×

படி உற்சவத்தை தொடங்கிய உத்தமர்

அர்த்தநாரிக்கு  மைசூர் ராஜா அரண்மனையில் தலைமை சமையல்கார உத்தியோகம். தனது சமையல் திறனைக் காட்டி ராஜாவை மயக்கவும் செய்தாகி விட்டது. ராஜா எங்காவது வெளியில் சென்றால் கூட இவரையும் அழைத்துச் செல்லும் அளவுக்கு நெருக்கம். இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகள் இரண்டாம் மனைவிக்கு இரண்டு குழந்தைகள். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை. அப்பாடா! இது போதாதா ஒரு மனிதன் நிம்மதியாக வாழ என்கிறீர்களா?. ஆனால் முருகனது திருவிளையாடலை யார் தான் முழுதாக உணர முடியும். நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய நாடகம் ஆடுபவன் இல்லையா அவன். இவர் வாழ்விலும் விளையாட ஆரம்பித்து விட்டான். முதல் மனைவி இறந்து போனாள். அவளது மூன்று குழந்தைகளும் அவளைத் தொடர்ந்து போய் சேர்ந்தார்கள்.

அதோடு நின்றுவிடவில்லை.  இரண்டாவது மனைவிக்கு பிறந்த பெண்குழந்தையும் இறைவனடி சேர்ந்தாள். அர்ந்தநாரியை சோகம் சூழ்ந்தது. போதாத குறைக்கு தீராத வயற்று வலி வேறு. எந்த மருந்தாலும் அது நீங்கவேயில்லை. அப்போது ஒருவர் பழனி மலை  முருகனின் கருணையைப் பற்றி எடுத்துரைத்தார். அவனது சந்நதியில் விரதம் இருந்து அவனது அபிஷேக பாலை உண்டு வரச் சொன்னார். எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருந்த அர்த்தநாரி உடன் பழனி மலைக்கு கிளம்பிவிட்டார். கூடவே அவரது இரண்டாம் மனைவியும் எஞ்சியிருந்த ஒரே ஒரு மகன் நரசிம்மனும்.  

கண்கொள்ளா தரிசனம். உருகிப் போனார் அர்த்தநாரி. அபிஷேக பாலை தவறாமல் உண்டு பழனி ஆண்டவன் பூஜைக்கு தொண்டு புரிந்து வந்தார். வயற்று வலி குறைய ஆரம்பித்து, வலி மறைந்தே போய் விட்டது. அர்த்தநாரி மனதில் முருக பக்தி ஆல மரமாக வளர்ந்து விட்டது. அப்போதெல்லாம் ஆலயங்களில் பூஜை வேளைகளில் தேவ தாசிகள் நடனம் ஆடுவார்கள். என்றும் போல அன்றும் தேவ தாசிகள் அற்புதமாக நடனம் ஆடி நாட்டியாஞ்சலி செய்தார்கள் பழனி ஆண்டவனுக்கு.

‘‘வங்கார மார்பில் அணி’’ எனத் தொடங்கும் திருச்செங்காட்டாங்குடி திருப்புகழுக்கு வெகு அற்புதமாக நடனம் புரிந்தார்கள். அதில் ‘‘ சிங்கார ரூப மயில் வாகனா நமோ நம’’  என்ற வரிகளுக்கு ஒருத்தி மயிலைப் போல அபிநயம் பிடித்து நிற்க மற்றோருத்தி முருகனைப் போல மயிலாக மாறியவள் அருகில் கம்பீரமாக நின்றாள். அர்த்தநாரிக்கு மயில் ஏறி முருகனே வந்து விட்டது போல இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அந்த தாசிகளை சந்தித்து நீங்கள் நடம் புரிந்த பாடல் யாருடையது என்று கேட்டார். அவர்கள் அனைவரும் திருப்புகழைப் பற்றியும், அருணகிரி நாதரைப் பற்றியும் பெரிய உரையே நிகழ்த்தினார்கள்.

அருணகிரிநாதரின் பக்தியையும் முருகனின் கருணையும் எண்ணி எண்ணி வியந்தார் அர்த்தநாரி.  தவறாமல் ‘‘வங்கார மார்பில் அணி ’’ என்ற அந்தப் பாடலை எழுதி வாங்கிக் கொண்டார்,  அவர் பாராயணம் செய்வதற்காக. அப்போது அவருக்கு வயது 40. இப்படி தான் அவருக்கு திருப்புகழ் மீது, முதல் ஆசை வந்தது. பிறகு உலகாய வாழ்க்கையை அவர் வெறுத்தார். துறவறம் ஏற்றார். திருவண்ணாமலையில், ரமண மகரிஷியின் வழிகாட்டுதலின் பேரில், சேஷாத்ரி சுவாமிகளை குருவாக ஏற்றார்.

