×

தெளிவு பெறு ஓம்

* ஜாதி, மதம், மொழி, இனம் என அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல ஒரு பூரணத்துவமான மனிதரை இதுவரை இறைவன் பிறக்க வைக்காதது ஏன்?  ஆர். விநாயகராமன், திசையன்விளை. 

உங்கள் எண்ணம் தவறானது. நீங்கள் குறிப்பிட்ட ஜாதி, மதம், மொழி, இனம் என அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் மனிதர்களை இந்த பூமியில் இறைவன் அவ்வப்போது பிறக்கவைத்துக் கொண்டுதான் இருக்கிறான். “நவோ நவோ பவதி ஜாயமான.” என்கிறது வேதம். அதாவது ஒவ்வொரு காலத்திலும் அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு புதிது புதிதாக மஹநீயர்கள் (மகாத்மாக்கள்) தோன்றிக்கொண்டிருப்பார்கள் என்பது இதன் பொருள்.

வேதவாக்கு என்றுமே பொய்த்ததில்லை. இப்படிப்பட்ட உத்தமர்கள் அவ்வப்போது தோன்றி இந்த உலக மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம் மகான்கள் என்று போற்றுகிறோம்.  ஸ்ரீராமபிரான், கிருஷ்ண பரமாத்மா, இயேசு கிறிஸ்து, ஆதி சங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீ ராகவேந்திரர், பகவான் சாயிபாபா என இவர்கள் எல்லோருமே சாதாரண மனிதர்களாக வாழ்ந்து காட்டியவர்கள். தங்களுடைய வாழ்க்கை முறை மூலம் இந்த உலகை நல்வழிப்படுத்தியவர்கள். அவரவர் வாழ்ந்த காலத்திற்குத் தகுந்தாற்போல், அன்றைய மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு தங்களது கருத்துக்களைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தியவர்கள். அவர்கள் வாழும்போது நாம் அவர்களை கடவுளாக எண்ணுவதில்லை. இந்த நிலை கிருஷ்ண பரமாத்மாவிற்கும் பொருந்துகிறது.

“அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனுமாச்ரிதம், பரம் பாவமஜானந்தோ மம பூதமஹேச்வரம்” என்கிறது பகவத் கீதை. அதாவது என்னுடைய பர சொரூபத்தையும், நான் உயிர்களுக்கெல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்று எண்ணி என்னை அவமதிக்கின்றனர் என்று கண்ணன் சொல்வதாக பகவத் கீதை உரைக்கிறது. இதற்கு பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் இவ்வாறு விளக்கமளிக்கிறார் : யானைக்கு வெளியே தோன்றும் தந்தமும், உள்ளே இருக்கும் பற்களுமாக இரண்டு வகை பற்கள் இருக்கின்றன, அவ்வாறு அவதார புருஷர்கள் சாதாரணமான வெளித்தோற்றம் உள்ளவர்களாய், எல்லோருடைய பார்வைக்கும் மனுஷ்ய ரீதியை உடையவர்களாகப் புலப்படுகின்றனர். ஆயினும் அவர்கள் கர்மவசத்திற்கு வெகுதூரம் அப்பாற்பட்டவர்களாகி பரமசாந்தியில் நிலைத்திருக்கின்றனர். அவ்வளவு ஏன்..? நாம் வாழுகின்ற இந்த காலத்திலேயே நம் கண் முன்னால் நீங்கள் சொன்ன அத்தனை குணங்களுடன் வாழ்ந்து காட்டியவர் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள். அவர் ஒரு சராசரி மனிதனாக நம்மிடையே வாழ்ந்து மறைந்திருக்கிறார். எப்பொழுதும் நமக்கு அருகிலேயே உள்ள பொருளின் மகத்துவம் நமக்கு விளங்குவதில்லை.

ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், கட்சி பாகுபாடு என எந்த விதமான பேதமும் இன்றி இந்தியர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து நிற்க வைத்ததன் மூலம் கலாம் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு மகாத்மாவாக வாழ்ந்து சாதித்திருக்கிறார். மதங்களுக்கு அப்பாற்பட்டு சாயிபாபாவின் ஆலயத்தில் கூட்டம் குவிகிறது. தற்போது எல்லோரும் மூச்சுக்கு முன்னூறு முறை சாய்ராம் சாய்ராம் என்கிறோம். பாபாவின் பக்தர்கள் தங்கள் பிள்ளைகளின் பெயருக்கு முன்னால் சாய் என்ற வார்த்தையை இணைத்துக் கொள்கிறார்கள். இதனையும் இந்த யுகத்தில் கண்கூடாக அனுபவித்து உணர்கிறோம். ஆக ஜாதி, மதம், மொழி, இனம் என அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் மனிதர்களை இந்த பூமியில் இறைவன் அவ்வப்போது பிறக்கவைத்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

* கைவிரல்களில் இறைவனின் உருவங்கள் பொறித்துள்ள மோதிரங்களை அணிந்துகொண்டு அசைவ உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவது பாவமான செயலா?
- மு. மதிவாணன், அரூர்.

நிச்சயமாக. அசைவ உணவு என்றில்லை. எந்த உணவாக இருந்தாலும் இறைவனின் திரு உருவங்கள் பதித்த மோதிரத்தை கைகளில் அணிந்துகொண்டு சாப்பிடுவது தவறு. சாப்பிடும்போது அந்த உருவங்களின் மீது எச்சில்படுவதால் அது சர்வ நிச்சயமாக பாவச் செயலே. அதனால்தான் இறைவனின் திரு உருவங்கள் பதித்த மோதிரங்களை பெரும்பாலானவர்கள் அணிவதில்லை. அதே நேரத்தில் தங்கள் நெஞ்சோடு ஒட்டி உறவாடுகின்ற வகையில் கழுத்தில் போடும் சங்கிலிகளில் டாலராக கோர்த்து அணிந்து கொள்கிறார்கள்.

இதுபோன்ற மோதிரங்களை பூஜை நேரத்தில் மட்டும் வேண்டுமானால் அணிந்து கொள்ளலாம். பூஜை முடிந்தவுடன் அவற்றை கழற்றி வைத்துவிடுவதே நல்லது. பூஜைக்கு நடுவில் தண்ணீர் அருந்த நினைத்தாலும் மோதிரத்தை கழற்றி வைத்துவிட்டு அதன்பின்னர் அருந்துவதே நல்லது. இறைவனின் திரு உருவங்கள் பதித்த மோதிரங்களை கைகளில் அணிந்து கொண்டு சாப்பிடுவது என்பது நிச்சயமாக பாவச்செயல்தான். அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

* மக்களின் கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகமாமே.. விவரமாகச் சொல்லமுடியுமா?
- விஜயாமாதேஸ்வரன், தர்மபுரி.

கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்தான். உண்மையில் நாட்டின் நலம் வேண்டி பொதுமக்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வதற்காக உருவாக்கப்பட்டவையே நமது ஆலயங்கள். கூட்டுப் பிரார்த்தனையின் மகத்துவத்தை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் எளிதாக புரிந்துகொள்ளலாம். நாம் வசிக்கும் பகுதியில் சாலை சரியில்லை அல்லது குடிநீர் வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு தனி மனிதன் தருகின்ற மனுவானது அரசின் கவனத்தை ஈர்ப்பதில்லை. அதே நேரத்தில் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து ஒரு மனுவினை அரசாங்கத்திடம் அளிக்கும்போது அந்த மனுவானது சிறப்பு கவனத்தைப் பெறுகிறது. பொதுமக்கள் ஒருங்கிணைந்து நம் பகுதியில் தண்ணீர் வரவில்லை, சாலை சரியில்லை என்று உரக்கச் சொல்லும்போது உடனடியாக அவர்களுக்கு தேவையான வசதிகள் அரசாங்கத்தால் செய்து தரப்படுகிறது.

