×

வேதங்கள் போற்றும் நந்தா விளக்கு

விண்ணை முட்டும் ராஜ கோபுரம். மணிமாடக் கோவில் என்ற பெயர் பலகையை பார்த்ததுமே மெய் சிலிர்க்கிறது. இருக்காதா பின்னே? திருநாங்கூர் அருகே உள்ள பதினோரு திவ்ய தேசத்து  பெருமானும் ஒரே நாளில் கருட சேவை காண்பார்கள்.

அன்று இரவு ஒரு அமானுஷ்ய காற்று வீசும். அந்த காற்று வேறு எதுவுமில்லை சாட்சாத் திருமங்கை ஆழ்வார் தான் காற்றின் வடிவில் வந்து இந்த பதினோரு பெருமான் களையும் சேவிக்கிறார்.  இந்த அதிசயம் இன்று வரை நடக்கிறது. அதைக் காண பெரும் திரளாக கூட்டமும் கூடுகிறது. அமானுஷ்ய காற்று வீசியதும் திருமங்கை மன்னன் வந்து விட்டதாக மக்கள் கொண்டாடுவது, கண்கொள்ளா காட்சி. இப்படி அனேக அதிசயங்கள் உடைய திரு நாங்கூர் திவ்ய தேசங்களில் ஒன்று தான் இந்த மணி மாடக் கோவில்.

எனில் திருமங்கை மன்னன் தமிழை, உளமாற நேசிக்கும் வைணவர்களுக்கு மெய் சிலிர்ப்பதில் வியப்பொன்றும் இல்லையே. மெய் சிலிர்த்த படியே கோவிலுக்குள் நுழைகிறோம். ஓம் என்னும் பிரணவ வடிவில் இருக்கும் கருவறை விமானம்  பார்வைக்கு விருந்தாகிறது. இங்கு மணி மாடக் கோவிலில் பரந்தாமன் பிரணவ விமானத்தின் கீழ் தான் சேவை சாதிக்கிறான். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று ரூபங்களோடு. ஓம் என்னும் பிரணவத்தின் வடிவாக தெய்வம் இருக்கிறது என்று வேதம்  பேசும். ( ஓம் இதிப் பிரம்ம) இங்கு பிரணவ விமானத்தின் கீழ் அமர்ந்து தானே பரம்பொருள் என்று பரந்தாமன் சொல்லாமல் சொல்கிறான் போலும்.

 மேலும் ஓம் என்னும் பிரணவ மந்திரம் “ அ” “உ” “ம” என்ற மூன்று எழுத்துக்களால் ஆனது. அதைப் போலவே இங்கு பகவானும் மூன்று ரூபங்களில் காட்சி தருகிறான். இந்த மூன்று பெருமானையும் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்திருக்கிறார். முதலில் நந்தா விளக்கு பெருமான். வித்தியாசமான பெயர். இந்த பெயருக்கு பின்னே பல வேதாந்த ரகசியங்கள் உள்ளது. அதை அறிந்து கொள்வோமா.? நந்தா விளக்கு! ஆஹா என்ன அழகான ஒரு தமிழ் பெயர். அழகான இந்த பெயரில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருக்கிறது. “ பிரம்மா நாராயண: சிவச்ச நாராயண: காலச்ச நாராயண:” என்று சொல்கிறது வேதம். அதாவது பிரம்மாவாகவும் சிவனாகவும் இருப்பது அந்த நாராயணனே என்று உறுதியாக சொல்கிறது. ஒரு முறை சொன்னது திருப்தியாக இல்லை போலும் வேதத்துக்கு. அதனால் “ஸ பிரம்ம ஸ சிவ சேந்திர” என்று வேறொரு இடத்தில் சொல்கிறது. இரண்டு வாக்கியத்துக்கும் பொருள் ஒன்று தான். முதல் வாக்கியத்தில் இந்திரனும் அவன் தான் என்று இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.  
 
இப்படி அனைத்தும் தானே ஆகி நிற்கும் பகவான், பிரளயத்தில் ( உலகமே அழியும் போது) என்ன செய்கிறான்? அதையும் வேதமே சொல்கிறது. பிரளயத்தில் இந்த உலகத்தை தயிர் சாதத்தை போல விழுங்கி விடுகிறானாம். அப்படி அவன் இந்த உலகத்தை விழுங்கும் போது அவனுக்கு ஊறுகாயாய் இருப்பது மரண தேவன் தான் ( சிவன் என்றும் சொல்லுவதுண்டு) என்கிறது கட உபநிஷதம். இப்படி அவன் அனைத்தையும் உண்ட பிறகு அவனைத் தவிர வேறொன்றும் இல்லையாம். இதையும் வேதமே சொல்கிறது. “ எகோ நாராயணோ ஆசீத் ந பிரம்மா ந ஈசான:” என்று பிரளய காலத்தில் பிரம்மாவும் இல்லை சிவனும் இல்லை இவன் ஒருவனே இருந்தான் என்று அறுதியிட்டு கூறுகிறது வேதம்.

