×

சுகவாழ்வு தருவார் சுப்ரமண்யன்

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளுள் முதலாவது படைவீடாக திகழ்கிறது திருப்பரங்குன்றம். இத்தலத்தில் 300 அடி உயரமும் இரண்டு கி.மீ. சுற்றளவும் கொண்ட குன்றின் மேல் குடைவரைக் கருவறையில் அருள்கிறார் முருகப்பெருமான். பரன் எனும் சொல் ஈசனைக் குறிப்பதாகும். லிங்க வடிவில் இருக்கும் இக்குன்று பரங்குன்றம் என அழைக்கப்பட்டது. பாடல் பெற்ற தலமாதலால் திருப்பரங்குன்றம் என்றாயிற்று. கருவறையில் தேவேந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் புரிந்து புதுமணக் கோலத்தில் முருகன் அருள்கிறார். எனவே இது திருமண வரம் தரும் தலமாக போற்றப்படுகிறது.

இத்தல முருகன் சுப்ரமண்யசுவாமி எனும் திருநாமம் கொண்டு அமர்ந்த நிலையில் அருள்கிறார். இடதுபுறம் தெய்வானையும், வலதுபுறம் நாரத முனிவரும் வீற்றிருக்கின்றனர். முருகப் பெருமானின் திருவுருவின் முன் அவரது வாகனங்களான யானை, ஆடு உருவங்களும் முருகனின் காவல் தெய்வங்களும் பாறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த யானை இந்திரனின் வாகனமான ஐராவதம் என்றும், அவன் மகளான தெய்வானையைப் பிரிய மனமில்லாமல் முருகப் பெருமானுக்குத் தொண்டு செய்ய வந்ததாகவும் ஐதீகம்.

பரங்கிநாதர், ஆவுடைநாயகி, கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், மகாலட்சுமி ஆகியோருக்கான ஐந்து சந்நதிகளும் ஐந்து குகைக் கோயில்களாக தனித்தனியே இருக்கின்றன. இத்தல பவளக்கனிவாய் பெருமாள் சித்திரை மாதம் மதுரை மீனாட்சி திருமணத்திற்கு 4 நாட்கள் முன்னதாகவே மதுரைக்குச் சென்று பின் திரும்புவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரசம்ஹார நிறைவிற்குப் பின் முருகப்பெருமான் தன் படைவீரர்களுடன் இத்தலத்தில் தங்கியிருந்ததாக புராணம் சொல்கிறது.

திருப்புகழ், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களில் இத்தல மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. குன்றின் அடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை முருகனின் கை வேலால் உண்டாக்கப்பட்டதாக ஐதீகம். இத்தலத்தின் தல விருட்சம் கல்லத்தி மரம். இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நதி இல்லை. சனி பகவான் மட்டும் மகாமண்டபத்தில் கோயில் கொண்டுள்ளார். மதுரைக்குத் தென்மேற்கே சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றம் உள்ளது.

Tags : Subramaniyan ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17...