×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

206. அஜாய நமஹ (Ajaaya namaha)

(200-வது திருநாமமான ‘அம்ருத்யு:’ முதல், 210-வது திருநாமமான ‘ஸுராரிஹா’ வரையுள்ள 11 திருநாமங்கள் நரசிம்ம அவதாரத்தின் பெருமைகளை விளக்கவந்தவை.)இரணியன் பிரம்மாவைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தான். அவனுக்குக் காட்சியளித்த பிரம்மா, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று அவனிடம் கேட்டார். “எனக்கு மரணமே ஏற்படக்கூடாது!” என்று வரம் கேட்டான் இரணியன். “சாகா வரம் என்ற வரமே கிடையாதப்பா! பிறந்தவர்கள் அனைவருக்கும் மரணம் என்பது நிச்சயமாக உண்டு.

மேலும், பிறவா வரம் அளிக்க எனக்குச் சக்தியும் கிடையாது!” என்றார் பிரம்மா. “அப்படியானால் உங்களைக் குறித்து இத்தனைக் காலம் நான் செய்த தவம் அனைத்தும் வீணா?” என்று கேட்டான் இரணியன். “நீ வேறு ஏதாவது வரம் கேள். நான் தருகிறேன்!” என்றார் பிரம்மா.“உங்களால் படைக்கப்பட்ட எந்தப் பொருளாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. மனிதர்களாலோ, மிருகங்களாலோ எனக்கு மரணம் உண்டாகக் கூடாது. காலையிலோ, மாலையிலோ மரணம் ஏற்படக்கூடாது. வீட்டுக்கு உள்ளேயும் மரணம் ஏற்படக்கூடாது, வீட்டுக்கு வெளியேயும் மரணம் ஏற்படக்கூடாது. பூமியிலோ வானத்திலோ எனக்கு மரணம் உண்டாகக் கூடாது. உயிருள்ள பொருளாலும் சரி, உயிரற்ற பொருளாலும் சரி, எனக்கு மரணம் வரக்கூடாது!” என்று இரணியன் வரம் கேட்க, அவ்வரங்கள் அனைத்தையும் அளித்தார் பிரம்மா.

இத்தனை வரங்களையும் மீறித் தன்னை யாராலும் கொல்ல முடியாது என்று கருதிய இரணியன், “நானே கடவுள்!” என்று அறிவித்தான். “இனி வேறு தெய்வங்களை யாரும் வணங்கக் கூடாது. “ஹிரண்யாய நமஹ” என்று எனது பெயரையே ஓதவேண்டும்!” என்று கட்டளையிட்டான்.ஆனால் இறைவனை யாராலும் ஏமாற்ற முடியாது என்பதை இரணியன் அறியவில்லை. பிரம்மாவால் படைக்கப்பட்டவர்களால் தானே இரணியனுக்கு மரணம் ஏற்படாது? பிரம்மாவையே படைத்தவரான திருமால் வந்து அவனை வதம் செய்தார். மனிதனோ மிருகமோ கொல்ல முடியாது என்று தானே வரம் பெற்றான்? மனிதனும் மிருகமும் இணைந்த வடிவமான நரசிங்க வடிவத்தில் வந்தார்.

காலை, மாலை இரண்டுக்கும் இடைப்பட்ட பொழுதான சந்தியாகால வேளையில் தோன்றி,  வீட்டின் உள்புறத்துக்கும் வெளிப்புறத்துக்கும் இடைப்பட்ட இடமான நிலைப்படியில், பூமிக்கும் வானுக்கும் இடைப்பட்டதான தனது மடியில் அவனை வைத்து, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டிலும் சேராத நகத்தைக் கொண்டு அவனுடலைக் கிழித்து இரணியனை வதைத்தார் திருமால்.

