×

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்!

நீங்கள் கவலையில் இருக்கின்றீர்களா? கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்களுக்குக் கவலை வேண்டாம் என நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்கிறார். காலையில் எழும்பிய முதல் இரவில் தூங்கும் வரை நாம் ஒரு இயந்திரமாக நம் வாழ்வை ஒவ்வொரு நாளும் கழித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் தினசரி வாழ்விலே  ஒவ்வொரு நிமிஷமும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இதனால் நாம் அடைவது கவலை மட்டுமே.

‘‘ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் உயிர்வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும், உடைமையவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?’’ (மத்தேயு 6 : 25) என்கிறார் ஆண்டவர். வானத்துப் பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. ஆனால் நம் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். பணம் நம் வாழ்விற்கு தேவை தான். ஆனால் பணமே வாழ்க்கை என எண்ணி நம் வாழ்வை நாம் அழித்துக்கொள்ளக் கூடாது.

வானத்துப் பறவைகளுக்கே அவர் இவ்வாறு செய்யும் போது, தாயின் கருவிலே உருவாகும் முன்னரே நம்மை அறிந்த தேவன் அவருக்கு முன் வானத்துப் பறவைகளை விட நாம் உயர்ந்தவர்கள் அல்லவா? ‘‘கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?’’ (மத்தேயு 6 : 27) என்கிறார். எனவே கவலைப்படுவதை விட்டுவிட்டு நன்றியோடு கூடிய ஜெபத்திலே உங்களது விண்ணப்பங்களை ஆண்டவர் முன்வையுங்கள்.

எதிர்மறை எண்ணங்களை உங்கள் மனதிலே இருந்து தூக்கி எறியுங்கள். ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள். அவர் நமது கவலைகளைப் போக்குவார் என நம்புங்கள். உங்களது நம்பிக்கையைக் கண்டு நம் தேவனும் உங்கள்மீது மகிழ்ச்சிக் கொள்வார். நமக்கு எது தேவை என்பது நம் விண்ணகத் தந்தைக்கு தெரியும். ‘‘ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்’’ (மத்தேயு 6 : 33). நாம் அவருக்கு ஏற்புடையவற்றை நாடும்போது அவர் நம் வாழ்விற்கு தேவையானவற்றை அனைத்தையும் சேர்த்துக் கொடுப்பார். ‘ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றுள்ள தொல்லையே போதும்’’ (மத்தேயு 6 : 34)

ஒருவன் எதைச் செய்தாலும் அவன் அதைச் செய்வதற்கு முன் ஆண்டவரை முன்னிறுத்தியே அவருடைய சமூகத்திலே செய்ய வேண்டும். அப்போது அவரது பிரசன்னம் அதில் நிலைபெற்று இருக்கும். நீங்களும் ஆண்டவரது சித்தம் எது என்பதனை அப்போது அறிந்துக் கொள்வீர்கள். நாம் செல்ல வேண்டிய பாதைகளை அவர் செம்மையாக்குவார். அவை எவ்வித கரடுமுரடான பாதையாய் இருந்தாலும் தடைகளை நீக்கிப் போடுகிறவர் நமக்கு முன்பாக இருப்பார். எழுந்து பிரகாசியுங்கள். அந்த செயல் வெற்றியே என்பதனை அறிந்துக் கொள்வீர்கள். கவலையை மறந்து ஆண்டவரைப் போற்றுங்கள்.  உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.

- ஜெரால்டின் ஜெனிபர்

Tags :
× RELATED சுந்தர வேடம்