சாதாரணமாக மனித சக்தியால் ஆளப்படுகின்ற அரசாங்கத்தின் கவனம் கூட பொதுமக்கள் ஒருங்கிணைந்து விண்ணப்பிக்கும் மனுவின்மீது செல்லும்போது எல்லாம் வல்ல இறைவனின் கவனம் கூட்டுப்பிரார்த்தனையின் மீது திரும்பாதா என்ன? ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற சொல்வழக்கு தோன்றியதே கூட்டுப்பிரார்த்தனையின் மகத்துவத்தை உணர்த்தத்தான். அதனால்தான் எல்லோரும் ஒன்றிணைந்து இறைவனிடம் தங்கள் கோரிக்கையை வைப்பதற்கு என பொதுவாக ஒரு இடத்தை நிர்மாணித்து அதற்கு ஆலயம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். ஆலயங்களில் கூட்டுப்பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால் இன்று நாம் நமது தனிப்பட்ட விஷயங்களுக்காக சுயநலன் கருதி ஆலயத்திற்குச் செல்கிறோம். தனிப்பட்ட மனிதனின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். தனிப்பட்ட நலன் கருதி பிரார்த்தனை செய்யும் மனிதன் தன் வீட்டுப் பூஜையறையிலேயே அந்த வேண்டுதலை வைக்கலாம். இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன் என்பதால் உண்மையான பக்தியோடு நம் வீட்டுப் பூஜையறையில் செய்யும் தனிப்பட்ட முறையிலான பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்.

அதே நேரத்தில் பொதுநலன் கருதி செய்யும் பிரார்த்தனைகள் அதாவது தேவையான அளவிற்கு மழை பொழிய வேண்டும், நீர்நிலைகள் நிரம்ப வேண்டும், விவசாயம் தழைத்து ஓங்க வேண்டும், கொடிய நோய்கள் எதுவும் அண்டாது எல்லோரது ஆரோக்யமும் காப்பாற்றப்பட வேண்டும், அறியாமை இருள் அகல வேண்டும் போன்ற பொதுவான பிரார்த்தனைகளை மக்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து கூட்டுப்பிரார்த்தனையின் மூலம் செய்யும்போது அதற்கான பலன் நிச்சயமாகக் கிடைக்கும். அதற்கான ஆதாரத்தையும் நாம் தற்போது
கண்கூடாகக் காண இயல்கிறது.

இந்த விகாரி வருடம் பிறக்கும்போது பஞ்சாங்கத்தில் வருட பலனாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும், மழை இல்லை என்றெல்லாம் குறித்திருந்தார்கள். அவ்வாறே வருடத்தின் துவக்கத்தில் கோடை காலத்தில் பொதுமக்களும் சற்று சிரமத்திற்கு உள்ளானார்கள். ஆங்காங்கே அவரவர் மத நம்பிக்கைக்கு ஏற்றபடி திருக்கோயில்களிலும், கிறிஸ்துவ தேவாலயங்களிலும், மசூதிகளிலும் அந்தந்த மதத்தினர் ஒருங்கிணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்து வந்ததை அன்றாடம் செய்தித்தாள்களில் கண்டோம். அந்த பிரார்த்தனைக்கான பலனையும் தற்போது கண்கூடாகக் கண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் குறித்த அளவிற்கு உயர்ந்ததையும் கண்டோம். கூட்டுப்பிரார்த்தனைக்கு சக்தி அதிகம் என்பதற்கு இதைவிடவும் சிறந்த உதாரணம் வேண்டுமா என்ன?

