×

தை அமாவாசை நாளில் இதை செய்ய மறக்காதீர்கள்!!

தை மாதத்தில் வரும் அமாவாசைக்கு எப்போதும் சிறப்பு அதிகம். மகர ராசியில் சூரிய பகவானோடு சந்திரன் சேரும் இந்த அற்புதமான தினமே தை அமாவாசை நாளாகும். இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதன் பயனாக வாழ்வில் நாம் பல நன்மைகளை பெறலாம்.

மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை காட்டிலும் ஆடி அம்மாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் சிறப்பை பெறுகிறது. ஆடி அமாவாசை நாளில் பித்ரு லோகத்தில் இருந்து வரும் நமது முன்னோர்கள் ஆறு மாத காலம் இங்கிருந்து நம்மை ஆசிர்வதித்து பின் தை அமாவாசை அன்று நமது மனப்பூர்வமான வழிபாட்டினை ஏற்றுக்கொண்டு முழு மனதோடு நம்மை ஆசிர்வதித்து பித்ருலோகம் செல்கினறனர் என்று கூறுகிறது ஆன்மிக நூல்கள்.

சூரிய பகவான், தந்தையை குறிக்கும் கிரகம் என்பதால் அவரை பிதுர் காரகர்’ என்றும், சந்திரன், தாயை குறிக்கும் கிரகம் என்பதால் அவரை ‘மாதுர் காரகர்’ என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இருவரும் இணையும் அம்மாவாசை நாளானது பொதுவாகவே முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.

தை அமாவாசை நாளில் நாம் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய தர்ப்பணம், திவசம் போன்றவற்றை செய்வதன் மூலம் ஏழேழு தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்களை மகிழ்விக்க முடியும். இதன் மூலம் நமது வழிவரும் பிள்ளைகளுக்கும் நமக்கும் எண்ணிலடங்கா பல நன்மைகள் ஏற்படும். தர்ப்பணம் கொடுக்கும் அளவிற்கு வசதி இல்லாதவர்கள் நமது முன்னோர்களை நினைத்து காகத்திற்கு உணவளிப்பது, பசுவிற்கு அகத்தி கீரை கொடுப்பது போன்ற காரியங்களை செய்யலாம். இந்த நன்னாளில் குலதெய்வத்தை வழிபடுவது மேலும் சிறப்பை தரும்.

லட்சக்கணக்கான மக்கள் தை அமாவாசை நாளில் ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக கூடுவர். திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி போன்ற இடங்களிலும் மக்கள் அதிகம் கூடுவர். நெல்லையப்பர் கோயிலில் போன்ற சில திருத்தலங்களில் தை அமாவாசை நாளில் லட்ச தீபம் ஏற்றுவது வழக்கம்.

Tags : Thai ,
× RELATED சென்னை எழும்பூர் தாய் சேய்...