×

இறைவனின் சத்தியங்கள்..! சத்தியம் எதற்காகச் செய்யப்படுகிறது?

சொல்லப்போகும் செய்தியின் முக்கியத்துவம் மக்கள் மனங்களில் நன்றாகப் பதிய வேண்டும்; அந்தச் செய்தியின் மீது மக்களுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக. மனிதர்கள் சத்தியம் செய்யவேண்டும் எனில் படைத்த இறைவன் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.  படைப்பினங்கள் மீது சத்தியம் செய்யக்கூடாது. தாய் மேல் ஆணை, தந்தை மேல் சத்தியம், குழந்தை மீது சத்தியமாக என்றெல்லாம் சத்தியம் செய்வதை மார்க்கம் தடுத்துள்ளது.

படைப்பினங்கள் மீது சத்தியம் செய்யும் உரிமை இறைவனுக்கு மட்டுமே உரியது. இறைவன் தன் இறுதிவேதமான குர்ஆனில், தான் படைத்தவற்றின் மீது சத்தியமிட்டுச் சில செய்திகளைச் சொல்கிறான். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும். ஒன்று,   அந்தப் பொருட்களைப் படைத்துள்ள தன் வல்லமையைத் தெரிவிப்பதற்காக. அடுத்து, ஆணையிட்டுச் சொல்வதன் மூலம் சொல்லப்படும் செய்தியின் முக்கியத்துவம் மனங்களில் பதிய வேண்டும் என்பதற்காக. ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போம்.

திருக்குர்ஆனின் 91ஆம் அத்தியாயம் “அஷ்ஷம்ஸ்”(சூரியன்) என்பது. இதில் இறைவன் சிலவற்றின் மீது மீண்டும் மீண்டும் சத்தியம் செய்து சில செய்திகளைக் கூறுகிறான். முதலில் சத்தியங்களைப் பார்ப்போம்.

1. சூரியன்மீது சத்தியமாக...

2. அதன் வெயிலின் மீது சத்தியமாக...

3. சந்திரன்மீது சத்தியமாக, அது சூரியனைத் தொடர்ந்து வரும்போது...

4. பகலின் மீது சத்தியமாக, அது சூரியனை வெளிப்படுத்திக் காட்டும்போது...

5. இரவின் மீது சத்தியமாக, அது சூரியனை மறைத்துக் கொள்ளும்போது...

6. வானத்தின் மீதும் அதை அமைத்தவன் மீதும் சத்தியமாக...

7. பூமியின் மீதும் அதை விரித்தவன் மீதும் சத்தியமாக...

8. மனித ஆன்மாவின் மீது சத்தியமாக...

9. அதனைச் செம்மைப்படுத்தியவன் மீது சத்தியமாக

10. பின்னர் அதன் தீமையையும் தூய்மையையும் அதன் உள்ளுணர்வில் வைத்தவன் மீது சத்தியமாக...(91:1-10)

மொழிபெயர்ப்பே இத்தனை கவிதை நயத்துடன் இருக்கும் போது வேதத்தின் மூலமொழியில் இந்தத் திருவசனங்களை ஓதுவது ஓர் அற்புதமான அனுபவமாகும். உறுதியாகச் சத்தியங்கள் செய்தபிறகு இறைவன் சொல்லவரும் செய்தி என்ன? அடுத்த இரண்டு வசனங்களில் வருகிறது. “நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டான் மனதைத் தூய்மைப்படுத்தியவன்; தோற்றுவிட்டான் அதை நசுக்கியவன்.

”(91:9-10) மனதைத் தூய்மைப்படுத்தியவன் வெற்றிபெற்றுவிட்டான் என்றால் இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும்தான். மனதைத் தூய்மைப்படுத்துதல் என்பது சாதாரண விஷயமா என்ன? இறை தியானங்கள், தொழுகை, நோன்பு, தான தர்மங்கள், அறச் செயல்கள், இறைவனுக்காக அர்ப்பணித்தல் என எத்தனை எத்தனையோ பயிற்சிகள் அதற்குத் தேவைப்படுகின்றன.

அது மட்டுமல்ல, அடுத்த வசனத்தில் சொல்லியிருப்பது போல் மனதை நசுக்கிவிடாமலும் இருக்கவேண்டும். மனத்தை நசுக்குபவை எவை? ஒன்றா இரண்டா? இறைமறுப்பு, இணைவைப்பு, நயவஞ்சகம், பொய், காமம், குரோதம், களவு, பேராசை, வரம்பு மீறிய உலக மோகம் என அது ஒரு நீண்ட பட்டியல்...! இத்தகைய தீமைகளால் மனதை நசுக்கிவிடாமல் மேற்சொன்ன அறச்செயல்களால் மனதைத் தூய்மைப்படுத்தியவன் நிச்சயம் வெற்றிபெற்றுவிட்டான். இதற்கு இறைவனின் சத்தியங்கள் சாட்சி.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

Tags : Lord ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்