அப்போது பிரகலாதன் நரசிம்மரைத் துதி செய்தான். “எம்பெருமானே! நாங்கள் எல்லோரும் பூமியில் முன்வினைகளாகிய கர்மாவின் காரணமாகப் பிறக்கிறோம். எனவே எந்த நேரத்தில், எத்தகைய பெற்றோருக்கு, எந்த ஊரில், எப்படிப் பிறக்க வேண்டும் என்பதை எங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நீயோ உனது கருணையால் பூமியில் அவதாரங்கள் செய்கிறாய். எனவே நீ நினைத்த நேரத்தில், நீ விரும்பும் பெற்றோருக்குப் பிள்ளையாக, நீ விரும்பும் ஊரில், நீ நினைத்த வடிவத்துடன் தோன்றுகிறாய். இப்போது அத்தகைய ஒரு மாயம் செய்து இந்தத் தூணிலிருந்து தோன்றி இந்தத் தூணைப் பிரம்மாவுக்குப் பாட்டியாக ஆக்கி விட்டாய். உனது பிறப்பும் செயல்களும் தெய்வீகமானவை!” என்று போற்றினான்.“தூணிலிருந்து நரசிம்மர் தோன்றியபடியால், அந்தத் தூண் திருமாலுக்குத் தாயாகவும், திருமாலின் மகனான பிரம்மாவுக்குப் பாட்டியாகவும் ஆனது” என்று வேதாந்த தேசிகனும் ஒரு ஸ்லோகம் இயற்றியுள்ளார்:

“ப்ரத்யாதிஷ்ட புராதன ப்ரஹரண க்ராம: க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ:
யத் ப்ராது: பவநாத வந்த்ய ஜடரா யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸுர க்ருஹ ஸ்தூணா பிதாமஹீ அபூத் ”
‘ஜ’ என்றால் பிறப்பு என்று பொருள். மற்றவர்களைப் போல் தாயின் கருவிலிருந்து பிறக்காமல், தன் விருப்பத்தின் படி தூணில் இருந்து தோன்றியமையால், நரசிம்மர் ‘அஜ:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 206-வது திருநாமம். பொதுவாக, ‘அஜ:’ என்றால் பிறப்பற்றவர் என்று பொருள். ஆனால் இவ்விடத்தில், சாதாரண பிறவிகள் போல் அல்லாமல் தெய்வீகமான பிறவியை உடையவர் என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது ஆச்சாரியர்களின் கருத்து. “அஜாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் இல்லத்தில் பிரகலாதனைப் போன்ற பிள்ளைகள் பிறக்கும்படி நரசிம்மர் அருள்புரிவார்.

207. துர்மர்ஷணாய நமஹ (Durmarshanaaya namaha)

இரணியனை வதம் செய்த நரசிம்மர் உள்ளத்தில் கோபத்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அவர் மிகவும் உக்கிரமாக இருந்தபடியால், அவர் அருகில் செல்லவே தேவர்கள் அஞ்சினார்கள். அச்சத்தையும் மீறி அருகில் சென்ற சில தேவர்களை நரசிம்மரிடம் இருந்து பெருகி வந்த ஜ்வாலை சுட்டது. நரசிம்மரின் கோபத்தீயை அணைக்க என்ன வழி என ஆலோசித்த தேவர்கள், பாதி பறவை - பாதி மிருகம் என்று உருவம் கொண்ட சரபம் என்னும் பறவையை உருவாக்கினார்கள். அந்தச் சரபம் சீறிக் கொண்டு வந்து நரசிம்மரைத் தாக்கியது.சரபர் வந்து தாக்கியதால் வெகுண்ட நரசிம்மர், கண்டபேரண்ட பறவையின் வடிவெடுத்துச் சரபரைத் தாக்கினார். கண்டபேரண்டம் என்பது இரண்டு தலைகள், இறக்கைகள், எட்டு நீண்ட கால்கள் கொண்ட பறவையாகும். அந்த கண்ட பேரண்டர் சரபரைப் போரில் வீழ்த்தினார்.“கேழ்கிளரும் அங்கவேள் குன்ற அழல் சரபத்தைப் பிளந்த சிங்கவேள் குன்றத்தினார்” என்று அழகிய மணவாள தாசரும்,

“ஹை! மர்த்யஸிம்ஹ! வபுஷஸ்தவ தேஜஸோம்சே
சம்புர்பவன் ஹி சரப: சலபோ பபூவ”
என்று கூரத்தாழ்வானும் இவ்வரலாற்றைப் பாடியுள்ளார்கள்.