* காசிக்குப் போகும்போதெல்லாம் ஒரு காய், ஒரு பழம், ஒரு இலை விடவேண்டுமா?அல்லது முதல்முறை சென்றபோது வேண்டாம் என்று விட்டதே போதுமா? - அரிமளம் தளவாய் நாராயணசாமி.

முதல்முறை செல்லும்போது விடுவதே போதுமானது. ஒவ்வொரு முறை காசிக்குச் செல்லும்போதும் ஒவ்வொரு காய் அல்லது பழம் போன்றவற்றை விட வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் காசிக்குச் சென்றால் எதை விட வேண்டும் என்ற கேள்விக்கு விடையினை அறிந்து கொள்ள முயற்சிப்போம். உங்களது கேள்வியில் வேண்டாம் என்று விட்டதே போதுமா என்று கேட்டிருக்கிறீர்கள். வேண்டாம் என்பதை விடுவதை விட எது வேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறதோ அதை விட வேண்டும். அதாவது ஆசையை விட வேண்டும். அவ்வளவுதான். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார் புத்தபகவான். புத்தர் கயை என்னுமிடத்தில் போதி மரத்தினடியில் இந்த ஞானத்தைப் பெற்றார் என்று சரித்திரம் கூறுகிறது. காசி, கயை போன்ற இடங்களுக்கு தீர்த்தயாத்திரை செல்பவர்கள் இந்த ஞானத்தைப் பெறவேண்டும் என்பதற்காக தனக்கு மிகவும் பிரியமான பொருட்களை துறக்க வேண்டும் என்ற வழக்கம் தோன்றியது.

நம் மனதிற்கு மிகவும் பிரியமான பொருளை எந்த முறையிலாவது அடைந்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கும். இதனால் மனிதன் தவறுகள் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அத்தனை பிரியமான பொருளை விட்டுவிடுவதன் மூலம் மனம் பக்குவப்படுகிறது. எந்தப் பொருளின் மீது ஆசை தோன்றினாலும், அதனை அடைய முடியாத பட்சத்தில், மிக மிகப் பிடித்தமான பொருளையே விட்டுவிட்டோம், இது எம்மாத்திரம் என்று மனம் ஆறுதல் கொள்கிறது. ஆக, காசிக்குச் செல்பவர்கள் எதையாவது விட வேண்டும் என்று சொல்வதை விட. ஆசையை விட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆசையைத் துறந்தால் மட்டுமே காசிக்குச் சென்று வந்ததற்கான பலன் பூரணமாகக் கிடைக்கும்.

* நம் இந்து மதத்தில் ஏராளமான ஆண் தெய்வங்களும், பெண் தெய்வங்களும் உள்ளன. அவற்றிற்கு விசேஷமான கோயில்களும் உள்ளன. வழிபாட்டு முறைகளும் வேறுபட்டுள்ளது. எல்லா தெய்வங்களையும் வழிபட இயலாது. எல்லா கோயில்களுக்கும் செல்ல இயலாது. இப்படி இருக்கையில் நமக்கு பிடித்த தெய்வத்தை மட்டும் வழிபாடு செய்தால் எல்லா பலன்களையும் பெற முடியுமா? - பொ.திருமலை, சேலம்.

நிச்சயமாகப் பெற முடியும். இறைசக்தி என்பது ஒன்றுதான். நம் பாரத தேசம் முழுவதுமே இறை சாந்நித்யம் நிறைந்ததுதான். அந்த இறைசக்தியை அவரவர் அவரவருக்கு பிடித்தமான வடிவில் காண்கிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாகக் காண்பது தமிழரின் கண்ணோட்டம். தமிழகத்திற்கு அப்பால் குமரக்கடவுளைப் பற்றி அறிந்திருப்பவர்கள் சொற்பமே. அவர்களின் கண்களுக்கு அது பெருமாளாக அல்லது நரசிம்மராகத் தெரிந்தது. அவ்வளவு ஏன், திருமலையில் குடிகொண்டிருப்பது திருமுருகனே என்று வாதிடுபவர்கள் இன்றும் உள்ளார்கள்.

