×

ரத சப்தமி 2020 சிறப்புகள் : சூரிய வழிபாடு, விரதம் இருக்கும் முறையும்

பலவகையான உயிர்கள் வாழும் இந்த பூமிக்கு ஒளியாகவும், உயிராற்றலை வழங்கும் கோளாக சூரிய பகவான் இருக்கிறார். பழங்காலந்தொட்டே சூரியனின் மகிமையை உணர்ந்த உலகின் பல நாகரீகங்களை பின்பற்றிய மக்கள் சூரியனுக்கு பல வகையான விழாக்கள் கொண்டாடி வந்திருக்கின்றனர். அந்த வகையில் நமது நாட்டில் தை மாத வளர்பிறை காலத்தில் வரும் சப்தமி தினத்தில், சூரியனுக்கு கொண்டாடப்படும் ரத சப்தமி தினம் மற்றும் அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரத சப்தமி நாளில் ரத சப்தமி திருவிழா தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவில், திருப்பதி -திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில்களில் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏழு மலைகளைக் கொண்ட புனித தலம் திருப்பதி திருமலை என்பதால் ஏழு குதிரைகள் போல இதனை நினைத்து திருமலையில் ரதசப்தமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவது சிறப்பம்சமாகும். 108 திவ்ய தேசங்களில் முதன்மையான வைணவ தலமான ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் ரத சப்தமி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ரத சப்தமி தினத்தில் மேற்கொள்ளக்கூடிய ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது. ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராடவேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும் வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். குளித்து முடித்த பிறகு சூரிய பகவானை வழிபட்டு ஒரு மண் பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி சூரிய ஒளி அப்பாலில் விழும் படி சூரியனுக்கு நைவேத்தியம் வைத்து, சூரியனுக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.

எருக்க இலை ஏன் பயன்படுத்துகிறோம் என்று கேள்வி எழலாம். அதாவது மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். காலம் போய்க்கொண்டே இருக்கிறது பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம், தான் செய்த பாவம் என்ன எனவும், ஏன் இன்னும் தனது உயிர் பிரியவில்லை? ” என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வியாசர், “பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கூடப் பாவ செயல் ஆகிறது, எனவே அதற்கான தண்டனையாக இந்த அவஸ்தையை தாங்கள் அனுபவித்தே தீரவேண்டும் என்று கூறினார்.

உடனே பீஷ்மருக்கு,துரியோதனன் சபையில் பாஞ்சலியின் உடைகளை களைந்து துச்சாதனன் அவமானபடுத்திய போது அதை தடுக்காமல் இருந்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என்பது பீஷ்மரின் நினைவிற்கு வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா என்று பீஷ்மர் கேட்டதற்கு, வியாசர் “எப்பொழுது உங்களின் பாவத்தை உணர்ந்தீரா, அப்போதே அது அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணமல் இருந்த உங்களின் கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டெரிக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். இதற்கு எருக்க இலையை சுட்டி காட்டிய வியாசர், அர்க்கம்( எருக்கு) என்றாலே சூரியன் என்று பொருள். எனவே இதனை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை.அதேபோல் நைஷ்டிக பிரம்மச்சாரியான உங்களுக்கும் இந்த எருக்க இலையால் அலங்கரிக்கிறேன் என்றார். உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்.

பீஷ்மருக்கு யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் வேண்டுகிறார் தர்மர். அதற்கு பதிலளித்த வியாசர் சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரதசப்தமி நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்கடன் அளிக்கும் என்று கூறி அருளினார். ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீத்தார்கடன் அளித்த புண்ணியம் கிடைக்க பெறுகின்றனர் என்றும் அருளினார்.

மிகவும் அற்புதமான இந்த நாளில் தொடங்கும் தொழில், வியாபாரங்கள் பெருகும். பெண்கள் நற்கதியை அடைவார்கள். கணவனை இழந்த பெண்கள் இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன நமது புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்வது ஆன்மீக ரீதியான நற்பலன்களை தரும். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டிப்பவர்கள் பெருஞ்செல்வந்தர் ஆக உயர்வார்கள். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியமும், பலன்களும் உண்டு.முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். குல சாபங்கள் நீங்கும்.

Tags : Ratha Saptami ,
× RELATED நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்...