைக் கவனிக்க வேண்டும். மாலியவான், சுமாலி, மாலி எனும்  மூவரும் சத்தியம் - நேர்மை - சாந்தி முதலான உயர்குணங்கள் பொருந்தியவர்களாய், மற்றவர் யாரும் செய்ய முடியாத கடுந்தவத்தைச் செய்தார்கள்  என்கிறது மூலநூல். இதுவரை பார்த்தவை, எந்தெந்த விதங்களில் எல்லாம், நமக்குப்பாடம் நடத்துகின்றன என்பதைச் சற்றுப் பார்ப்போம்!பார்வதியும்  பரமேசுவரனும் தாமேவந்து, தன்னந்தனியாக பெற்றோர்களாலேயே கைவிடப்பட்ட நிலையிலிருந்த சுகேசனுக்கு வரங்களும் வளமும் தந்தார்கள்.  அவருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளும், தந்தை இறையருளை அடைந்ததைப் போலவே, தாங்களும் இறையருள்பெற்று உயர் நிலை அடைய  விரும்பி, கடுந்தவம் செய்தார்கள். நற்குணங்களை அழுத்தமாகப் பின் பற்றினார்கள். பிரச்னையே இதற்கு மேல்தான்!

தெய்வம் யாரையுமே, வழித்துவிட்டு அதாவது எந்தத் திறமையும் இல்லாமல் படைக்கவில்லை. அவரவர் சக்திக்கும் திறமைக்கும் தகுந்தவாறு அருள்  புரிகின்றது. ஆனால் தெய்வத்தின் அருள்பெற்ற பின், அடுத்தவரின் வாழ்வைக் கண்டு பொறாமை கொண்டு, முறையற்ற வழியில் செயல்பட்டு,  கீழ்நிலையை அடைகிறோம். எளிமையாகச்சொல்ல வேண்டுமானால், கடுமையாக உழைத்துச் சம்பாதித்ததைக் கண்டபடி வீணாக்கி விடுகின்றோம்.இதை உணர்த்தவே, இதிகாச - புராணங்கள் எல்லாம், அரக்கர்களின் கடுமையான தவத்தைச்சொல்லி, அவர்கள் பெற்ற பெருவாழ்வைச் சொல்லி,  அதன்பின் முறையற்ற வழியில் செயல்பட்ட அவர்கள் அழிந்ததையும் சொல்லி, நமக்குப் பாடம் நடத்துகின்றன.

இதோ! மாலியவான்,சுமாலி,மாலி எனும் மூவரும்கடுந்தவம் செய்ததன் விளைவைக்கொண்டு, என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்! மாலியவான் முதலான மூவரும், வேறு யாராலும் செய்யமுடியாத கடுந்தவத்தைச் செய்தார்கள். அவர்களின் தவம், அன்ன வாகனனை அவர்கள்  முன்னால் நிறுத்தியது. ஆம்! அன்னத்தின் மீதேறி பிரம்மா வந்தார். ‘‘வேண்டிய வரங்களைக் கேளுங்கள்!’’ என்றார்.மூவரும் ஒற்றுமையாகத் தவம்  செய்ததைப் போலவே, வரம் கேட்பதிலும் ஒற்றுமையாக இருந்தார்கள்; ‘‘எங்கள் பகைவர்களை நாங்கள் வெல்ல வேண்டும். மற்றவர் எங்களை  வெல்லக்கூடாது. நீண்ட நெடுங்காலம் நாங்கள் ஜீவித்திருக்க வேண்டும். எங்களுக்கு எல்லையற்ற அதிகாரம் இருக்க வேண்டும்’’ என வரம்  கேட்டார்கள்.யாராக இருந்தாலும் அவர்கள் உழைத்த உழைப்பிற்கு, ஊதியம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆகையால், தவம் செய்த மூவருக்கும்  அவர்கள் கேட்டவாறே வரம் தந்தார் பிரம்மதேவர்.

