×

வள்ளுவர் வழியில் மகாத்மா!

குறளின் குரல்-15

மகாத்மா காந்தியின் கொள்கைகளிலேயே தலையாய கொள்கை என்பது அகிம்சைக் கொள்கைதான். உலகம் வியந்து பாராட்டிய கொள்கை அது. பலப்பல  நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் திருவள்ளுவரால் மகாத்மா போற்றிய அகிம்சைக் கொள்கை பேசப்பட்டுக் கொண்டாடப் பட்டிருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.  அகிம்சை என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்தவில்லையே தவிர அந்தக் கொள்கையை வலியுறுத்தும் பல குறட்பாக்களை அவர் எழுதிச்  சென்றிருக்கிறார். வள்ளுவரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நெறிகளில் அகிம்சை நெறியும் ஒன்று என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. காந்தியின்  அகிம்சைக் கொள்கைக்கு நேரடிச் சாட்சிபோல பல திருக்குறள்கள் அமைந்துள்ளன.

'சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.’
(குறள் எண் 311)

சிறப்பைத் தருகிற பெரிய செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும் சரி. ஒருபோதும் அடுத்தவர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

'வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து.’
(குறள் எண் 250)

தன்னை விட எளியவரை தான் துன்புறுத்த எண்ணும்போது தன்னைவிட வலியவர் தன்னை வருத்துமிடத்தில் தான் அஞ்சி நிற்பதை
நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி எளியவர்களைத் துன்புறுத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.

'செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக் காக்கிலென் காவாக்கால் என்?’
(குறள் எண் 301)

தன் கோபம் பலிக்கும் இடத்தில் அதைத் தடுக்க வல்லவனே சினமற்றவன். பலிக்காத இடத்தில் அவன் தன் கோபத்தைத் தடுத்தால் என்ன, தடுக்காவிட்டால்  தான் என்ன?

'இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.’
(குறள் எண் 308)

சுடர்மிகுந்த பெரிய தீ வந்து தோய்ந்தாற்போன்ற பெரும் துன்பத்தை ஒருவன் செய்த போதும் அவன்மீது சினம் கொள்ளாதிருப்பதே நல்லது.

'கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.’
(குறள் எண் 312)

ஒருவன் கறுவு கொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு நாம் திரும்பவும் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கோட்பாடாகும்.

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.’
(குறள் எண் 314)

தீங்கு செய்தவர்களைத் தண்டிக்கும் முறை எதுவென்றால், தீங்கு செய்தவர்களே வெட்கப் படும் படியாக அவர்களுக்கு நன்மையைச்
செய்வதேயாகும்.

'இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.’
(குறள் எண் 316)

துன்பம் என்று தாம் உணர்ந்தவற்றை அடுத்தவர்களுக்குச் செய்யாமல் விட்டுவிட வேண்டும்.

'இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?’
(குறள் எண் 987)

வெறுப்புக்கு வெறுப்பு, தீமைக்குத் தீமை எனப் பாராட்டாமல் பிறரிடம் அன்பு செலுத்தி, துன்பம் செய்தவர்க்கும் இனியவையே செய்து வாழ்வதுதான் சிறப்பானது.....

* அகிம்சை என்பது மகாத்மா காந்தி புதிதாய்க் கண்டுபிடித்த தத்துவம் அல்ல. அது ஏற்கெனவே நம்முடைய வேதங்களிலும் புராணங்களிலும் இதிகாசங்களிலும்  சொல்லப்பட்ட ஒன்றுதான். வள்ளுவரும் அதைப் பேசியிருக்கிறார் என்பதே வள்ளுவத்தின் பெருமை. அந்த உயரிய அகிம்சைத் தத்துவத்திற்குப் புத்துயிரூட்டி  அதை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார் மகாத்மா. உலக வரலாற்றில் அதை ஒரு போராட்ட ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றிகண்டார் காந்தி  என்பதுதான் அவரின் மகத்துவம்.

அகிம்சை என்பது என்ன? அடுத்தவர்கள் நமக்கு என்ன கெடுதல் செய்தாலும் பதிலுக்கு அவர்களுக்கு நாம் எந்தக் கெடுதலும் செய்யாமல் அவர்கள் செய்யும்  கெடுதலைப் பொறுமையாய்ச் சகித்துக் கொள்வது. இதனால் எதிராளி மனம் மாற வாய்ப்புத் தரப்படுகிறது. எதிரி மெல்ல மெல்ல மனம் மாறுகிறான். தன்  தவற்றை உணர்ந்து தன்னை அவன் திருத்திக் கொண்டு நம்மேல் அன்பு பாராட்டத் தொடங்குகிறான். இது ஓர் உளவியல் விஞ்ஞானம். அகிம்சை பகைவனை  அழிக்காமல் பகைமையை அழித்து விடுகிறது. எதிரியையும் நண்பராக்க உதவும் மிகச் சிறந்த ஆயுதம் அகிம்சை.

