×

விதிகளை மீறி கல்குவாரி செயல்படுவதாக கூறி லாரிகளை மக்கள் சிறைபிடிப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் குன்னத்தூர் ஊராட்சி உள்ளது. கடந்த சில வருடங்களாக தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரி தொடங்கப்பட்டது. முதல் பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அரசு விதிமுறைகளை கடைபிடிக்கப்படுவதில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. குறிப்பாக, அரசு விதிமுறைகளுக்கு உட்படாமல் இரவு நேரங்களில் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்களை கொண்டு வெடிவைத்து பாறைகளை தகர்ப்பது, கனரக வாகனங்கள் மூலமாக கற்களை ஏற்றிக்கொண்டு அகலம் குறைந்த சாதாரண கிராம சாலைகளில் எதிரே வரும் வாகனங்களுக்கும், அரசு பேருந்துகளுக்கு வழிவிடாமல் மக்களை அச்சுறுத்தும் வண்ணம் லாரிகள் வேகமாக ஓட்டுவது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.இதன் காரணமாக குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குன்னத்தூர் மற்றும் தச்சூர் கிராமத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் சார்பாக தமிழக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு  அதிகாரிகளுக்கும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை உபயோகப்படுத்தி பாறைகளை தகர்க்கும் போது மேகம் சூழ்ந்தார் போல் இந்த கிராமங்களின் மீது தூசி படர்வதும் அதனால் இங்கு வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசக் கோளாறுகளுக்கு உள்ளாவதுகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தது.இந்நிலையில், தொடர்ந்து இதே நிலை நீடிப்பதை அறிந்த இந்த இரண்டு கிராம மக்களும் ஒன்றிணைந்து பேசி தங்களுக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என முடிவெடுத்து, அதன்படி இந்த நிகழ்வு அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று சேர்வதை வலியுறுத்தும் விதமாக இந்த கல்குவாரியில் இருந்து வெளியே கற்களை ஏற்றிக்கொண்டு சென்றிருந்த லாரிகள் மற்றும் கற்களை ஏற்ற வந்த லாரிகள் என ஏழு லாரிகளை நேற்று காலை தச்சூர் கிராம மக்கள் சிறை பிடித்தனர். இந்த லாரிகள் அனைத்தும் தச்சூர் கிராமத்தின் முக்கிய பகுதியில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் நிறுத்தப்பட்டு அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த நிகழ்வு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலீசார், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து அந்த கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘24 மணி நேரமும் இந்த கல்குவாரியை இயக்கி வருகின்றனர். அரசு அனுமதித்த அளவை தாண்டி அதிகபட்ச வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை தகர்க்கும்போது ஏற்படும் பெரும் அதிர்வுகளால் சிறிதளவு நில நடக்கும் ஏற்படுவது போல் உணர்கிறோம். இதேநிலை, தொடர்ந்து நீடித்தால் நாங்கள் இப்பகுதியில் வசிக்க முடியாது. அரசின் விதிமுறைகளோடு செயல்பட்டால் எங்களுக்கு பாதிப்புகள் இருக்காது. இதனை செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்….

The post விதிகளை மீறி கல்குவாரி செயல்படுவதாக கூறி லாரிகளை மக்கள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalguari ,Chennai ,Chengalbatu District ,Madurandhakam Union ,Kalkugari ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...