வரங்கள் பெற்றபின் சும்மாயிருப்பார்களா? அபூர்வமான வரங்களைப்பெற்ற அம்மூவரும் வரம் பெற்ற பலத்தின் காரணமாக, தேவர்களுக்கும்  முனிவர்களுக்கும் பெருந்துயர் விளைவித்தார்கள். நல்லவர்கள் யாவரும் நடுங்கினார்கள்.அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்திய அம்மூவரும்  தேவசிற்பியான விசுவகர்மாவை அழைத்து ‘‘நீ எங்களுக்கும் ஓர் அற்புதமான நகரை உருவாக்கிக் கொடு!’’ என்றார்கள்.விசுவகர்மா பதில் சொன்னார்.‘‘புதிதாக இனிமேல் உருவாக்க வேண்டாம். ஏற்கனவே தேவேந்திரன் சொற்படி, தேவலோகத்திற்கு இணையாக, இலங்கை எனும் நகரை  உருவாக்கியிருக்கிறேன். நீங்கள் மூவரும் அங்குபோய் வாழலாம்’’ என்றார்.பிறகென்ன? மாலியவான் முதலான மூவரும் இலங்கையில்  குடியேறினார்கள்.(இதன் பிறகு, திருமணம் உட்பட பல நிகழ்வுகள் நடந்தேறின. அவைகளில் ஒன்று, ராவணன் பிறக்கக்காரணமாக இருந்தது.)

பிரம்மாவின் பேரனான விச்ரவஸ் முனிவரின், மகனான குபேரன் புஷ்பகவிமானத்தில் ஆனந்தமாகப் போய்க்கொண்டிருந்தான். அவனைப்பார்த்துப்  பொறாமை கொண்ட சுமாலி, தன் அரக்கர் குலமும் அதேபோல இருக்க வேண்டும் எனும் எண்ணத்தில், தன் மகளான கைகசி என்பவளை அழைத்து,  ‘‘நீபோய் விச்ரவஸ் முனிவரைவேண்டி அடை! குபேரனைப் போன்ற பிள்ளைகளைப்பெற்று, அரக்கர் குலம் தழைக்கச் செய்’’ என வேண்டினான்.  (இங்கு சொல்லப்பட்ட கைகசி வேறு; பரதன் தாயான கைகேயி வேறு)தந்தையின் வேண்டுகோளைச் செயல்படுத்தினாள் கைகசி. மூன்று ஆண்  குழந்தைகளையும் ஒரு பெண்குழந்தையையும் பெற்றாள் கைகசி. ராவணன்,கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை என்பவர்களே அவர்கள்.  பிரம்மாவின் பேரனான விச்ரவஸ் முனிவரின் பிள்ளைகளே அந்த நால்வர். அந்தநால்வரில் மூத்தவனான ராவணன் தவறுகள் செய்தபோது,  பாட்டனாரான மாலியவான் ராவணனைத் திருத்த எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால் அவை யாவும் பலனற்றுப்போயின.வாருங்கள்!  மாலியவான் செய்த தர்ம உபதேசத்தைக் கேட்கலாம் (பார்க்கலாம்)

ராமருடன் ஏற்பட்ட யுத்த களத்தில் முதல் நாள் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ராவணன், தலைகுனிந்தவாறு அரண்மனை திரும்பினான்.  படுக்கையில் படுத்தான்.அப்போது அங்கே வந்தார் மாலியவான். ராவணன் நிலையைக் கண்டு நடந்ததை ஒருவாறு யூகித்துக்கொண்டார். ‘‘ராவணா! என்ன ஆயிற்று? மன வருத்தத்தை முகம் காட்டுகிறது. கம்பீரமாக இருக்கும் உன் தோள்கள் கூட வாடிப்போயிருக்கின்றன. பெரும்  தவமுடைய நீ, ஒருநாளும் இவ்வாறு வருந்தமாட்டாயே! என்ன ஆயிற்று?’’ எனக்கேட்டார்பாட்டனாரான மாலியவான் கேட்ட கேள்விகளுக்கு  விரிவாகவே பதில் சொன்னான் ராவணன். முதல்நாள் போரில் தான் தோற்றதை விரிவாக எடுத்துரைத்தான்.பேரனுக்கு மாலியவான் அறிவுரை  சொல்லத்தொடங்கினார்.

‘‘ராவணா! உனக்கு எவ்வளவோ சொன்னேன். வீணாகக் கோபித்துக் கொண்டாய். உன்தம்பியான உத்தம விபீஷணன் சொன்ன நல்லவற்றையும் கேட்க  மறுத்தாய்; காரணங்களை ஆராயாமல், காரியத்தில் இறங்கி விட்டாய். உன் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. என்ன செய்வது? உன் சுற்றம். நீ  பெற்றபெருமை. நீ கற்றகல்வி. செல்வம். வெல்ல முடியாத உன் படைகள் என அனைத்தும் அழிந்து போவதை நீயே பார்க்க நேரிடும்.  சொன்னபேச்சைக் கேள்! திருந்து!’’ என அறிவுரை சொன்னார்.

