×

சீரடி சாய்பாபா பல்லக்கு ஊர்வலத்தின் சுவராசிய வரலாறு!

சீரடி உட்பட அனைத்து சாய்பாபா ஆலயங்களிலும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த புகழ்பெற்ற நிகழ்விற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு. பாபா வாழ்ந்த துவாரகாமாயியில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் சாவடி என்ற இடம் இருக்கிறது. சாவடி என்றால் பொது மக்கள் சந்தித்து கூடி பேசும் இடமாகும். அதாவது ஊர் சங்க கூட்டங்கள் அங்குதான் நடைபெறும். மேலும் வழிப்போக்கர்களும் இந்த சாவடியின் தங்கிச் சென்றனர். இந்த சாவடி இரண்டு அறைகளுடன் ஒரு வராண்டா மாதிரியான சிறு அறை அமைப்பைக் கொண்டது.

துவாரகாமாயி மசூதி பழுதடைந்த காரணத்தாலும், மண் கட்டிடம் என்பதால் மழை நேரத்தில் தண்ணீர் ஒழுகிய காரணத்தாலும், அங்கு தங்க முடியாத நிலை இருந்தது. சில சமயம் பலத்த மழை பெய்யும் போது மசூதி உள்ளே தண்ணீர் தேங்கி விடும். இதனால் பாபாவை அவரது பக்தர்கள் சாவடியில் வந்து தங்குமாறு கூறினார்கள். ஆனால் துவாரகாமாயில் இருந்து வெளியேற பாபாவுக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் பாபா பக்தர்கள் விடவில்லை. பாபாவை வற்புறுத்தி சாவடிக்கு அழைத்து சென்று விட்டனர். இதையடுத்து பாபா சாவடியில் இரவில் தங்கி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ஒருநாள் சாவடியிலும், மறுநாள் துவாரகாமாயியிலும் தூங்கும் பழக்கத்தை பாபா ஏற்படுத்தினார். ஒரு அறையில் பாபாவும் மற்றொரு அறையில் பக்தர்களும் படுத்துத் தூங்கினார்கள். இதன் காரணமாக துவாரகாமாயிக்கு கிடைத்த அதே மகிமை, மதிப்பு, மரியாதை எல்லாம் சாவடிக்கும் கிடைத்தது.

பாபா தெய்வமான பிறகு, சீரடியில் அவர் பாதம் பட்ட இடங்கள் எல்லாம், எப்படி புண்ணிய பூமியாக மாறியதோ, அது போல சாவடியும் புனிதப் பகுதியாக மாறியது. பாபா உயிருடன் இருக்கும் போது, துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு அவரை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மேள, தாளம் முழங்க அழைத்து செல்வார்கள். சில சமயம் பாபாவை வாணவேடிக்கை, பஜனை பாடல்கள் பாடியபடி அழைத்து செல்வார்கள். பாபாவின் வருகையை எதிர்பார்த்து சாவடி அலங்கரிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அங்குள்ள ஆசனத்தில் பாபா அமர்ந்ததும் அவருக்கு பக்தர்கள் கிரீடம் அணிவித்து பூ மாலைகளை சூடுவார்கள்.

அனைத்து ஆட்டம், பாட்டம் முடிந்து, பக்தர்கள் புறப்பட்டு சென்றதும், பாபா தாமே படுக்கையை சரி செய்து தூங்கச் சென்று விடுவார். 1918-ம் ஆண்டு பாபா மகாசமாதி அடையும் வரை இந்த பழக்கம் தொடர்ந்து நடந்தது. பாபா தெய்வமான பிறகும், இந்த பழக்கம் நின்று விடவில்லை. நாளடைவில் வியாழன் தோறும் இந்த பழக்கம் நடைமுறைக்கு வந்தது. இப்போதும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து பல்லக்குகள் கொண்டு வரப்பட்டு பல்லக்கு யாத்திரை நடத்தப்படுகிறது.

Tags : procession ,
× RELATED மேலூர் அருகே வல்லடிகாரர் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு