×

ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் உள்ள கோயிலை வலம் வந்த ஒற்றை தந்த காட்டுயானை: பக்தர்கள் நெகிழ்ச்சி

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் உள்ள கோயிலுக்கு நள்ளிரவு ஒற்றை தந்த யானை வந்தது. இதை பார்த்த பக்தர்கள் பழம் உள்ளிட்டவற்றை கொடுத்து நெகிழ்ச்சி அடைந்தனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் அருகே பாலபாடி மலையில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியின் நடுவே தர்மகொண்டராஜா பெருமாள் கோயில் உள்ளது. கிராமத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் காட்டுப்பகுதியில் உள்ள இந்த கோயிலுக்கு தினமும் ஒடுகத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பலர் இரவு நேரங்களில் வேண்டுதலுக்காக தங்கிவிட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு பலர் நேர்த்திக்கடனாக மாடுகளை தானமாக கொடுத்துள்ளனர். இதனால் அங்கு 50க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளது.இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோயில் அருகே அதிக சத்தத்துடன் பிளிறியபடி ஒற்றை தந்தத்துடன் கூடிய ஒரு காட்டுயானை வந்தது. அந்த யானை கோயில் எதிரே சிறிது நேரம் நின்றது. பின்னர் கோயிலை சுற்றி வந்தது. இதை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பின்னர்  யானைக்கு வாழைப்பழம், வெல்லம், தேங்காய் போன்றவற்றை ஒரு கூடையில் போட்டு கோயில் அருகே வைத்தனர். இவற்றை சாப்பிட்ட யானை சுமார் 3 மணி நேரமாக அப்பகுதிலேயே வலம் வந்தபடி இருந்தது. இதையறிந்த சுற்று வட்டார பகுதி மக்கள்  நள்ளிரவு என்றும் பாராமல் அங்கு வந்தனர். நீண்ட நேரமாக சுற்றித்திரிந்த யானை காட்டுக்குள் அமைதியாக சென்றுவிட்டது. ஒற்றை தந்தம் கொண்ட யானை ஜம்னாமரத்தூர் காட்டில் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,  ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள் மட்டும் பாலபாடி பகுதியில் உள்ள தர்மகொண்டராஜா பெருமாள் கோயில் அருகே இந்த காட்டு யானை வருவது வழக்கம். கடந்த ஆண்டும் வந்தது. அதேபோல் இம்முறையும் வந்துள்ளது. ஆனால் யானையால் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்றனர்….

The post ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் உள்ள கோயிலை வலம் வந்த ஒற்றை தந்த காட்டுயானை: பக்தர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில்...