×

மங்காத வாழ்வருளும் மாதங்கி நவராத்திரி

ரஜினிகாந்த் நடித்த தர்பார் ரசிகர்கள் மனதில் அல்லோலகல்லோலப்படுவதைப்போல் லலிதாம்பிகையின் தர்பார் ஒன்றும் பக்தர்கள் மனதில் அல்லோலகல்லோலப்படுகிறது.வட திருவானைக்கா என வழங்கப்படும் செம்(பியன்) பாக்கம் திருப்போரூருக்கு 7 கி.மீ. தொலைவில் உள்ளது. தொண்டை மண்டலத்திலேயே 41 கோயில்கள் கொண்ட சோழர்கள், நாயன்மார்கள், சித்தர்கள் வழிபட்ட ஞானபூமி. அருளே வடிவான திருமயிலை கற்பகாம்பாள் கனவில் பாலாம்பிகையாக பூஜ்ய ஸ்ரீ ராஜசேகர இளம் பூரண சிவம் ஸ்வாமிகளுக்கு 1982ல் காட்சியளித்ததால் தேவியை பாலாம்பிகையாக தன் வீட்டில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவர் தம் தூய வழிபாட்டின் விளைவாகவும் போரூர் ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், காஞ்சி மகாஸ்வாமிகள் போன்ற மகான்களின் அருளாசிகளாலும் 2008ம் ஆண்டு முதல் தனி ஆலயமாக உருவானது இந்த மகத்தான செம்பாக்கம் பாலா ஒளஷத லலிதா திரிபுரசுந்தரி சமஸ்தானம். ஆலய வலம் வருவோம். எளிய திறந்த வெளியில் நந்தவனம். முதலில் குருபாதுகை பிரதிஷ்டை.

அதைத் தொட்டு வணங்கி கடந்தால் இரு புறங்களிலும் ஐராவத யானைகள் தாங்கும் ஏழு படிகள் கொண்ட முகமண்டபம், இருபுறங்களிலும் துவார பாலகியர் வீற்றிருக்க சங்கநிதி, பதும நிதி, காமதேனு, கற்பக விருட்சங்களோடு கஜலக்ஷ்மி வீற்றிருக்கும் நுழைவுவாயில். முகமண்டபம் அரண்மனை போன்ற தோற்றத்தில் பாலையே முருகனாக, தட்சிணாமூர்த்தியாக, ராமனாக, கிருஷ்ணனாக சுதை வடிவில் காட்சியளிக்க மேலும் பல்வேறு தேவதேவியரின் சுதைச் சிற்பங்களும் இடம்பெற்று கண்களை கவர்கின்றது. அதைக் கடந்தால் பஞ்சவர்ண முகமண்டபம். அர்த்த மண்டபம், ஊஞ்சல் மண்டபம் போன்றவற்றைக் கடந்தால் பாலாம்பிகை தரிசனம்.

பாலாம்பிகை எனும் திருநாமத்தில் தேவி பல திருத்தலங்களில் எழுந்தருளியிருந்தாலும் இங்கு ஒன்பது வயது குழந்தைப் பருவ திருமேனியளாக நான்கு திருக்கரங்களுடன் சிறப்பான முறைப்படி எழுந்தருளியுள்ள முதல் தலம் அகத்தியர். லோபாமுத்திரை போன்றோர் வழிபட்ட காஞ்சியின் இரண்டாவது ஆவரண எல்லையான இத்தலத்தில் ஸ்ரீவித்யா குருமண்டல அசாத்ய ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை (ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தங்கோன், போதிற்பிரமன், புராரி, முரராரி, பொதியமுனி, காதிக்கொருபடை கந்தன், கணபதி, காமன் போன்ற தேவி உபாசகர்கள் அந்த ஸ்ரீசக்ரத்தைச் சுற்றிலும் திருவருட்பாலிப்பது சிறப்பு.) பாலாம்பிகையின் பின்னே கருவறையில் தருணி திரிபுரசுந்தரியின் அருட்கோல தரிசனம். உள்ளே ஈசான்ய மூலையில் திருவம்பலச் சக்கரம் மந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவள் வாலை மனோன்மணி. இச்சாசக்தி அம்சமாய் வீற்றிருப்பவள். கருவறையை விட்டு வெளியே வராமல் சிவத்தே கலக்கும் பொருட்டு அருளே உருவான கல்யாண சுந்தரி. குலசுந்தரியாய், வேண்டுவோர்க்கு கல்யாண வரமருளும் காமேஸ்வரியாய் செம்பொன் திருமேனியோடு அங்குசம், பாசம்,  கரும்புவில், புஷ்பபாணத்தோடு அருள்பவள்.

தேவியின் மூக்கில் ஜொலிக்கும் மூக்குத்தி அவளது அருளைப்போலவே பிரகாசிக்கிறது. இவளுக்கு மாவிளக்கு தீபமேற்றி சிவப்பு நிற மலர்மாலை அணிவித்தால் திருமணத் தடைகள் நீங்கும்.  ஸ்ரீவித்யா உபாசனையின் மூன்று மந்திர ரகசியங்களே மூன்று திரிபுரசுந்தரிகளாக பாலா திரிபுரசுந்தரி லகு வித்யை, தருணி திரிபுரசுந்தரி  பஞ்சதசாக்ஷரீ வித்யை, ஒளஷத லலிதா திரிபுரசுந்தரி  மஹா ஷோடஸீ வித்யை, கோலோச்சும் அருட்தலம். ஒளஷத லலிதா திரிபுரசுந்தரி 12 அடியில் நின்ற திருக்கோலம். பல்வேறு வகையான மூலிகைகள், பாணலிங்கங்கள், சாளக்கிராம மூர்த்தங்கள், ஆறாதார சக்கரங்கள், நரம்புகளுக்கு வெள்ளிக்கம்பிகள், எனக்கொண்டு பூஜ்ய ஸ்ரீராஜசேகர இளம்பூரண சிவம் ஸ்வாமிகளால் 9 வருட அருந்தவத்தோடு உருவாக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் முதல் மூலிகைத்திருமேனி. ஹரி, ஹர, பிரம்மன் போன்ற மும்மூர்த்திகளின் வடிவினள்.
தேவி ஸ்ரீசக்ரபதக்கம் அணிந்து ஸ்ரீசக்ர
விதானம் கொண்டு தங்க விமானத்தின் கீழ் பாசம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம் ஏந்தி காமேஸ்வரியாய் ராஜதர்பாரில் திருவருட்பாலிக்கிறாள். கலிதோஷங்களையும், நோய்கள் தீர்க்கும் தன்வந்தரியாகவும் இங்கு அம்பிகை அனுக்கிரகம் புரிகிறாள். தேவியை தரிசிக்க வளர்பிறை, தேய்பிறை (சுக்ல/கிருஷ்ண பக்ஷ) திதிநித்யா தேவிகளை படிக்கட்டுகளாகக் கொண்ட கட்டுமலை மேல் ஏற வேண்டும். தேவி தீப ஒளியில் பொலிந்து நிற்கின்றாள். தேவியின் திருமுன் வேப்ப மரத்தாலான மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவார சக்திகளாக மகா காளியும், மகா பைரவரும் உள்ளனர். தேவிக்கு எதிரேயுள்ள அர்த்த மண்டபத்தில் ஸம்பத்கரீ, அஷ்வாரூடா, மாதங்கி, வாராஹி போன்றோர் சுதை வடிவில் தரிசனமளிக்கின்றனர். தேவிக்கு நேர் எதிரே ஸ்படிக லிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதனருகே பிரார்த்தனைப் பெட்டி உள்ளது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதி அதில் போட்டால் அது நிறைவேறும் அற்புதம் இங்கு நிகழ்கிறது.