(குறிப்பு: சைவ இலக்கியங்களில் இவ்வரலாறு வேறு விதமாக வர்ணிக்கப்படுகிறது. எனினும் அந்த வேறுபாடுகளை மறந்து, திருமாலின் இந்தத் திருப்பெயரை விளக்கும் நோக்கில் மட்டும் இவ்வரலாற்றைக் காண்போம்.)ஆனால், நரசிம்ம வடிவில் திருமாலைத் தரிசித்த பிரகலாதனுக்கு கண்டபேரண்ட வடிவத்தைத் தரிசிக்கும் பேறு கிட்டவில்லை. அவ்வடிவத்தைத் தனக்குக் காட்டியருளுமாறு திருமாலிடம் பிரார்த்தித்தான் பிரகலாதன்.அவனிடம் திருமால், “நீ சோழ நாட்டிலுள்ள தேரழுந்தூர் என்னும் திருத்தலத்துக்குச் சென்று தவம் புரிந்தால், அங்கே கண்டபேரண்ட வடிவில் நான் உனக்குக் காட்சி தருவேன்!” என்றார்.

பிரகலாதனும் தேரழுந்தூரை அடைந்து அங்கே தவத்தில் ஈடுபட்டான். அவனுக்குக் கண்டபேரண்ட வடிவில் திருமால் காட்சியளித்தார். கண்டபேரண்டரைத் தரிசித்து மகிழ்ந்த பிரகலாதன், “திருமாலே! நான் காண விரும்பிய வடிவில் காட்சியளித்து என் வருத்தங்களை எல்லாம் போக்கியமைக்கு நன்றி!” என்று சொன்னான். “பிரகலாதா! உன் வருத்தங்கள் மட்டுமல்ல, என் அடியார்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களையும், தீமைகளையும் இதுபோன்ற வடிவங்களை ஏற்று வந்து போக்குவேன்!” என்று கூறினார் கண்டபேரண்டர். இன்றும் தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில், மூலவரான தேவாதிராஜப் பெருமாள் கண்டபேரண்ட பட்சியின் வடிவம் பொறித்த பதக்கத்தை அணிந்திருப்பதையும், மூலவருக்கு அருகில் கூப்பிய கைகளுடன் பிரகலாதன் எழுந்தருளியிருப்பதையும் காணலாம்.

தேரழுந்தூரில் தோன்றிய கம்பருக்கு, தேவாதிராஜனின் திருமார்பிலுள்ள பதக்கத்தில் வீற்றிருக்கும் கண்டபேரண்டர் அருள்புரிந்து ராமாயணம் பாடவைத்தார். திருவரங்கத்தில் ராமாயண அரங்கேற்றம் தடையின்றி நடைபெறத் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் நரசிம்மர் அருள்புரிந்தார். நரசிம்மர் தனக்கு அருள்புரிந்ததை நினைவில் கொண்டு, தனது ராமாயணத்தில் ‘இரணிய வதைப் படலம்’ என்ற படலம் அமைத்து நரசிம்மரைத்
துதித்தார் கம்பர்.ஹைதராபாதிலிருந்து 62 கி.மீ. தூரத்தில் உள்ள யாதகிரிகுட்டா என்ற மலையில் ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், கண்டபேரண்ட நரசிம்மர் ஆகிய மூன்று வடிவங்களில் நரசிம்மரைத் தரிசிக்கலாம். நரசிம்மர், கண்டபேரண்டர் போன்ற வடிவங்களில் தோன்றித் தன் அடியார்களின் விரோதிகளை வீழ்த்துபவராகத் திருமால் திகழ்வதால், ‘துர்மர்ஷண:’ என்றழைக்கப்படுகிறார். ‘துர்மர்ஷண:’ என்றால் யாராலும் வீழ்த்தமுடியாதவர், அனைவரையும் வெல்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 207-வது திருநாமம்.“துர்மர்ஷணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வரும் அனைத்து ஆபத்துகளையும் திருமால் போக்கியருள்வார்.

208. சாஸ்த்ரே நமஹ (Shaasthre namaha)

