×

மார்பில் மருவுடன் மகேசன்

கோனேரிராஜபுரம், தஞ்சை

பூமாதேவி பூஜித்ததால் இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் பூமிநாதர் எனும் பெயருடன் அருளும் திருத்தலம். தன் நாயகியான அங்கவளநாயகியுடன் திருமணக்கோலத்தை பூமாதேவிக்குக் காட்டிய தலமாதலால் இத்தல ஈசன் திருமண வரம் தருவதில் நிகரற்றவராகத் திகழ்கிறார். கௌதம முனிவருக்கு ஈசன் தன் ஆனந்தத் திருநடனத்தை ஆடிக்காட்டிய தலம். சோழப் பேரரசி செம்பியன் மாதேவியரால் கற்றளியாக எழுப்பப்பட்ட ஆலயம். சோழ மன்னனின் விருப்பப்படி நடராஜ மூர்த்தியை வடிக்க இயலாமல் தவித்தான் சிற்பி ஒருவன்.

மாறுவேடத்தில் அவனை நாடி வந்து தாகத்திற்கு நீர் கேட்டார் ஈசன். குழம்பிய நிலையிலிருந்த அவன், கொதிக்கும் உலோகக் குழம்பைக் காட்டி அதை அருந்தச் சொன்னான். ஈசனும் அதை அருந்த, திகைத்து நின்ற சிற்பியை ஆட்கொண்ட ஈசன், அற்புதமான சுயம்பு நடராஜ மூர்த்தியாக உருக் காட்டிய பெருமை பெற்ற தலம். இதழோரங்களில் புன்னகையும் மார்பில் மருவுடனும் அற்புத வடிவில் அபூர்வ தோற்றம் அருள்கிறார் நடராஜ மூர்த்தி. தேவாரம் மூவராலும் பாடப்பட்டபோது திருநல்லம் எனும் பெயர் பெற்றிருந்த இத்தலம், கோனேரிராயன் எனும் மன்னன் காலத்தில் கோனேரிராஜபுரம் என்றாகியது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மை வாய்ந்த தலம். அம்பிகை அங்கவளநாயகி, தேகசுந்தரி என்றும், அங்கோல்வளை மங்கை என்றும் வணங்கப்படுகிறாள். ஆலயம் வெளிமண்டபம், நடராஜர் மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை மண்டபம் என ஐந்து மண்டபங்களுடன் எண்ணற்ற ஓவிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இறைவன் திருமண வரத்தை அருள்வதால் கல்யாணசுந்தரர் என்று போற்றப்படுகிறார். இத்தல இறைவனை அடிபணிந்தால் நம் வினைகள் ஒழியும் என்பதை அப்பர், ‘நல்லம் மேவிய நாதனடி தொழ வெல்ல வந்த வினைப்பகை வீழுமே’ என்கிறார்.

கருவறை விமானம் சோழர் கால சிற்பக்கலை நுட்பத்தோடு திகழ்கிறது. ஆலயத்தில் பொதுவாக நான்கு கோஷ்ட மூர்த்திகள்தான் அருள்வர். ஆனால், இத்தலத்தில் மங்கைபங்கர், துர்க்கை, பிட்சாடனர், நான்முகன், லிங்கோத்பவர், குரு, நடராஜப் பெருமான், விநாயகர், அகத்தியர் என ஒன்பது மூர்த்தங்கள் உள்ளது அபூர்வமான அமைப்பாகும். ஈசன் உமையன்னையை திருமணம் செய்து கொண்ட தலமாதலால் அன்னையின் சந்நதியும் ஈசனின் சந்நதியும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.

ஆலயத்தில் உள்ள கிணற்றுக்கு ஞானகூபம் என்று பெயர்.ஆலயத்தின் தலவிருட்சமாக விருட்சராஜன் என்று போற்றப்படும்  அரச மரம் உள்ளது. அப்பர் பெருமான், ‘காலமானகழிவதன் முன்னமே ஏலுமாறு...’ எனும் பதிகத்தில், நம் வாழ்நாளுக்குள் இந்த பூமிநாதரையும் நடராஜப் பெருமானையும் தரிசிக்க வேண்டும் என்று பாடிப் பரவியுள்ளார். கும்பகோணம் - காரைக்கால் வழியில், எஸ்.புதூர் எனும் ஊரிலிருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் இத்தலத்தை அடையலாம்.

Tags : Mahesan ,
× RELATED மக்களோடு மகேசன் கொண்டாடும் மாமல்லபுரம் மாசிமகம்