×

மகனின் தற்கொலைக்கு காரணமான எம்பி வைத்திலிங்கத்தின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்.பி.யிடம் தந்தை மனு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவரை, எம்பி வைத்திலிங்கத்தின் சம்பந்தி, மருமகன், அவரது உறவினர்கள் ஆகியோர் தாக்கி மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து வினோத்குமார் கடந்த 5ம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வினோத்குமாரின் தந்தை கோவிந்தராஜ், உறவினர்களுடன் தஞ்சை எஸ்பி தேஸ்முக் சேகர் சஞ்சயிடம் நேற்று கண்ணீருடன் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எம்.பி. வைத்திலிங்கத்தின் சம்பந்தியும், சின்னக்கண்ணு மகனுமான குணசேகரனுக்கும் இடம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 5ம் தேதி இரவு குணசேகரன் வீட்டு நாய்க்கு, எனது மகன் வினோத்குமார் பிஸ்கட் போட்டதால் குணசேகரன் எனது மகனிடம் தகராறு செய்து கையில் வைத்திருந்த உருட்டு கட்டையால் தாக்கினார்.நான் தடுக்க முற்பட்ட போது அவரது அருகில் குணசேகரனின் மகனும், எம்.பி. வைத்திலிங்கத்தின் மருமகனுமான டாக்டர் கார்த்திகேயன், குணசேகரன் தம்பி டாக்டர் மணி, அவரது மனைவி கலைச்செல்வி, உறவினர்களான ஏட்டு (எ) ஆனந்தன், ராசு மகன் சங்கர் ஆகியோர் எங்களை தகாத வார்த்தைகளால் பேசியும், திட்டியும் எனது மகன் அணிந்திருந்த ஆடைகளை அகற்றி அவமானப்படுத்தினர்.  ஊரை விட்டு செல்லா விட்டால் உயிரோடு வைத்து எரித்து கொன்று விடுவோம் எனவும் மிரட்டினார்கள். இதனால் அவமானப்பட்ட வினோத்குமார், நான் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள்தான் காரணம் என்று அழுது புலம்பி கொண்டே இருந்தார். மறுநாள் 6ம் தேதி அறையின் கதவை உடைத்து பார்த்த போது, வினோத்குமார் தூக்கில் தொங்கி இருந்தார்.  இதுகுறித்து புகார் அளித்தும் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஒருதலை பட்சமாகவும், பாரபட்சத்துடனும் எம்.பி.யின் சம்பந்தி குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். வினோத்குமார் தற்கொலைக்கு காரணமான எம்.பி. வைத்திலிங்கத்தின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post மகனின் தற்கொலைக்கு காரணமான எம்பி வைத்திலிங்கத்தின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்.பி.யிடம் தந்தை மனு appeared first on Dinakaran.

Tags : MB ,Holidingam ,GP ,YU ,Thanjai ,Vinodkumar ,Thanjay District Oatnadu Thaluga Pudur ,Vidilingam ,S. GP ,Dinakaran ,
× RELATED 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி