ஊட்டி : கோத்தகிரி லாங்வுட் சோலை அழகிய வனப்பகுதிக்கு குயின்ஸ் கெனோபி எனப்படும் இங்கிலாந்து நாட்டின் பசுமை குடை அங்கீகாரம் கிடைத்துள்ளது. கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள லாங்வுட் சோலை சுமார் 250 ஏக்கர் பரப்பில் உள்ள ஒரு அழகிய வனப்பகுதி. சுமார் 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதுடன், பல்லுயிர்ச்சூழல் மையமாகவும் உள்ளது. இந்நிலையில், தற்போது காமன்வெல்த் நாடுகளின் குயின்ஸ் கெனோபி என்ற இங்கிலாந்து அரசின் பசுமை குடை அங்கீகாரம் லாங்வுட் சோலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய அங்கீகாரம் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இங்கிலாந்தின் காலனி நாடுகளாக இருந்த நாடுகள் அனைத்தும் காமன்வெல்த் நாடுகள் என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. தற்போது நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றுள்ளது. அதுபோல, சுற்றுச்சூழல் துறையில் லாங்வுட் சோலை பகுதிக்கு, பாதுகாக்கப்பட வேண்டிய சதுப்புநிலம் என்னும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் செயலர் கே.ஜே.இராஜூ கூறுகையில்,“லாங்வுட் சோலை வாட்ச் டாக் கமிட்டி எனப்படும் இந்த குழு கடந்த 25 ஆண்டுகளாக வனத்துறையுடன் இணைந்து இந்த காட்டை பாதுகாத்து வருகிறது. மேலும், ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை முகாம்கள் நடத்தி சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம், லாங்வுட்டை ஒரு சுற்றுச்சூழல் கல்வி மையமாக மாறியுள்ளது. இந்த உலக அளவிலான அங்கீகாரம் பாதுகாப்பு குழுவினரின் அர்ப்பணிப்பிற்கும், தியாகத்திற்கும் கிடைத்த ஒரு பரிசு’’ என்றார். மேலும், லாங்வுட் சோலை வனப்பகுதியை உலக அளவில் பல்லுயிர் சூழல் மையமாக மாற்றுவதற்கு ரூ.5 கோடியே 25 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன்மூலம், லாங்வுட் சோலை வரும் காலங்களில் பல்லுயிர்ச்சூழல் ஆய்வு மையமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் முதன் முறையாக கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு மட்டுமே குயின் கெனோபி என்னும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….
The post கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு இங்கிலாந்து நாட்டின் பசுமை குடை அங்கீகாரம் appeared first on Dinakaran.