×

பரந்தூரில் ரூ.20,000 கோடியில் புதிய விமான நிலையம் தமிழக வளர்ச்சிக்கான படிக்கட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் ரூ.20,000 கோடியில் புதிய விமான நிலைய திட்டம் தமிழக வளர்ச்சிக்கான படிக்கட்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி உள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் வளர்ச்சி பெற்ற – கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. நம் மாநிலத்திற்கு வரும் முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போதுள்ள சென்னை விமானநிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. விரிவாக்க பணிகளுக்கு பிறகு, அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமான நிலையம் ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும். எனவே, சென்னையில் கூடுதலாக புதிய விமான நிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ நிறுவனம் மூலம் தமிழக அரசு மேற்கொண்டது. இதற்காக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் 2 இடங்களில் ஒன்றான பரந்தூரில் (ஸ்ரீபெரும்புதூர் அருகே) புதிய விமான நிலையம் அமைக்கவும் 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. 2 ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்பு பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. தற்போதைய உத்தேச திட்டமதிப்பு ரூ.20,000 கோடி ஆகும். விமான நிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு, முன்னேற்ற அடையாளத்தை காண்கிற நிலையில், எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியை காட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. பரந்தூரில் அமைய இருக்கும் புதிய விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post பரந்தூரில் ரூ.20,000 கோடியில் புதிய விமான நிலையம் தமிழக வளர்ச்சிக்கான படிக்கட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Paranthur, Tamil Nadu ,CM G.K. Stalin ,Chennai ,Paranthur ,Sriepruthur ,Tamil Nadu ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...