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் நாராயணன் என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். அவரும் அவரது மனைவியும் மிகச்சிறந்த கிருஷ்ண பக்தர்கள். தம் இல்லத்திலுள்ள கோபாலகிருஷ்ண மூர்த்திக்குத் தினமும் பக்தியோடு பூஜை செய்து வந்தார் நாராயணன். கிருஷ்ணனின் அருளால் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ராமகிருஷ்ணன் என்று பெயரிட்ட நாராயணனும் அவரது மனைவியும், அக்குழந்தையைக் கிருஷ்ணன் தங்களுக்கு அளித்த வரப்பிரசாதமாகக் கருதி வளர்த்து வந்தார்கள். ஐந்து வயதிலேயே ராமகிருஷ்ணனை அவனது பெற்றோர்கள் குருகுலத்தில் சேர்த்தார்கள். வெகு விரைவில் அனைத்து வேதங்களையும் கற்றுத் தேர்ந்து பெரும் வித்வானாக வீடு திரும்பினார் ராமகிருஷ்ணன். தங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய நாராயணனும் அவரது மனைவியும், ராமகிருஷ்ணனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடத் தொடங்கினார்கள். ஆனால் ராமகிருஷ்ணனுக்கோ இல்லற வாழ்க்கையில் நாட்டமில்லை. இறைவனைத் தியானிப்பதிலேயே நாட்டம் கொண்ட அவர், சம்சார பந்தத்திலிருந்து விடுபடும் வழிகாட்ட ஒரு ஆன்மிக குரு கிடைக்கமாட்டாரா என ஏங்கிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் ராமகிருஷ்ணனின் கனவில் பாலகிருஷ்ணானந்தர் என்னும் துறவி தோன்றி, அவருக்கு நரசிம்ம மந்திரத்தையும், பாகவத புராணத்தையும் உபதேசம் செய்தார். கனவில் பெற்ற உபதேசம் அவரது நினைவில் நன்கு பதிந்து விட்டமையால், அடுத்த நாள் காலை முதல் அன்றாடம் நரசிம்ம மந்திர ஜபமும், பாகவத புராண பாராயணமும் செய்யத் தொடங்கினார் ராமகிருஷ்ணன். தன்னைச் சம்சாரச் சுழலில் இருந்து காத்தருளும்படி நரசிம்மரிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.இந்நிலையில், ராமகிருஷ்ணனுக்கு மீண்டும் ஒரு கனவு வந்தது. காட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ராமகிருஷ்ணனைச் சில கொள்ளையர்கள் பிடித்து ஒரு மரத்தில் கட்டப் பார்த்தார்கள். அப்போது நரசிம்மர் அங்கே வந்து சிங்கம் போல் கர்ஜனை செய்ய, அந்த ஒலியைக் கேட்டு அந்தக் கொள்ளையர்கள் அனைவரும் பயந்தோடி விட்டார்கள். இக்காட்சியைக் கனவில் கண்ட ராமகிருஷ்ணனுக்கு, நரசிம்மரின் அந்தக் கம்பீரமான கர்ஜனை தன்னை எப்போதும் காக்கும் என்ற நம்பிக்கை உண்டானது.

வீட்டையும் உறவுகளையும் செல்வத்தையும் விடுத்துத் துறவறம் பூண்டார் ராமகிருஷ்ணன். ஸ்வயம்பிரகாசானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் என்று பெயர் பெற்றார். பற்பல ஊர்களுக்கு நடைபயணமாகச் சென்று பாகவத புராணத்தைப் பிரச்சாரம் செய்தார். மக்கள் அவரை ‘ஆலங்குடி பெரியவர்’ என்று அன்போடு அழைத்தார்கள்.ஒருமுறை காவிரி நதியில் ஆலங்குடி பெரியவர் நீராடச் சென்ற போது, ஆற்றிலிருந்த முதலை அவரது காலைக் கவ்வியது. அப்போது “ஹரி!” “ஹரி!” என்று தனது இஷ்ட தெய்வமான நரசிம்மரை அழைத்தார். வானில் சிங்கத்தின் கர்ஜனை ஒன்று கேட்டது. அதைக் கேட்டு அஞ்சிய முதலை அவரது காலை விட்டு அகன்று சென்றது. முதலை கவ்வியதால் அவரது காலில் பெரும் காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்தக் காயமும்நரசிம்மரின் அருளால் விரைவில் குணமானது.ஒருமுறை ஒரு கிராமத்தில் பாகவத புராணச் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஆலங்குடி பெரியவர். அப்போது அவ்விடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. அதைக் கண்டு அங்கிருந்த பக்தர்கள் அஞ்சினார்கள். ஆனால் ஆலங்குடி பெரியவரோ, “நம் அனைவருக்குள்ளும் உள்ள நரசிம்மன் தான் அந்தப் பாம்புக்குள்ளும் இருக்கிறான். யாரும் அஞ்ச வேண்டாம்!” என்று சொல்லி நரசிம்ம மந்திரத்தை ஜபம் செய்தார். அந்தப் பாம்பு யாரையும் தீண்டாமல் வந்த வழியே திரும்பிச் சென்றது.