கிளைவரு சுற்றம் வெற்றி கேண்மை நம்கல்வி செல்வம்
களைவருந் தானையோடும் கழிவது காண்டி என்றான்
(கம்ப ராமாயணம்)

என்ன செய்ய? விதி! மாலியவான் அவ்வாறு சொல்லி முடித்த அதே வேளையில் மகோதரன் அங்குவந்து, மாலியவானை ஏசி, ‘‘உன் தம்பியான  கும்பகர்ணனை ஒதுக்கி விட்டாயா என்ன?’’ என்று கேட்டு ராவணனை மேலும் போருக்குத் தூண்டி விட்டான்.அதைப்பிடித்துக் கொண்ட ராவணன்,  கும்பகர்ணனை எழுப்பிப் போருக்கு அனுப்பினான். கும்பகர்ணன் கதையும் முடிந்தது. கும்பகர்ணன் இறந்து, அதிகாயன் என்பவன் இறந்து, இந்திரஜித்து  போர்க்களம் புகுந்து படாதபாடு பட்டிருந்த நிலையில் தகவலறிந்த ராவணன் மிகுந்த மனவருத்தத்துடன், மேலே என்ன செய்யலாம் என்பதற்காக  ஆலோசனை செய்தான்.மாலியவான் அப்போதும் விடவில்லை. முன்பு சொன்னதை விட, விரிவாகவே உபதேசம் செய்தார்.

‘‘ராவணா! அனுமனின் செயல்கள் எல்லாம், நீயே பார்த்தாயல்லவா? இலங்கையை அவன் எரியூட்டியது உனக்குத்தெரிந்தது தானே! இலங்கையை  அப்படியே தூக்கிக்கடலில் வீசும் ஆற்றல் பெற்ற அனுமான், மேருமலையைக் கொண்டு வந்து இலங்கைமீது வீசினால் என்ன ஆகும்?‘‘இறந்தவர்கள் போக, இருப்பவர்களாவது உயிர் பிழைக்க வேண்டுமென்றால், சீதையை விட்டுவிட்டு தர்ம சிந்தனை கொண்ட ராமரிடம் அடைக்கலம்  புகுவதே வழி!‘‘(உன்னை வாலில் கட்டிய) வாலியை ஒரே அம்பால் மேல் உலகுக்கு அனுப்பியவர் ராமர். அணைகட்டிக் கடல் கடந்து இங்குவந்து,  இப்போது கும்பகர்ணனையும் வீழ்த்தி விட்டார். அப்படிப்பட்ட ராமரை, நீர்க்குமிழி போலக்குறைந்த ஆயுள்கொண்ட அரக்கர்களால் வெல்ல முடியுமா  என்ன? சீதையை விட்டு விடு’’ என நீளநெடுக உபதேசம் செய்தார்.

‘‘வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி
வேலையை வென்று கும்பகர்ணனை வீட்டினானை
ஆலியின் மொக்குளன்ன அரக்கரோ அமரில்                         வெல்வார்?
சூலியைப் பொருப்பினோடும் தூக்கிய விசயத்                        தோளாய்’’
 (கம்ப ராமாயணம்)

மாலியவான் கூறிய எதையும் மனதில் போட்டுக் கொள்ளவில்லை ராவணன். விளைவு? தெரிந்தது தானே! சுகேசன், மாலியவான், ராவணன் எனும்  மூவர் இங்கே இடம் பெற்றிருக்கிறார்கள். அனாதையாக விடப்பட்ட ஒரு தலைமுறை தெய்வ அருளால் உயர்நிலை அடைந்ததை விளக்குவது  ‘சுகேசன்’ கதா பாத்திரம். அவர்கள் அடைந்த வழியை உணர்ந்து உழைத்து (தவம்செய்து) உயர்நிலை அடைந்தது அடுத்த தலைமுறை. அடுத்த  தலைமுறையோ, அனுபவசாலிகளான முன்னோர்கள் சொன்ன நல்லவற்றைக் கேட்காமல், தவறுகள் செய்து தண்டனை பெற்றது. ஆம்! முன்னோரான  அனுபவசாலியான மாலியவான் சொன்ன அறிவுரை எதையுமே ஏற்காத ராவணன் வீணே வீழ்ந்தான்.ஏற்கிறார்களோ, இல்லையோ? அறவுரை கூறுவது  என் கடமை. என்பதை விளக்கும் கதாபாத்திரம் மாலியவான்.

(தொடரும்)

Tags : characters ,Maliyawan ,
× RELATED இசைக்கு வயது கிடையாது: வித்யாசாகர்