×

போடிமெட்டு பகுதி சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டும்-சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

போடி : தமிழகத்தில் மலைகளின் ராணியாக ஊட்டி, இளவரசியாக கொடைக்கானல் திகழ்கிறது. சீசன் நாட்கள் மட்டுமா? இங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகள் படையெடுத்தபடியே உள்ளனர். அதனைப்போன்றே தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரிரயாக திகழ்கிறது. இங்குள்ள போடிமெட்டு பகுதியை மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் அருவிகள், மலைகள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு மலை தொடர்ச்சியில் தமிழகம் மற்றும் கேரள பகுதியினை இணைக்கும் போடி மெட்டு பகுதி உள்ளது. போடி மொட்டு முந்தல் மலை அடிவாரத்தில் இருந்து சரியாக 21வது கிலோ  மீட்டர் தொலைவில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் இந்த மலைச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை விவசாயிகளுக்கும் இரு மாநில உறவுகளுக்கும் அனைத்து வர்த்தகத்  தொடர்புகளுக்கும், எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்  எதிர்காலத் திட்டமாக கொண்டு முன்னெச்சரிக்கையாக அமைக்கப்பட்டது. இந்த  சாலையினை 1962ம் ஆண்டு  அப்போதைய முதல்வராக இருந்த காமராஜர் துவக்கி வைத்து கேரள, தமிழகம் ஆகிய இரு மாநிலத்திற்கும் அர்ப்பணித்தார். அதன் பின்னரே இரு மாநிலங்களுக்கிடையே உறவுகள் மற்றும் போக்குவரத்து, வர்த்தகம் என அனைத்தும்  மேம்பட்டு உலகளவில் உயர்ந்துள்ளது. தமிழகப் பகுதி உட்பட இடுக்கி மாவட்டத்தில் 1.50 ஏக்கர் அளவில் ஏலத்தோட்ட விவசாயமும் மற்ற பயிர்கள் நிலப்பரப்புகள் அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான போடிமெட்டு மற்றும்  கேரள மலை பகுதியான இடுக்கி மாவட்டம் பகுதிகளில் தேயிலை, ஏலம் ,மிளகு, காப்பி, ஆரஞ்சு உள்ளிட்ட பணப்பயிர்கள் ஆண்டுதோறும்  விளைவிக்கப்படுகிறது. இதனால், தமிழக மற்றும் கேரள மாநிலங்களுக்கு இந்த வர்த்தகத்தின் வாயிலாக 4 சதவீதம் வரி கிடைப்பதால் வருமானத்தை அதிகம் ஈட்டி தரும் மலைப் பகுதியாக சிறந்து விளங்கி வருகிறது. தொழிலாளர்களும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட ஜீப், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மேற்படி தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்வதும் இதே சாலையில் தான். மேலும், வெளிநாடுகளில் இருந்தும் உள்நாடுகள் வரையில் சுற்றுலா பயணிகள் போடி மெட்டு வழியாக மூணாருக்கும், கேரளப் பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் செல்வதும் இயற்கை வனப்பு கொண்ட இந்த மலைச்சாலையில் வழியே தான். இந்த மலைப்பகுதிகள் முழுவதுமே வருடத்தில் 8 மாதங்கள் சாரல்மழையாக துவங்கி கனமழையாக பெய்யும். போடிமெட்டு புலியூத்து மெட்டை கடந்து கேரளா மலைச்சாலையான பூப்பாறை வரையில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி ரசிக்கும் மலைப்பகுதியாக உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘உலகத்திலேயே அதிகளவில் ஏலக்காய் விவசாயம் நடப்பது கேரள மாநிலம் இடுக்கி  மாவட்டத்தில் தான். இங்கு விளையக்கூடிய ஏலக்காய் வளைகுடா மற்றும் ஆசியா  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஏலத்தோட்ட மராமத்து வேலைகளுக்கு  தமிழகத்திலிருந்து 800 க்கும் மேற்பட்ட ஜீப்களில் சுமார் 6 ஆயிரம் தோட்ட  தொழிலாளிகள் தினமும் கம்பமெட்டு மற்றும் குமுளி வழியாகவும் போடி மெட்டு  வழியாகவும் சென்று வருகின்றனர். இதனாமல், தேவி மாவட்ட விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. தோட்ட  தொழிலாளிகள் மட்டுமின்றி டிரைவர்கள், ஒர்க் ஷாப் தொழிலாளிகள் என  நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் வரை பிழைப்பு நடத்தி  வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அடிப்படை ஆதாரமாக இந்த போடிமெட்டு சாலை  உள்ளது. இப்பகுதியில் அருவிகள், மேகக் கூட்டங்கள், பசுமையான மலைப்பகுதியை பார்த்தால் பார்த்து கொண்டே இருக்கலாம். தமிழக சுற்றுலாத்துறை சீரிய முயற்சி மேற்கொண்டு, சிறப்புக் கவனம்  செலுத்தினால் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக இந்த போடிமெட்டு  மலைப்பகுதி மாறும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை’’ என்றார்….

The post போடிமெட்டு பகுதி சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டும்-சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bodimetu ,Bodi ,Tamil Nadu ,Ooty ,Kodaikanal ,
× RELATED கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்