ஒரு நரசிம்ம ஜயந்தி நன்னாளில், திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் பிரகலாத சரித்திரம் பற்றிச் சொற்பொழிவு ஆற்றி முடித்தார் ஆலங்குடி பெரியவர். அந்தச் சொற்பொழிவு முடிந்தவுடன் தனது பூதவுடலை நீத்தார்.ஆலங்குடி பெரியவர் வரலாற்றில் நாம் கண்டது போல், அடியவர்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நரசிம்மர் தனது கர்ஜனையால் சிதைத்து விடுவதால், நரசிம்மப் பெருமாள் ‘சாஸ்தா’ என்றழைக்கப்படுகிறார். ‘சாஸ்தா’ என்றால் தீமைகளைச் சிதைப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 208-வது திருநாமம். “சாஸ்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்தத் தீங்கும் வராமல் நரசிம்மர் காத்தருள்வார்.

209. விச்ருதாத்மனே நமஹ (Vishruthaathmane namaha)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள சிம்மாசலம் என்ற திருத்தலத்தில் திருமால் வராக-நரசிம்மராக - பன்றி முகத்தோடும், மனித உடலோடும், சிங்கத்தின் வாலோடும் - காட்சியளிக்கிறார். வருடம் முழுவதும் சந்தனக் காப்பால் மூடப்பட்டிருக்கும் பெருமாளின் திருமேனியை, அட்சய திருதியை நாளில் மட்டும் சந்தனக் காப்பு இல்லாமல் தரிசிக்கலாம். ஏன் வராகநரசிம்மனாக அப்பெருமாள் வடிவெடுத்தார்?சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனத்சுஜாதர் ஆகிய நான்கு முனிவர்களும் திருமாலைத் தரிசிப்பதற்காக வைகுந்தத்துக்குச் சென்றார்கள். ஆனால் அங்கிருந்த காவலாளிகளான ஜயனும் விஜயனும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. “பக்தர்கள் பகவானைத் தரிசிக்கச் செல்லும் போது, அவர்களைத் தடுக்கும் உரிமை யாருக்குமில்லை. எங்களைத் தடுத்த நீங்கள் வைகுந்தத்தில் இருக்கத் தகுதியற்றவர்கள். நீங்கள் இருவரும் பூமியில் அசுரர்களாகப் பிறப்பீர்களாக!” என்று சாபம் அளித்தார்கள் முனிவர்கள்.

அந்தச் சாபத்தின் விளைவாக, ஜயவிஜயர்களே இரணியகசிபு-இரணியாட்சனாகவும், ராவணன்-கும்பகர்ணனாகவும், சிசுபாலன்-தந்தவக்த்ரனாகவும் மூன்று முறை பூமியில் பிறந்தார்கள் என்பது வரலாறு. ஜயவிஜயர்கள் பூமியில் இரணியகசிபு-இரணியாட்சனாகப் பிறந்த போது, திருமால் மேல் அளவு கடந்த அன்பும் பக்தியும் கொண்ட சுமுகன் என்பவனை வைகுந்தத்தின் வாயில் காப்பாளனாக நியமித்தார் திருமால்.இரணியாட்சன் பூமி தேவியைப் பிரளயக் கடலில் மறைத்து வைத்தான். அவனிடமிருந்து பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்று திருமாலிடம் பிரார்த்திப்பதற்காகத் தேவர்கள் வைகுந்தம் சென்றார்கள். அசுரர்களுடன் போர் புரியச் சொல்லித் தேவர்கள் திருமாலைத் தொந்தரவு செய்வதைப் பக்தனாகிய சுமுகன் விரும்பவில்லை. அதனால் தேவர்களை வைகுந்தத்துக்குள் அனுமதிக்க மறுத்தான். இச்செயலால் வெகுண்ட பிரம்மா, “ஜயவிஜயர்கள் பூமியில் பிறந்தது போல், நீயும் பூமியில் பிறக்க வேண்டும்!” என்று சபித்துவிட்டு, அவனது தடையை மீறி உள்ளே சென்றார்.உள்ளே எழுந்தருளியிருந்த திருமால் பிரம்மாவிடம், “பிரம்மதேவரே! ஜயவிஜயர்களைப் போல் ஆணவத்தால் சுமுகன் உங்களைத் தடுக்கவில்லை. என் மீது உள்ள பக்தியால்தான் தடுத்தான். நீங்கள் என்னை அடிக்கடி தொந்தரவு செய்வதை விரும்பாமல் தான் அவ்வாறு செய்தானே ஒழிய தவறான நோக்கம் ஏதும் அவனுக்கில்லை!” என்று விளக்கினார்.