சர்வலோக மகாராணியான ஒளஷத லலிதா திரிபுரசுந்தரி அவளது பட்டத்து இளவரசியான பாலா, மந்த்ரிணியான ராஜமாதங்கி, சேனா நாயகியான மஹா வாராஹியுடன் உற்சவர்களான பாலஸ்கந்தர், ரமா வாணி ஸமேத லலிதாம்பிகை, பைரவர் போன்றோருடன் இத்தலத்தில் அருள்கிறாள். ஆடி மாத வாராஹி நவராத்திரி, புரட்டாசி மாத சாரதா நவராத்திரி, தை மாத மாதங்கி நவராத்திரி மற்றும் சித்திரை மாத வஸந்த நவராத்திரி போன்ற
அம்பிகைக்குரிய நான்கு நவராத்திரிகளும் இத்தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வசந்த நவராத்திரியின் போது முதல் நாள் குருபாதுகா ஆவரண பூஜை, நவாவரண மகாயாகம், திருக்கல்யாணம், பட்டாபிஷேக வைபவம் போன்றவை மிக விமரிசையாக நடைபெறும்.
வசந்த நவமியன்று பாலா திரிபுரசுந்தரி பண்டபுத்திரர்கள் 30 பேர்களையும், திதிநித்யா தேவியர் பண்டாசுரனின் சேனையின் பிரதான 15 அசுரர்களையும், வாராஹி விஷுக்ரனையும், மாதங்கி விஷங்கனையும். லலிதா பண்டாசுரனையும் வதம் செய்யும் நிகழ்வு இத்தலத்துக்குரியதே ஆகும்.

வதம் செய்வதற்கு முன்பு பாலா, மாதங்கி, வாராஹி போன்றோர் கருவறையிலிருந்து ஒய்யாளி ஆடியபடியே லலிதாம்பிகையை வலம் வந்து வதம் முடிந்து அவள் திருவின் முன் அமர்வதைக் காணக் கண்கள் கோடி போதாது. லலிதாம்பிகை பண்டாசுரனை வதம் செய்து திரும்பும்போது பக்தர்களின் லலிதா ஜய ஜய கோஷம் விண்ணை முட்டும். அதன்பின் தேவியின் முன் கண்ணாடியை வைத்து சாயா அபிஷேகம் எனும் சாந்தி திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி, வசந்த தசமியன்று ராஜதர்பார் தரிசனம், சிவராத்திரியன்று 4 கால பூஜைகள் போன்றவை விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் காலை மகா அபிஷேகம், மாலை பாலா ஊஞ்சல் சேவை, ஸ்ரீசக்ர நவாவரண பூஜை, மூலவர் பாலா, தருணி, ஒளஷதலலிதா சர்வாலங்கார தரிசனம், 27 நட்சத்திர தீபாராதனை தீர்த்த பிரசாதம், அன்னதானம் போன்றவை இங்கு விசேஷமாக நடைபெறுகிறது.

மாதங்கி நவராத்திரியையொட்டி இத்தல ராஜமாதங்கிக்கு 10ம்ஆண்டு விழா 24.1.2020 முதல் 03.02.2020 வரை மாணவ மாணவியரின் கல்வி அபிவிருத்தி மேன்மைக்காக வித்யா அபிவிருத்தி சங்கல்ப ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது, 26.01.2020  அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீபாலா, ராஜமாதங்கி ஆவரணபூஜைகளும் நீலசரஸ்வதி,தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர். பாலா அஷ்பேத்திர பூஜைகளும், 2.2.2020 அன்று மூலவர்க்கு பஞ்சவர்ண புஷ்பசர்வாபரண அலங்காரமும் நடைபெறும்.பக்தர்கள் மாவிளக்கு தீபம், நெய் தீபம், 26 திதிநித்யா முக்கோண தீபம், வாசனை பூக்களால் அர்ச்சனை, அலங்காரம், குழந்தை பிறந்த தின எண்ணிக்கையில் தீபமேற்றி இனிப்பு நிவேதித்து தானமளித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை புரிகின்றனர். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பர். இங்கு தெய்வமே குழந்தையாகி அருள்வதால் கொண்டாட்டத்திற்குக் கேட்கவும் வேண்டுமோ? திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு பாதையில் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. ஆலயம் காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு MV.ரவிக்குமார் 9789921151.

ந.பரணிகுமார்

Tags : faint ,
× RELATED ஏடிஎம்மில் மயங்கி விழுந்து முதியவர் பலி