×

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ராஜகோபுரம் : தமிழக அரசு சின்னம்

தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலய ராஜகோபுரம். மேலும், ஆண்டாளின் கருவறை விமானம் திருப்பாவை 30 பாடல்களைக் குறிக்கும் சுதைச்சிற்பங்களைக் கொண்டது. பெரியாழ்வாரின் தவப்பயனால் நள வருடம் ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தசியில் பூர நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமையன்று துளசிவனத்தில் அவருக்கு மகளாகக் கிடைத்தவள் ஆண்டாள்.

சித்ரா பௌர்ணமியன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்தபிறகே வைகயாற்றில் இறங்குகிறார். ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் எனத் தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் மணமாகாத கன்னியர்கள் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்தில் வடகிழக்கில் வடபத்ரசாயி திருக்கோயிலும், மேற்கில் ஆண்டாள் திருக்கோயிலும் அமைந்துள்ளன.

இங்குள்ள நந்தவனத்தின் துளசிமாடத்தில் உள்ள மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, வீட்டிற்கு எடுத்துச் சென்றாலோ செல்வம் சேரும் என பக்தர்கள் நம்புகின்றனர். பெரியாழ்வாருடன் ஆண்டாள் வாழ்ந்த வீடே, கி.பி.14ம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் திருக்கோயிலாக மாற்றப்பட்டது. 11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம், 196 அடி உயரமுடையது.

ஸ்ரீவில்லிபுத்தூர் உற்சவர் ரங்கமன்னார், ராஜமன்னார் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளை கோலத்தில் அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணிந்து காட்சியளிப்பார். மன்னாருக்கு தொடையழகு என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை என்றால் மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது காணக்காண இன்பம்தான். இத்தல இரண்டாம் பிராகாரத்தில் உள்ள கலைமகள் சிற்பத்தில் நாசியும், கால் பெருவிரல் நுனியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது சிற்பக் கலையின் சிறப்புக்கு ஓர் உதாரணம். தண்ணீர்ப்பஞ்ச காலத்தில்கூட இத்திருக்கோயிலின் முன்புறமுள்ள கிணற்றில் நீர் வற்றுவது இல்லை.

இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறியவும் முடிவதில்லை. கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி பூதேவி சமேத வடபத்ரசாயியை தரிசிக்கலாம். அவருடன் பிருகுமுனி, மார்க்கண்டேயர், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூர்யன், சந்திரன், மது கைடபர் போன்றோரும் காணப்படுகின்றனர். கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்காரவடிசல் எனும் பாயசமும் நிவேதிக்க நினைத்த ஆண்டாளின் ஆசையை ராமனுஜர் நிறைவேற்றியதால், ராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் போது ‘என் அண்ணன் அல்லவோ’ எனும் அசரீரியுடன் ஆண்டாள் விக்ரகம் முன்னோக்கி வந்து ராமானுஜரை வரவேற்றதாம்.

தினமும் விடியற்காலை ஆண்டாளின் சந்நதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். கோதையின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண்விழிப்பது இப்படித்தான்.ஆண்டாளின் திருமணத்துக்கு பெருமாளை விரைவாகச் சுமந்து வந்தவர் கருடாழ்வார். அதனால் அவரும் இங்கே மாப்பிள்ளைத் தோழராக பெருமாளின் அருகேயே வீற்றிருக்கிறார். ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும் இலை, பூக்களாலான கிளி தினமும் புதியதாகச் செய்யப்படுகிறது. அந்தக் கிளியை பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்யசாலிகளாகக் கருதப்படுகின்றனர். தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், ஆண்டாள் இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம்.

அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது. எண்ணெய்க்காப்புத் திருவிழாவின் பொது 61 வகை மூலிகைகளுடன் பல்வேறு பொருட்களுடன் 40 நாட்கள் காய்ச்சப்பட்ட ஏழுபடி தைலம் ஆண்டாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதை சர்வரோக நிவாரணி என்பர். மார்கழி எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஒருநாள் ஆண்டாளின் மூக்கருகே தங்கமூக்குத்தியைக் கொண்டு சென்றால் தானே அந்த மூக்குத்தி ஆண்டாளின் மூக்கில் ஒட்டிக்கொள்கிறது.

Tags : Government of Tamil Nadu ,
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...