 இப்படி எல்லாம் தானே ஆகி தனக்கு ஒரு ஆதாரமும் இல்லாமல் இருக்கிறான் பரந்தாமன். மற்றொரு இடத்தில் வேதம் “ த்வமேவ பாந்த மனுபாதி சர்வ தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி” என்று மாலவனின் சோதி வடிவை  பேசுகிறது. அதாவது அவனை பூஜிப்பவர் அனைவரும் அவனைப் போலவே பிரகாசிக்கிறார்களாம். இவனது அருளால் தான் சூரியன் சந்திரன் அக்னி ஆகியவர்கள் பிரகாசிக்கிறார்களாம். ஆனால் அவர்களும்  இவன் முன்னிலையில் ஒளிருவது இல்லையாம். எப்படி கதிரவன் உதித்து விட்டால் நட்சத்திரங்கள் தெரிவதில்லையோ அது போலவே இவனது முன்னிலையில் யாரும் ஒளிர்வது இல்லை.

( ந தத்ர சூர்யோ பாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி:)

கண்ணன் பாண்டவ தூதனாக திருதராஷ்டிரனின் சபையில் நுழைகிறான். ஒரு திருக்கையினால் விதுரரையும் மற்றொரு கையினால் சாத்யகியையும் பிடித்துக் கொண்டு அருட் பெருஞ்சோதியாக எழுந்தருளினான்.  அந்த அரசவையில், தவத்தில் சிறந்த பீஷ்மர், த்ரோனர் கிருபர் போன்ற பல மகான்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே பெரிய பிரம்ம தேஜசொடு (தவத்தால் முகத்தில் தெரியும் ஞான ஒளி) இருப்பவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. (பீஷ்மரின் தவ வலிமையை பற்றி கண்ணனே பலமுறை பேசுகிறான்.) ஆனால் இத்தனை பேரும், கண்ணன் அரசவையில் நுழைந்த பிறகு பிரகாசிக்கவே இல்லையாம். சூரியன் வந்துவிட்டால் நட்சத்திரங்களுக்கு என்ன வேலை. இதை இப்படி அற்புதமாக வர்ணித்து சொல்வது வேதத்தை தொகுத்து வழங்கிய வியாசர்!. (சபாப்யாம் பிரவிஷத் கிருஷ்ண: ராஜ்ஞயம் மத்யே மஹாத்யுதி:)

இப்படி மூல பரம் ஜோதியாகி நின்ற பரம் பொருள் அல்லவா? அந்த பரந்தாமன்.  அனைத்துக்கும் தான் ஆதாரமாகி தனக்கொரு ஆதாரம் இல்லாமல் என்றும் இருப்பவன் இல்லையா? ஆகவே அவனை நந்தா விளக்கு அதாவது அணையாமல், ஒரு ஆதாரமும் இல்லாமல் என்றும் சுடர் விட்டு ஒளி வீசும் அற்புத விளக்கு என்று சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது.? அந்த நந்தா விளக்கின் பாதத்தை நாம் பற்றினால் நம் வாழ்வில் ஒளி ஏற்றி அதை பிரகாசமாக்குவான் என்பதில் என்ன சந்தேகம்.

அடுத்த பெருமான் அளத்தற் கரியான். யாராலும் அளக்க முடியாதவன் என்று பொருள். ஆம் வேதம் கூட இவனது பெருமையை இன்னது என்று இன்று வரை கண்டுகொள்ள வில்லை. “ஆனந்தம்” என்னும் அவனது ஒற்றை குணத்தை கணக்கு போட ஆரம்பித்தது வேதம்! ஒரு மனிதனின் ஆனந்தத்தின் அளவில் இருந்து கணக்கை ஆரம்பித்தது. ஆரம்பம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. கணக்கும் கடைசி வரை நன்றாகத் தான் வந்தது. நான்முகனின் ஆனந்தத்தின் அளவை வேதம் சரியாக சொல்லியே விட்டது. ஆனால் அதற்கு மேல் அதனால் பரம்பொருளான நாராயணனின் ஆனந்தத்தை அளந்து கூற முடியவில்லை.” எதோ வாசோ நிவர்தந்தே” என்று திணறுகிறது. இறுதியாக அந்த பரம்பொருளை யாரும் அளந்து கூற முடியாது என்று தனது தோல்வியை ஒப்புக் கொள்கிறது.