‘‘ வேதகங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என்று அனைத்தின் தத்துவமும் திருப்புகழில் உள்ளது. அதில் இல்லாததே இல்லை. அதுவே ஒரு உயர்ந்த மந்திரம். அதையே இனி நீ ஜபித்து வா! பிறவிப் பிணிக்கும், பிறந்த பின் வரும் பிணிக்கும், கஷ்டங்களுக்கும், திருப்புகழ் தான் ஒரே மருந்து! அந்த முருகன், வள்ளி நாச்சியாருடன் எப்போதும் வசிக்கும் இடம் வள்ளிமலை என்பது கந்த புராணத்தின் முடிவான முடிவு. ஆகவே அங்கு சென்று உன் திருப்புகழ் தவத்தை தொடங்கு. மனதால் இறைவனை பூஜி. அதற்கே பலன் அதிகம். அதை எப்படிச் செய்வது என்று ஆதி சங்கரர் சொல்கிறார். அதை உனக்கு உபதேசிக்கிறேன் ’’ என்று சொல்லி சேஷாத்ரி ஸ்வாமிகள் அர்த்தநாரிக்கு ‘‘ ஆத்மா த்வம் கிரிஜா மதி..’’ என்று தொடங்கும் சிவ மானஸ பூஜா மந்திரத்தை உபதேசித்தார்.

(சுவாமிகளின் உபதேசம் - ‘‘ ஆசை கூர் பத்தனேன்’’  என்ற திருப்புகழின் கருத்தோடு ஒத்திருப்பதை, திருப்புகழை ஓதி உணர்ந்த மெய் அன்பர்கள் அறிவார்கள்) கரும்பு திங்க கூலியா?. சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற மகான்கள் சொன்ன சொல்லை யார் தான் தள்ளுவார்கள்?. சென்றார் வள்ளி மலைக்கு. வள்ளி மலை ஆண்டவனை, திருப்புகழைப் பாடிப் பாடி பூஜித்தார். வந்தவர்கள் அனைவருக்கும் திருப்புகழின் மகிமையையும், திருப்புகழையும் போதித்தார். உலகம் அவரை வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் என்று போற்ற ஆரம்பித்தது.

கண் தெரியாத ஒருவருக்கு, திருப்புகழ் போதித்து, அவரை, கண்ணப்ப பாகவதராக மாற்றிய பெரும் வித்தகர் நம் வள்ளி மலை சச்சிதானந்த ஸ்வாமிகள்.  ஸ்வாமிகள் ஒருமுறை, சென்னைக்கு யாத்திரையாக வந்தார். அப்போது ஒன்பது வயது நிறைந்த ஒரு சிறுமி, ஸ்வாமிகளின் அருகில் வந்தாள். வந்தவள் நமஸ்காரம் செய்துவிட்டு பேச ஆரம்பித்தாள். ‘‘  ஸ்வாமி என் பேரு பொங்கி! நான் நல்லா திருப்புகழ் பாடுவேன். நீங்க ஒரே ஒரு திருப்புகழ் ஆவது நான் பாடும் போது கேக்கணும். கருணை பண்ணுங்க ஸ்வாமி’’  என்று பய பக்தியோடு வேண்டினாள்.

சுவாமியும் அனுமதி தந்தார். ‘‘விர கற நோக்கியும் ’’  எனத் தொடங்கும் திருப்புகழை அதி அற்புதமாக, மோகன ராகத்தில், தனது காந்தக் குரலால் பாடினாள் அந்த சிறுமி. ( எனது குரு, மனோலயம் ராகத்தில் பாடும்போது மெய் மறந்தது நினைவுக்கு வருகிறது) ஸ்வாமிகளும் சொக்கிப் போனார். ‘‘அம்மாடி! உனக்கு என்னமா வேணும்! எதுனாலும் கேளு! உன் அமுதமான குரலுக்கு எதை வேணும்னாலும், தயங்காம கேளு! நான் தரேன்! ’’ மகிழ்ச்சியில் துள்ளிய படியே ஸ்வாமிகள் மொழிந்தார். அப்போது, அவரது கண்களில் தாரை, தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது.

