×

தை வெள்ளிக்கிழமை விசேஷ வழிபாடு

அம்மனின் சக்தி பீடங்களில் காஞ்சி காமாட்சி ஆலயம் காமகோடி பீடமாகத் திகழ்கிறது. இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் உள்ளது. இத்தலத்தில்தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்து, புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததால்தான் ராமர் முதலானோர் பிறந்தனர் என்கிறது இத்தலப் புராணம்.

சக்தி பீடங்களில் இது மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் அம்பிகை காட்சி தருகிறாள். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு. தை மாத வெள்ளிக்கிழமைகளிலும், செவ்வாய்க்கிழமைகளிலும் காமாட்சி அம்மனுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் அமைந்திருக்கும் ‘தபஸ் காமாட்சி’யை தரிசிப்பதும் முக்கியமானது.

- எஸ்.கிருஷ்ணஜா

Tags : Thai ,
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...