“அடடா! இதை அறியாமல் அவசரப்பட்டு சுமுகனைச் சபித்து விட்டேனே!” என்றார் பிரம்மா. “பரவாயில்லை! ஜயன் இப்போது பூமியில் இரணியகசிபுவாகப் பிறந்துள்ளான். அவனது மகனாகவே இந்த சுமுகன் பூமியில் பிறக்கட்டும். தந்தைக்கு நேர்மாறான தனயனாக, உலகமே கொண்டாடும் மகா பக்தனாக அவன் விளங்குவான். எனது பக்தனின் புகழ் உலகில் என்றும் நிலைத்திருக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்!” என்று கூறினார் திருமால். மேலும் தேவர்கள் பிரார்த்தனைக்கிணங்கி, வராக அவதாரம் செய்து இரணியாட்சனை வதைத்து பூமியை மீட்டார் திருமால்.
சுமுகன் என்ற அந்த வாயில் காப்பாளனே பூமியில், இரணியகசிபுவின் மகனான பிரகலாதனாகத் தோன்றினான். திருமால் கூறிய படியே, இன்றும் பக்தப் பிரகலாதன் என்று உலகமே புகழும்படியான நீடித்த புகழுடன் திகழ்கிறான். அவன் திருமால் பக்தனாக இருப்பதை விரும்பாத இரணியன், திருமாலை வணங்கக்கூடாது என்று பலவாறு சொல்லிப் பார்த்தான். எவ்வளவு சொல்லியும் பிரகலாதன் கேட்காததால், அவனை அழிக்க நினைத்தான். ஆனால் இரணியன் உண்டாக்கிய அனைத்து இன்னல்களிலிருந்தும் பிரகலாதனைக் காத்து, இறுதியில் தூணைப் பிளந்து நரசிம்மராகத் தோன்றி இரணியனை வதைத்தார் திருமால்.

நரசிம்ம மூர்த்தியிடம் பிரகலாதன், “சுவாமி! இப்போது சிங்க வடிவில் உங்களைத் தரிசித்தேன். முன்பு வராக அவதாரத்தில் பன்றி வடிவில் நீங்கள் தோன்றினீர்களே! அந்த வராகத் திருக்கோலத்தைத் தரிசிக்கும் பாக்கியம் அடியேனுக்குக் கிட்டுமா?” என்று பிரார்த்தித்தான். அவனுக்கு அருள்புரிவதற்காக, ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில், பன்றி, மனிதன், சிங்கம் மூன்றும் கலந்த வடிவத்தோடு வராக-நரசிம்மராகத் திருமால் காட்சியளித்தார். அவரைத் தான் நாமும் வராக நரசிம்மராக அங்கே தரிசிக்கிறோம்.திருமாலின் இந்த விசேஷத் தோற்றத்தைக் கண்ட பிரம்மா, “திருமாலே! வைகுந்தத்திலிருந்த உனது பக்தன் சுமுகனின் புகழ் உலகெல்லாம் பரவ அவனைப் பிரகலாதனாக அவதரிக்கச் செய்தீர்கள். ஆனால் அந்தப் பிரகலாதனோ, எப்போதும் உங்கள் புகழைப் பாடி உமது புகழ் உலகெங்கும் ஒலிக்கும்படிச் செய்துவிட்டானே! தாய் எட்டு அடி பாய்ந்தால், குட்டி எண்பது அடி பாய்கிறதே!” என்று கூறி வியந்தார்.

ஆம் வாசகர்களே! அன்று பிரகலாதனுக்கு அருள்புரிந்தபடியால் தானே நரசிம்மரின் புகழ் இன்றும் எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது? பக்தனால் அன்றோ பகவானுக்குப் பெருமை? அதனால் தான் நரசிம்மர் ‘விச்ருதாத்மா’ என்றழைக்கப்படுகிறார். ‘விச்ருதாத்மா’ என்றால் எங்கும் புகழ் ஒலிக்கும்படி விளங்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 209-வது திருநாமம். “விச்ருதாத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், நரசிம்மர் அருளால், உலகமே போற்றிப் புகழும் படிச் சீரோடும் சிறப்போடும் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

* திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!