வன்முறையால் ஒருவரை மாற்ற முனையும்போது வற்புறுத்தலுக்காக அவர் மாறுகிறாரே அன்றி உண்மையான மனமாற்றம் நிகழ்வதில்லை. எனவே வாய்ப்பு  கிடைக்கும்போது எதிர்காலத்தில் அதே வன்முறையைப் பயன்படுத்திப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு அவர் ஆழ்மனத்தில் படிகிறது. வன்முறை  சமுதாயத்தின் நிம்மதியையும் தனி மனிதனின் நிம்மதியையும் கெடுக்கிறது. இந்த உளவியலை ஆராய்ந்து அறிந்தார் மகாத்மா. டால்ஸ்டாயின் புத்தகங்களில்  மனம்தோய்ந்த அவர், அகிம்சைக்கான கருத்தோட்டத்தைத் தெளிவாகத் தம் மனத்தில் உருவாக்கிக் கொண்டார்.

அகிம்சை நெறியையே போருக்கான ஓர் ஆயுதம்போலக் கையாண்டு அந்த ஆயுதத்தின் மூலம் நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேயரை  வெற்றிகொள்ள எண்ணினார். அதில் வெற்றியும் பெற்றார். அவர் உண்மையில் ஆங்கிலேயர்களை வெல்லவில்லை. ஆங்கிலேயர்களின் மனங்களை  வென்றுவிட்டார்! அவர் அவ்விதம் வெற்றி பெற்றதற்கும் நாம் சுதந்திரம் பெற்றதற்கும் அவர் அணியில் இருந்த அகிம்சைப் படை வீரர்கள்தான் முக்கியக் காரணம்.  அகிம்சை நெறியில் தோய்ந்து அந்த நெறிக்காகத் தன் உயிரையே கொடுத்த திருப்பூர் குமரன் பெயர் வரலாற்றில் கம்பீரமாகப் பதிவாகியிருக்கிறது.

'தாயின் மணிக்கொடி பாரீர்- அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!’ என்ற பாடலில் 'கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர்! - அங்கு காணரும் வீரர் பெரும்  திருக்கூட்டம் நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்  நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்!’ என தீர்க்கதரிசனத்தோடு எழுதுகிறார் மகாகவி பாரதி. ஆடுவோமே  பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே என சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே சுதந்திரம் கிடைத்ததாக எழுதியவர்  அல்லவா அந்த மகாகவி. தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் என்ற பாரதியின் வரிகளுக்குத் தன் வாழ்வால் உரை விளக்கம் எழுதியவர் திருப்பூர்  குமரன்.

மகாத்மாவின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திமயமாக வாழ்ந்து இளம்வயதில் மறைந்த திருப்பூர் குமரன் வாழ்வில் ஒரு வியப்பு. தேதியும் ஆண்டும் வேறு  வேறானாலும் அவர் காந்தி பிறந்த அக்டோபர் மாதம்தான் பிறந்தார். (அக்டோபர் 4, 1904.) காந்தி மறைந்த ஜனவரி மாதம்தான் மறைந்தார். (ஜனவரி 11, 1932.)  திருப்பூர் குமரன் இறக்கும்போது அவர் வயது வெறும் 27 மட்டுமே. குமரன் உயிர்துறக்கக் காரணமாக இருந்த அந்த மோசமான தினத்தன்று சுதந்திர எழுச்சி  ஊர்வலத்தில் கொடிதாங்கி நடந்தார் அவர்.

அதே ஊர்வலத்தில் உடன் நடந்தவர்கள் பி.எஸ். சுந்தரம், ராமன் நாயர், நாச்சிமுத்துக் கவுண்டர், பொங்காளி முதலியார், நாச்சிமுத்துச் செட்டியார், சுப்பராயன்,  அப்புக்குட்டி, நாராயணன் உள்ளிட்ட பற்பல தியாகிகள். ஆங்கிலேயர் மேல் கொண்ட அச்சத்தில் மக்கள் உறைந்திருந்த காலம் என்பதால் ஊர்வலத்தில்  கலந்துகொண்டவர்களின் கூட்டம் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இருந்தது. காவல் துறையினர் ஆவேசத்தோடு கம்பால் அடித்த அடியில் சுந்தரத்திற்கு  நிரந்தரமாகக் காது செவிடாயிற்று. அதேபோல் தலையில் விழுந்த பலமான அடியால் குமரனின் மண்டையோட்டுச் சில் உடைந்து இரண்டரை சென்டிமீட்டர்  தலைக்குள் போயிற்று.