இந்த உலகத்தில் நாம் காண்பதெல்லாம் அந்த பரம்பொருளின் லீலையில் கால் பாகம் தான். மீதம் இந்த அண்டத்திற்கு அப்பால் விரிந்திருக்கிறது. அதை யாராலும் அளந்து கூற முடியாது என்று வேறு ஒரு இடத்தில் மீண்டும் வேதம் சொல்கிறது. ( ஸ பூமிம் விஷ்வதோ விருத்வான் அத்ய  திஷ்டத் தஷாங்குலம்.) இப்படி வேதங்கள் பல இடங்களில் நாராயணனின் கல்யாண குணங்களை அளந்து கூற முடியாது என்று ஒப்புக்கொள்கிறது. அதை நினைவு கூறும் விதமாக இங்கு பெருமான் அளத்தற்கு அரியான் என்ற திரு நாமத்தொடு காட்சி தருகிறான்.
 
அடுத்த பெருமாள் பத்ரி நாராயணன். இவர் தான் இந்தக் கோவிலின் மூலவர். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். (கோவிலின் தாயாரின் திருநாமம் “புண்டரீகவல்லி”.) யாருக்கு பூமா தேவியும் மகா லட்சுமியும் மனைவியாக இருக்கிறார்களோ அவனே முழு முதல் தெய்வம் என்று வேதம் திட்ட வட்டமாக கூறுகிறது. (ஹிரீச்ச தே லட்சுமீச்ச.....)  வேதம் சொன்னதே மெய் என்னுமா போல ஸ்ரீதேவியையும் பூமா தேவியையும் அருகில் அமர்த்திக் கொண்டு சேவை சாதிக்கிறான் பகவான். முகத்தில் அதே மோகன புன்னகை.

தட்சன் செய்த யாகத்தில் தாக்ஷாயணி அம்பிகை தனது இன்னுயிரை தியாகம் செய்ததை அறிந்த சிவ பெருமான் தட்ச யாகத்தை நாசம் செய்தார். அம்பிகையின் தேகத்தை எடுத்துக் கொண்டு கோர தாண்டவம் ஆடினார். அதுவும் , பதினோரு ரூபங்களோடு. ஈசன் பதினோரு வடிவெடுத்து பிரளய தாண்டவம் ஆடினால் வையம் தாங்குமா? உலகமே திண்டாடியது. அனைவரும் நாராயணனை சரணாகதி செய்தார்கள். அவன் இந்த உலகத்தை காக்க பிரணவம் என்னும் தேரில் ஏறி பூமிக்கு வருகிறான். வந்தவன் ஈசனுக்கு சமமாக தானும் பதினோரு ரூபத்தை எடுக்கிறான்.

தனது மோகன ரூபத்தை ஈசனுக்கு காண்பிக்கிறான். அவனது அமைதி நிலவும் முகத்தை தரிசித்த உடன் ஈசன் தனது கோர தாண்டவத்தை நிறுத்தி விட்டார். அவரது கோபமும் மாதவனின் மோகனப் புன்னகையில் கரைந்து போனது.  இது தான் இங்கு அந்த பரம்பொருள் வந்து அமர்ந்த கதை என்று சொல்கிறார்கள். இந்த கதை பூரண சத்தியம் என்பது போல ஈசனுக்கு காட்சி தந்த அதே அமைதி நிலவும் முகத்தோடு நாராயணானாக சேவை சாதிக்கிறான் பரந்தாமன்.  “மேல் ஒரு பொருளும் இல்லா மெய் பொருளாகி வில்லும் தாங்கி கால் தரை தோய” என்பார் கம்பர். அந்த மாலவனை மிஞ்சிய தெய்வம் இல்லை என்று பொருள். எல்லாம் தானே ஆகி, எல்லாவற்றுக்கும் ஆதாரமாகி தனக்கு ஒரு ஆதாரம் இல்லாமல் இருப்பதே பரம்பொருள். அந்த பரம்பொருளை யாரும் அளந்து கூற முடியாது.

மேலும் அது அமைதியின் பிறப்பிடமாக இருக்கிறது.  இந்த  அற்புத தத்துவத்தையே நந்தாவிளக்கு என்றும், அளத்தற்கு அரியான் என்றும், நர நாராயணன் என்றும் திருமங்கை ஆழ்வார் அற்புதமாக தமிழாக்கி விட்டார். அதாவது வேதங்கள் பல இடங்களில் சொன்ன தத்துவங்களை சுருக்கி இங்கு மணி மாடக் கோவில் பெருமானுக்கு பெயராக சூட்டி விட்டார். இப்படி திருமங்கை ஆழ்வாரால் அழகாக பாடப் பட்ட மணி மாடக் கோவில் மா மருந்தை அவர் சொன்ன பாசுரத்தை சொல்லி சேவிப்போமா?

“ நந்தா விளக்கே! அளத்தற் கரியாய்! நர நாரணனே! கருமாமுகில் போல்
எந்தாய் எனக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தா ரமந்தே னிசை பாட களிவண்டுமிழற்ற நிழல் துதைந்து
மந்தார நின்று மணமல்கு நாங்கூர் மணிமாட கோயில் வணங்கென் மனனே!”
(பெரிய திருமொழி 3-8-1)

* ஜி.மகேஷ்

Tags : Nanda ,Vedas ,
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...