×

ஸ்ரீரங்கம், திருவையாறு உள்பட டெல்டா முழுவதும் மக்கள் குவிந்தனர்; காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு கோலாகல கொண்டாட்டம்: பெண்கள் புனித நீராடி, மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்

திருச்சி: காவிரி கரையோரப்பகுதிகளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. காவிரி ஆறு தமிழகத்தில் கால் பதிக்கும் ஒகேனக்கல்லில் இருந்து வங்க கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.இந்நாளில் மக்கள் காவிரியில் புனித நீராடி தங்கள் இஷ்ட தெய்வங்களையும், குலதெய்வங்களையும் வழிபட்டு காவிரி தாயை வணங்குவர். மேலும் புதுமண தம்பதிகள்  திருமணத்தின் போது அணிந்திருந்த மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிபடுவார்கள். பெண்கள் அனைவரும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி  மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வர். அதேபோல், கன்னிபெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி காவிரி தாயை வழிபட்டு மஞ்சள் கயிறுகளை கட்டி கொள்வர். இன்று ஆடிப்பெருக்கு விழா காவிரி கரைகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.திருச்சி ரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் புதுமண தம்பதிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், வயது மூத்த பெண்கள் என அனைவரும் அதிகாலையிலேயே ஆற்றுக்கு வந்தனர். ஆற்றில் புனித நீராடி, வாழை இலை போட்டு அதில் பச்சரிசி, மா, கொய்யா, வாழைப்பழம் உள்ளிட்ட 9 வகை பழங்கள், பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு, காதோலை, கருகமணி, கரும்பு வைத்து காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்தினர். பின்னர் தாலி பெருக்கும் விதமாக ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு மாற்றி அணிந்து கொண்டனர். அதேபோல, புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடுகள் செய்து, புதிய தாலி கயிறு மாற்றி கொண்டு, திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.மாநகராட்சி சார்பில் அம்மா மண்டபம் படித்துறையில் பழைய துணிகளை போட தொட்டிகள், உடை மாற்ற இரு பாலருக்கும் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று காலை ஆய்வு செய்தார். மேலும் ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்வதால் தீயணைப்பு வீரர்கள், மற்றும் மீட்புத்துறை சார்பில் வீரர்கள் ரப்பர் படகு மற்றும் மிதவை ஜாக்கெட்டுகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.  கூட்டம் அதிகரித்ததால் மாம்பழச்சாலை, பெரியார்நகர் மேம்பாலம், திருவானைக்காவல் , ரங்கம் காந்தி ரோடு வழியாக பேருந்துகள் சென்று வந்தது.இதேபோல் ஓடத்துறை, தில்லைநாயகம் உள்ளிட்ட காவிரி படித்துறை பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். மேலும் திருச்சி மாவட்டத்தில் காட்டுப்புத்தூர், தொட்டியம், முசிறி, முக்கொம்பு, ஜீயபுரம், திருப்பராய்த்துறை காவிரி கரைகளில ஆடிபெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டம், திருவையாறு புஷ்பமண்டப படித்துறைக்கு அதிகாலை 5.30 மணிக்கே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. காவிரியில் நீராடிய அனைவரும் ஐயாறப்பரை தரிசனம் செய்தனர். கும்பகோணம், தஞ்சையில் கல்லணை கால்வாய் படித்துறையில் திரளானோர் திரண்டு காவிரி தாயை வழிபட்டனர். இதேபோல் திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், திருவிடைமருதூர் காவிரி படித்துறைகளில்  ஆயிரக்கணக்கானோர் காவிரித் தாயை வழிபட்டு ஆடிபெருக்கை கோலாகலமாக கொண்டாடினர்.நாகையில் உள்ள புதிய கடற்கரையில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், குளங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு வழிபாடு நடத்தினர்.  திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் பக்தர்கள் படையலிட்டு வழிபாடு நடத்தினர். மேலும் நன்னிலத்தில் உள்ள வெட்டாறு, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் உள்ள பாண்டவையாறு, பாமணி ஆறு, கோரையாறு, திருவாரூரில் உள்ள வாளவாய்க்கால், கமலாலய தெப்பக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் காவிரி தாய்க்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். கரூர், தவிட்டுபாளையம், நெடூர், மாயனூர், திருமுக்கூடலூர், குளித்தலை, லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபட்டனர். தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து ஆற்றில் விட்டனர்….

The post ஸ்ரீரங்கம், திருவையாறு உள்பட டெல்டா முழுவதும் மக்கள் குவிந்தனர்; காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு கோலாகல கொண்டாட்டம்: பெண்கள் புனித நீராடி, மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர் appeared first on Dinakaran.

Tags : Srirananga ,Thiruvayaru ,Kavir ,Addiper ,Trichy ,Kaviri ,Adipperu ,Audi ,Sriranangam ,Adippar ,Dinakaran ,
× RELATED திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்