அது அவர் எந்த அளவுக்கு பாட்டில் உருகி விட்டார் என்பதை உணர்த்தியது. ‘‘ ஸ்வாமி எனக்கு உங்க வெத்தலை பெட்டி தான் வேணும் ’’ ஸ்வாமிகளின் கைகளில் இருந்த வெற்றிலைப் பெட்டியை தனது ஆள் காட்டி விரலால் சுட்டிக் காட்டியபடியே, சிறுமி பகர்ந்தாள்.  ஸ்வாமியும் சந்தோஷமாக  வெற்றிலை பெட்டியை ஆசிர்வதித்து கொடுத்தார். மறுநாள் வள்ளி மலையில் வள்ளி பிராட்டியை தரிசனம் செய்ய முதல் ஆளாக சென்றார்கள் ஸ்வாமிகள். பட்டர் நடையை திறந்தார். அங்கே வள்ளி நாச்சியாரின் திரு உருவத்தின் பாதத்தில் ஸ்வாமிகளின் வெற்றிலைப் பெட்டி ஜொலித்த படி இருந்தது. அதை கவனித்த ஸ்வாமி விக்கித்துப் போனார்.

அந்த வெற்றிலை பெட்டியில் ‘‘ பொங்கியாக வந்தது நான் தான்’’ என்று வள்ளி நாச்சியார், தன் கை பட எழுதிய ஓலை இருந்தது. அதை கண்ட ஸ்வாமிகளின் கண்கள், அருவியைப் போல நீரைப் பொழிந்தது. பெட்டியை கண்களில் ஒற்றிக் கொண்டு திக்கு முக்காடிப் போனார். இப்படி ஸ்வாமிகளின் வாழ்வில் நடந்த அதிசயங்கள் ஏராளம். 1917களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் ஒரு பழக்கம் இருந்தது. அதாவது ஆங்கிலப் புத்தாண்டு அன்று, அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி, அல்லது டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் தேதி, கூட்டம் கூட்டமாக அனைவரும் ஆங்கிலேய துரையை பார்க்கச் செல்வார்கள்.

கையில் மறக்காமல் இனிப்பு வகைகள் பழங்கள் என்று அவர்களால் முடிந்ததை எடுத்துச் செல்வார்கள். வேறு எதற்கும் இல்லை அந்த துரையைக் கண்டு அவனது நல்லெண்ணத்தை சம்பாதித்துக் கொள்ளத்தான். அரசாங்க வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை எதிர்ப்பார்த்து இதை செய்தார்கள். அதைக் கண்ட ஸ்வாமிகளின் உள்ளம் பதை பதைத்தது. ஆம் கண்டவனை கண்டு அவன் காலில் விழுந்து நினைத்ததை சாதித்து கொள்வது எவ்வளவு பெரிய ஒரு அபத்தம்.

அதுவும் அவனே வஞ்சக ஆங்கிலேயனாக இருந்தால், சொல்லவே வேண்டாம். இவ்வளவு கஷ்டப்பட்டு அவனுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னாலும், நம் காரியம் நிச்சயம் நடக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் தணிகையில் வாழும் தணிகை துரையை, சிங்கார வேலனை, அதே நாளில் திருப்புகழ் பாடி வழிபட்டால், இக வாழ்விலும், பர வாழ்விலும், எண்ணில்லா நலன்கள் பெறலாமே?,  என்று தோன்றியது ஸ்வாமிகளுக்கு. உடன் தனது பக்த ரத்தினங்களை அழைத்து தனது எண்ணத்தை சொன்னார்.

அவர்களும் இன்முகத்தோடு சம்மதம் தெரிவித்தார்கள். 1917 ஆம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி, தனது ஆறே ஆறு சீடர்களோடு, படிபூஜை உற்சவத்தை தொடங்கினார் ஸ்வாமிகள்.  ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் பாடி, படி பூஜை செய்து மலை ஏறினார் ஸ்வாமிகள். தணிகை துரையை நெக்குருக சேவித்தார். அன்று ஆறே நபர்களை வைத்துக் கொண்டு ஸ்வாமிகள் ஆரம்பித்த உற்சவத்தை இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பல முருகன் கோயில்களில் நிகழ்த்துகிறார்கள். அந்த தொண்டர் குழாத்துடன் சேர்ந்து நாமும் நற்கதி பெறுவோம்.



ஜி மகேஷ்

Tags : festival ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...