இதுபோன்று அம்பிகைக்கும் பல்வேறு ஆலயங்கள் உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமே பெரியபாளையம், திருவேற்காடு, மாங்காடு, படைவீடு, சமயபுரம், புன்னைநல்லூர், மேல்மலையனூர், மேல்மருவத்தூர் என அம்பிகைக்கு உரிய விசேஷமான ஸ்தலங்கள் பல உண்டு. ஒவ்வொரு ஸ்தலமாகச் சென்று தரிசனம் செய்வதால் ஏற்படும் உணர்வினை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அதே நேரத்தில் இந்த தெய்வத்திற்கு மட்டும்தான் சக்தி அதிகம் மற்ற ஸ்தலங்களுக்கு அதைவிட சக்தி குறைவு என்று தனித்து மதிப்பிட முடியாது. அரிசி என்பது ஒன்றுதான். ஒருவருக்கு புளிசாதம் பிடிக்கிறது, மற்றொருவருக்கு தக்காளி சாதம் பிடிக்கிறது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான ருசியின் மேல் ஈடுபாடு உண்டாகிறது.

சாம்பார் சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், பொங்கல், கற்கண்டு சாதம் என ஒரே அரிசியை வெவ்வேறு விதமான ருசிகளாக மாற்றி உண்கிறோம். நோக்கம் பசியாறுவது மட்டுமே. எந்த சாதமாக இருந்தாலும் அது பசியைப் போக்கும். அதே போல நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் நிச்சயமாக உங்களுக்குத் தேவையான பலன் கிட்டும். அதே நேரத்தில் சாப்பிடும்போது மிகவும் ஈடுபாட்டுடன் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால்தான் மனமும் வயிறும் நிறையும். அதனை விடுத்து வேண்டா வெறுப்பாக சாப்பிட்டால் வயிறு நிறைந்தாலும் மனம் நிறையாது. அதே போலத்தான் தெய்வ வழிபாடும்.எந்த தெய்வத்தை வணங்கினாலும் மனம் ஒன்றி முழு ஈடுபாட்டுடன் வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபடும் பட்சத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் நிச்சயமாக கிடைக்கும்.சுவைகள் ஆறு வகை என்பதால் அறுசுவை என்று அழைப்பார்கள். அதே போல் இந்து மதத்திலும் ஷண்மதம் என்று ஆறு பிரிவுகள் உண்டு.

சைவம் (சிவன்), வைணவம் (விஷ்ணு), சாக்தம் (சக்தி), கணாபத்யம் (கணபதி), கௌமாரம் (குமரக்கடவுள்), சௌரம் (சூரியன்) என்று ஒவ்வொரு விதமான ரூபத்தினைக் கொண்டு பிரித்திருப்பார்கள். அவரவருக்கு பிடித்தமான வழிபாட்டு முறையை அவரவர் பின்பற்றி தங்களுக்குத் தேவையான பலனை அடைகிறார்கள். வெவ்வேறு ருசிகளை விரும்புவோர் அனைத்து வகையான சாதங்களையும் வேண்டி விரும்பிச் சாப்பிடுவதைப்போல, இறைவனின் பல்வேறு ரூபங்களையும் தரிசிக்க விரும்புவோர் அந்தந்த ஸ்தலங்களை நாடிச் செல்கிறார்கள். ஆண் தெய்வமாக இருந்தாலும் சரி, பெண் தெய்வமாக இருந்தாலும் சரி உங்களுக்கு பிடித்தமான வடிவில், பிடித்தமான ஸ்தலத்தில் மனம் ஒன்றி வழிபடும்போது எல்லா பலன்களையும் நிச்சயமாகப் பெற இயலும்என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

திருக்கோவிலூர் K.B  ஹரிபிரசாத் ஷர்மா

Tags :
× RELATED துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண்