×

தை அமாவாசையில் லட்சதீபம்

திருநெல்வேலி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன.
 
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
 
இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்ந்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப் பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது. சக்தி பீடங்களுள் இத்தலம் காந்தி பீடமாகத் திகழ்கிறது.
 
நெல்லையப்பர் லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும். காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இக்கோயிலில் காந்திமதி அம்பாள், தன் கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சந்நதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் வகைவகையான நைவேத்யங்களை சிவன் சந்நதிக்குக் கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில் எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம்.

முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை
நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.  
தமிழ் நாட்டில் இறைவன் சிவபெருமான் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் சுமார் 14 ஏக்கர் நிலப்பரவளவில் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோயில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயரில் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சந்நதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
 
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தியைக் காணலாம். அடுத்துள்ள கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். மூலவரைக் காண்பதற்கு முன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம்.
  மூலவரைச் சுற்றி 3 பிராகாரங்கள் உண்டு. முதல் பிராகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல கோஷ்ட மூர்த்திகளாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை நாம் காணலாம். கோவிந்தப் பெருமாள் சந்நதியும் சிவனுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.இரண்டாவது பிராகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிராகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
 
மூன்றாவது பிராகாரம் மிகப் பெரியதாகவும் அகலமாகவும் அமைந்துள்ளது. இப்பிராகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நதி செல்ல வழி உள்ளது. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நதியில் இருந்து அப்படியே வெளியேறவும் வழி உண்டு.மூன்றாவது பிராகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஒரே கல்லில் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நாயினார் என்னும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.
 
கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகளுடனும், நடுவில் நீராழி மண்டபத்துடனும் இந்த தெப்பக்குளம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிராகாரங்கள் உண்டு. முதல் பிராகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சந்நதிகள் அமைந்துள்ளன. கோவிந்தராஜப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
 
இக்கோயிலில் உள்ள ஜுரதேவர் சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் ஜுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் தாமிரசபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் ‘தாமிர சபாபதி’ என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. இச்சபையின் உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது.பின்னால் உள்ள நடராஜர் சிலாரூபத்தில் சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார்.
 
மற்ற கோயில்களைப் போல மார்கழி மாதம் விடியற்காலையில் இவ்வாலயம் திறப்பதில்லை. மாற்றாக கார்த்திகை மாதத்தில் காலை 4 மணிக்கெல்லாம் கோயில் தரிசனத்திற்காகத் திறக்கப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்களில் இறைவனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.இக்கோயிலில் தினசரி பூசைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 10 நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும். மேலும் இங்கு ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று பிற திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனிப் பெருந்திருவிழாவின் நான்காம்நாள், சுந்தரர் குருபூஜை, தை அமாவாசையன்று கொண்டாடப்படும் லட்சதீபவிழா போன்ற மூன்று நாட்களிலும் அறுபத்துமூவர் திருவுலா வருவது வழக்கம்.

மேலும், திருவாதிரைப் பெருவிழாவில் தாமிரசபையில் ஈசன் நடனமாடும் போது சபையின் இரு பக்கங்களிலும் அறுபத்துமூவரருடன் காந்திமதி அன்னையும் நின்று அத்திருக்கூத்தை ரசிக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது.இத்திருத்தலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது., சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது. 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம். இத்தல தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.
 
தமிழ்நாட்டின் முக்கிய நகரமான திருநெல்வேலி மாநகரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலுமிருந்து பேருந்து, ரயில் பயண வசதிகள் அதிக அளவில் உள்ளது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து, திருநெல்வேலி நகர்ப் பகுதிக்கு நகரப் பேருந்து வசதி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. கோயில் வாசலிலேயே இறங்கிக் கொள்ள முடிகிறது.இத்திருக்கோயிலில்  தை அமாவாசை
தினத்தன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில் முழுவதும் ஒளிச்சுடர்களாக இருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிராகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.
    
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை அமாவாசை தினத்தன்று சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள பிதுர் கட்டத்திலும், அங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடி விட்டு, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பதாக ஐதீகம். விபத்துகளில் மரணம் அடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் துன்புறுவோருக்காகவும் அங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

தர்ப்பணத்திற்கு ஏற்ற தலங்கள்


அக்னி தீர்த்த கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்ச நதிக்கரை ஆகியவை பித்ரு பூஜைகளுக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவை தவிரவும் நமது பகுதிகளில் உள்ள பல்வேறு தலங்களிலும் பித்ரு கர்மாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

Tags : Laxatiepam ,moon ,
× RELATED கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழா அறக்கட்டளையினர் ஆலோசனை