குமரன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கீழே விழுந்தார். அந்த நேரத்திலும் கையில் பிடித்திருந்த கொடியை மட்டும் அவர் விடவேயில்லை. கொடியை அவர்  கைவிரல்களிலிருந்து இழுத்துப் பறிக்க நினைத்த காவல் துறையினர் முயற்சி பலிக்கவில்லை. பல மருத்துவர்கள் குமரனுக்கு மருத்துவம் பார்க்கத்  தயங்கினார்கள். ஆங்கிலேயரைப் பற்றிய அச்சமே காரணம். ரங்கநாதன் என்ற மருத்துவர் ஒருவர் மட்டும் மனம்பொறுக்காமல் தைரியமாக மருத்துவம் பார்த்தார்.  ஆனால் மண்டையோட்டுச் சில்லே உடைந்திருந்ததால், மருத்துவச் சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை.

ஜனவரி 11 ஆம்தேதி குமரன் காலமானார். குமரனின் இறுதி ஊர்வலத்தில் அச்சத்தால் மிகக் குறைவான நபர்களே கலந்துகொண்டார்கள். குமரனின் தம்பி  ஆறுமுகம் கொள்ளி வைத்தார். குமரன் தேசத்தின் பொதுச் சொத்து என்று கூறிவெங்கடாசலம் பிள்ளை, மாணிக்கம் செட்டியார், ராஜகோபால ஐயர் ஆகிய தேச  பக்தர்களும் கண்களில் கண்ணீர் வழிய குமரன் உடலுக்குக் கொள்ளி வைத்தனர். ஆண்டுகள் பல ஓடின. குமரன் கனவுகண்ட சுதந்திரம் நமக்குக் கிடைத்தது.  ஆனால் அதைக் கண்டு மகிழக் குமரன்தான் இல்லை.

குமரனின் தியாகத்தை கெளரவிக்கும் விதமாக, திருப்பூர்குமரன் நூற்றாண்டை ஒட்டி அவர் திருவுருவைத் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. திருப்பூர்  ரயில் நிலையம் அருகே குமரனுக்கு ஒருநினைவில்லம் அமைக்கப்பட்டுள்ளது. குமரன் வாழ்க்கை நிகழ்வுகளைச் சித்தரிக்கும் சில ஓவியங்கள் அங்கு  காணப்படுகின்றன. எந்தச் சாலையில் திருப்பூர் குமரன் மயங்கி விழுந்து காலமானாரோ அந்தச் சாலைக்கு குமரன் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த  ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் குமரன் பிறந்த தினம் தமிழக அரசின் விழாவாக அமையும் என்ற அரசு அறிவிப்பும் அண்மையில் வந்துள்ளது.

இதெல்லாமே வள்ளுவர் வலியுறுத்தி மகாத்மா பின்பற்றிய அகிம்சை நெறிக்குக் கிடைத்த வெற்றிதான். அகிம்சைப் போரிலும் உயிர் பறிபோகிறதே என்றால்  வன்முறைப் போருக்கும் அகிம்சைப் போருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்: வன்முறைப் போரில் உயிர் பறிக்கப்படுகிறது. அகிம்சைப் போரில் உயிர்  விருப்பத்துடன் தியாகம் செய்யப்படுகிறது. மற்றபடி உயிரிழப்பு என்பது இருவகைப் பட்ட போரிலும் நிகழவே செய்கிறது. வன்முறைப் போரில் உயிரிழப்பு  அதிகமாக இருக்கலாம். 'புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்!'என்ற பாரதிதாசன் கனவு நிறைவேற வேண்டுமானால்  உலகம் முழுவதும் போரை விட்டொழிக்க வேண்டும்.

'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது!
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!’

என நாமக்கல் கவிஞர் போற்றிப் பாடியது அகிம்சை யுத்தத்தைத்தான். உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது இந்தப் பாடலை எழுதினார் நாமக்கல் கவிஞர். அவர்  ஏற்கெனவே பல பாடல்களை எழுதினாலும் இந்தப் பாடல் படைவீரர்கள் அணிவகுத்துச் செல்வது போன்ற சந்தமும் பாடல் தந்த உத்வேகமும் இதைப் பெரும்புகழ்  பெறச் செய்தன. வள்ளுவர் போற்றும் அகிம்சைக் கொள்கையை, மகாத்மா போற்றிய அகிம்சைக் கொள்கையை உலகம் முழுவதும் பின்பற்றுமானால் எங்கும்  சாந்தியும் சமாதானமும் நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Tags : Valluvar ,
× RELATED திருக்குறளில் வேள்வி!