×

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: குகன்

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

தெரிந்த பாடல்தான் இது. சாதாரண சொற்களில் வாழ்க்கை உண்மையைப் புரியவைத்து,தெளிவுக்கான வழியைச் சொல்லும் பாடல் இது. யார் எழுதியது என்று  ஆராய்ச்சியா செய்ய வேண்டும்? கண்ணதாசன்தான். இப்பாடல் வரிகளை, ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் பொருத்திப் பார்க்கலாம்.  ஒவ்வொருவரின் பாதையும் மாறி வந்திருக்கிறது. அவர்களுக்கு அது புரிந்தது. ஆம்! தங்களுக்குப் புரிந்ததை கை கொண்டார்கள்; கடைபிடித்தார்கள். இன்று வரை  நிலைத்து நிற்கும் உன்னத இடத்தை அடைந்தார்கள்.

அவர்களில் சுக்கிரீவன், விபீஷணன் போலப் பதவி பெற்றவர்களும் உண்டு; சபரியைப்போல எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் பக்தி-அன்பு செலுத்திய  குகனைப் போன்றவர்களும் உண்டு. சபரிக்காவது, வழிகாட்ட மதங்க மாமுனிவர் என்பவர் இருந்தார். ஆனால் குகனுக்கோ? கங்கை வேடனான குகனுக்கு  வழிகாட்டி என்று யாரும் கிடையாது. கங்கை வேடனை நினைக்கும்போது, காளத்தி வேடனான கண்ணப்பன் நினைவு வரும் பலருக்கு. தூய்மையான பக்தியில்  தலைசிறந்த குகனையும் கண்ணப்பனை யும் பற்றி,’கங்கைவேடனும் காளத்திவேடனும்’என அறிஞர் பெருமக்கள் பலரும் சொல்லிச்சொல்லி வியப்பார்கள்.
        
வாருங்கள்! நாம் குகனைப்பற்றி வியக்கலாம். ஆழம் காண முடியாத கங்கையின் ஆழம் கண்ட குகனுக்கு ராமர் மீது இருந்த பக்தியின், அன்பின் ஆழம் காண  யாராலும் முடியாது; இயன்றவரை பார்க்கலாம்.

வனவாசத்திற்காக புறப்பட்ட ராமர் கங்கைக் கரையை அடைந்தபோது வனவாசம் போன ராமரை அழைத்து வர வேண்டும் என்று புறப்பட்ட பரதன் கங்கைக்  கரையை அடைந்தபோது ராவண சங்காரம் முடிந்து ராமர் திரும்பியபோது ராம பட்டாபிஷேகம் முடிந்து விடைபெறும் போது  என நான்குவிதமான நிலைகளில், குகனைப் பார்க்கலாம். நாம் பார்க்கப் போவது. ராமனும் குகனும், பரதனும் குகனும் எனும் இரு நிலைகளில் மட்டுமே.

ராமர் - சீதை - லட்சுமணன் மூவரும் கங்கைக் கரையில் வந்து தங்கியிருந்தார்கள். ராமரைச்சுற்றி முனிவர்கள் இருக்க, தங்குமிடத்தின் வாசலில் லட்சுமணன்  காவலாக நின்று கொண்டிருந்தான். அந்த நேரத்தில், குகன் அங்கே வருகிறான். ஆயிரம் தோணிகளுக்கு உரிமையாளன் என்றெல்லாம் தொடங்கி குகனைப்பற்றி  அறிமுகப்படுத்த ஆரம்பித்த கம்பர், ‘கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான்’ என்கிறார். அதாவது, கங்கையின் ஆழம் கண்ட உயர்வானவனாம் குகன்.  அப்படிப்பட்ட குகன் சுற்றம் சூழ, ராமரைத் தரிசிக்க வந்தான்.
                   
சுற்றம் அப்புறம் நிற்கச் சுடுகணை
வில்துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து அற்றம் நீத்த மனத்தினன்; அன்பினன்; நற்றவப் பள்ளி வாயிலை நண்ணினான்
- கம்பர்

கூடவே வந்த பரிவாரங்களையெல்லாம் கொஞ்ச தூரத்திலேயே நிறுத்தி வைத்தான். அம்பறாத் துணியை நீக்கினான்; இடுப்பில் இருந்த வாளையும் நீக்கினான்;  இவ்வாறெல்லாம் செய்தவன் யார்? குற்றம் இல்லாத மனம் கொண்ட, அன்பே வடிவான குகன் என்கிறார், கம்பர். அன்பே வடிவான குகனை லட்சுமணன் உள்ளே  அழைத்துச் செல்ல, ராமரைத் தரிசித்த குகனின் மனம் மேலும் கனியப் பெற்று, அப்படியே தரையில் விழுந்து வணங்கினான். எழுந்து கைகட்டி வாய் புதைத்து  நின்றான். குகனைப் பார்த்த ராமர், ‘‘உட்கார் இங்கு’’ என்றார். ஆனால், குகன் அமரவில்லை; தேனையும் மீனையும் ராமருக்காகக் கொண்டு வந்திருப்பதாகக்  கூறினான்.
   
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லைநீத்த அருத்தியன்,.தேனும்மீனும் அமுதினுக்கு அமைவதாகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல்  திருவுளம்?’
- கம்பர்

ராமருக்காகத் தேனையும் மீனையும் குகன் கொண்டு வந்ததாகக் கூறுகிறார் கம்பர். காரணம்? இதை மட்டும் புரிந்து கொண்டால்கூடப் போதும்; நலம் பெறலாம்.  தேன் மிகவும் உயர்வான மலைகளிலும் மரங்களின் உச்சியிலும் தேனீக்கள் கூடு கட்டியிருக்கும். அது மட்டும் அல்ல! தேனுக்கு ஒரு தன்மை உண்டு. எத்தனை  ஆண்டுகள் ஆனாலும் சரி! தேனீக்களால் சேகரிக்கப்பட்ட உண்மையான தேன் கெட்டுப் போகாது. அந்தத் தேனைப் போன்றவன்தான் குகன். ராமரிடம் அவன்  கொண்ட தூய்மையான பக்தி, மிகவும் உயர்வானது; எந்தக் காலத்திலும் கெட்டுப்போகாத தேனைப் போலவே, குகனின் பக்தியும் கெட்டுப் போகாது.

இதை நமக்கு உணர்த்துவதற்காகவே, குகன் தேனைக் கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டார் கம்பர். சரி! தேனைக் கொண்டு வந்த குகன் கூடவே, மீனையும் ஏன்  கொண்டு வர வேண்டும்? மிகவும் உயர்வான இடத்தில் இருக்கும் தேன்; மீனோ மிகவும் ஆழமான இடத்தில் இருக்கும். மீனுக்கு விசேஷத் தன்மைகள் பல  உண்டு. மீன், தான் இருக்குமிடத்தில் உள்ள அழுக்குகளை எல்லாம் நீக்கி அந்த இடத்தைத் தூய்மையாக வைத்திருக்கும். அதுபோலவே குகனும் ராமரிடம் மிகவும்  ஆழமான பக்தி கொண்டவன்தான் மட்டுமல்லாது தன்னைச் சார்ந்தவர்களையும் ராம பக்தர்களாகச் செய்தவன்.

அடுத்து, மீனுக்கு மற்றொரு தன்மை உண்டு. மீனை என்னதான் சேற்றில்போட்டு உழப்பி எடுத்தாலும், மீனின் உடலில் சேறு படியாது. அதுபோல, குகனும்  உலகியல் தீமைகள் எவற்றிலும் அகப்படாதவன். எத்தனை காலமானாலும் கெட்டுப் போகாத தேன், தான் தூய்மையாக இருப்பதோடு, தானிருக்கும் இடத்தையும்  தூய்மையாக வைத்து, சேற்றில் ஒட்டாமல் இருக்கும் மீன் எனும் இரண்டையும் குகன் கொண்டு வந்ததாகக் கம்பர் குறிப்பிட்டதன் காரணம் புரிந்திருக்குமே! ஆம்!  குகனுக்கு ராமரிடம் உள்ள பக்தியின் உயர்வையும் ஆழத்தையும் காண, யாராலும் முடியாது.

அப்படிப்பட்ட குகன் இரவு முழுவதும்,தெய்வத் தம்பதிகளான ராமரையும் சீதையையும் காவல் காத்ததோடு, லட்சுமணனையும் சேர்த்தே காவல் செய்தான். அதன்  பிறகும் குகன் சும்மாயில்லை; ராமருடன் தானும் வனவாசம் செய்து உதவி புரிவதாகக் கூறி வாதாடினான். அதை மறுத்த ராமரோ, ‘‘பரதனைப் போலவே நீயும்  நாட்டைக் காக்கக் கடமைப்பட்டவன். இங்கேயே சிருங்கிபேரபுரத்தில் இருந்து, நல்லபடியாக மக்களைக் காத்து வா! பதினான்கு ஆண்டுகள் ஆனதும், திரும்பி  விடுவேன்’’ என்று சொல்லி குகனை சமாதானம் செய்தார்.

ராமர் மட்டுமல்ல! லட்சுமணனும் முதல் பார்வையிலேயே குகனைப்பற்றிய உண்மையை, அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டான்; அதனால்தான் ராமரிடம்  குகனைப் பற்றிச் சொல்லும்போது, ‘தாயினும் நல்லன் (குகன்)’ என்று சொன்னான் லட்சுமணன். குகனோ, ராமருடைய வனவாசக்கோலத்தைக் கண்டு  கதறினான்;”பூமி முழுதையும் ஆளக்கூடிய ராமா!உன்னை இப்படிப்பட்ட கோலத்தில் கண்டும், பார்த்த என் கண்களைப் பிடுங்கி எறியாமல், இன்னும் உயிரோடு  இருக்கின்றேனே!” என்று புலம்பினான்.

“பார்குலாம் செல்வ! நின்னை  இங்ஙனம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன் யான்
இன்னலின் இருக்கை நோக்கித்தீர்கிலேன்”
- கம்பராமாயணம்
         
இப்படி ஆத்மார்த்தமாக அன்பு செலுத்தும் குகனுக்கு ராமர் என்ன செய்தார்?

அன்பு உள இனிநாம் ஓர் ஐவர்கள் உளரானோம்
- கம்பர்

தசரதருக்கு நான்கு பிள்ளைகள்; ஆனால் குகனின் தூய் மையான அன்பைக் கண்டபின், தசரதரின் பிள்ளைகள் ஐந்து பேர்கள் என ஆகி விட்டதாம்.ஆம்! குகனை  தன் சகோதரனாகவே ஏற்றுக்கொண்டு விட்டார் ராமர். அது மட்டுமல்ல! குகனை தன் உயிராகவே கூறி, தன் தம்பியான லட்சுமணனை குகனின் தம்பியாகக்  கூறுகிறார்; கூடவே, சீதா தேவியைக் குகனின் தோழியாகவும் கூறுகின்றார்.

என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளவல் இந்நன்னுதல் அவள் நின் கேள்-கம்பர்

இந்த அளவிற்கு ராமரிடம் ஈடு இணை சொல்ல முடியாத அன்பும் பக்தியும் கொண்ட குகனையும்; அதற்கு ராமர் செய்த செயலையும் பார்த்தோமல்லவா?  வாருங்கள் ! குகன் அப்படியே மடைமாறப் போகிறான். அதையும் பார்க்கலாம்! அடுத்து, பரதன் ராமரைக் காட்டிலிருந்து அழைத்துச் செல்ல வரும்போது நடந்தது.  வசிஷ்டரின் அவசர அழைப்பின் காரணமாகத் தாய்மாமன் ஊரிலிருந்து திரும்பிய பரதன் அயோத்தி திரும்பியதும், நடந்தவை அனைத்தையும் தெரிந்து  கொண்டான்; உடனே போய், ராமரை அழைத்து வந்து சிம்மாசனத்தில் அமர்த்தியாக வேண்டும் என்ற முடிவோடு புறப்பட்டான்; அனைவரும் பின்தொடர,  படைகளும் பின் தொடர்கின்றன.

கங்கைக் கரையில் போய் படைகளுடன் நிற்கும் பரதனை, எதிர்க்கரையில் இருக்கும் குகன் கண்டான்; ‘‘ராமரைக் காட்டிற்கு அனுப்பியது மட்டுமின்றி, இந்தக்  காட்டிலும் ராமரை இருக்க விடமாட்டான் போலிருக்கிறதே! என் உதவியில்லாமல் இந்தப் பரதன் கங்கையைக் கடக்க முடியுமா? இவனுடைய யானைப்  படைகளைக் கண்டு நான் பயப்படு வேனா? ராமர் என்னைத் தோழன் என்று சொன்னாரே! அப்படிப்பட்ட ராமருக்காக இந்தப் பரதனை எதிர்த்து நான்  போரிடவில்லையென்றால், ‘ இந்த வேடன் ஏன் இன்னும் இறக்காமல் இருக்கிறான்? என்று என்னை ஏச மாட்டார்களா?” எனக் கொதித்தான் குகன்.

 ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
 வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
 தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ?
 ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?
- கம்ப ராமாயணம்

அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரோ?

என் உயிரான ராமன் ஆளாமல், வஞ்சனையால் அரசு பெற்ற பரதன் வந்து விட்டானா? இந்தப் பரதனுடைய படைகளை அழித்து, தர்ம வடிவான ராமரே ஆளும்  படியாக, வேடர் கொடுத்தனர் எனும் புகழ் நமக்குக் கிடைக்க வேண்டும். இவனுக்காக நாட்டையே கொடுத்த என் ராமரை, நாம் ஆளும் இந்த் காட்டில்கூட இருக்க  விட மாட்டேனென்கிறானே! இவன் மன்னனாக இருந்தால் என்ன? மன்னர்கள் நெஞ்சில் வேடர்களின் அம்புகள் பாயாதா? எனப்பல விதமாகவும் கூறி, தன் பக்க  வீரர்களைத் தயார் செய்தான்.

அதே சமயம் எதிர்க்கரையில் இருக்கும் குகனைப் பார்த்த பரதன், அமைச்சர் சுமந்திரர் மூலம் குகனைப்பற்றிய முழு உண்மைகளையும் அறிந்து கொண்டான்; அதே  விநாடியில் குகனிடம் முழுமையாகத் தன்னை இழந்தான் பரதன். குகன் மட்டும் சும்மாயிருந்தானா? வீரர்களுக்கெல்லாம் உத்தரவு போட்டு விட்டு, மெள்ளக்  கரையை நெருங்கி, எதிர்க்கரையில் இருந்த பரதனைப் பார்த்தான். துறவு பூண்டு உடம்பெல்லாம் தூசு படிந்த கோலத்தில் காட்சியளித்த பரதனைக் கண்டதும்,  குகன் மனம் சற்று அமைதியாகத் தொடங்கியது; அவன் மனதில் பரதனைப் பற்றிய உண்மை தானாகவே படரத் தொடங்கியது.

மெல்ல... ஓர் படகில் ஏறிக் கங்கையைக் கடந்து, இக்கரைக்கு வருகிறான். வந்த குகனைப் பார்த்ததும், பரதன்  குகன் திருவடிகளில் விழ குகனும் பரதன்  திருவடிகளில் விழ, தூய்மையான இரு அன்பு உள்ளங்கள் சங்கமித்தன. பரதன் தான் வந்ததற்கான காரணத்தைச் சொன்னான்; ‘‘எம் தந்தை முன்னோர்  முறையிலிருந்து தவறி விட்டார்.  அதை நீக்குவதற்காக, அண்ணனை மன்னனாக்குவதற்காக அழைத்துக்கொண்டு போக வந்தேன்’’ என்று விவரித்தான். பரதனுடைய வார்த்தைகளைக் கேட்டு, அவன் தூய உள்ளத்தை உணர்ந்து கொண்ட குகன், மறுபடியும் பரதனை வணங்கினான். ‘‘தாய்சொல் கேட்டு, தந்தை தந்த  அரசைத் தீவினையாகக் கருதி, வேண்டாமென்று அதை விலக்கினாய் எனும்போது, ஆயிரம் ராமர் சேர்ந்தாலும் ஒரு பரதனுக்கு சமமாக முடியுமா?’’ எனக்  கூறினான்.

தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி
தன்னைத் தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்ற போழ்து புகழினோய் தன்மைகண்டால் ஆயிரம் ராமர் நின்கேழ்  ஆவரோ?தெரியின் அம்மா
- கம்பராமாயணம்

எதிலுமே பற்றில்லாமல் தெய்வத்திடம் மட்டும் உறுதி யான பக்திகொண்ட ஒருவர், அதேபோல உறுதியான பக்தி கொணட ஒருவரிடம் பேதம் பாராட்ட மாட்டார்;  தன்னை இழப்பார் என்பதைக் குகன் வாயிலாகக் கம்பர் பதிவு செய்கிறார். தூய்மையான எல்லை காணமுடியாத பக்திகொண்ட குகனைப்பற்றி நாம் பார்த்தவை  ஒரு சில மட்டுமே. எந்த விதமான உறவுமுறையும் இல்லாமல்; எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பாராமல்; தூய்மையான அன்பு ஒன்றை மட்டுமே கொண்டு  பக்தி செலுத்திய குகன் ஓர் உன்னதமான வழிகாட்டி!

(தொடரும்)

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

Tags : Characters ,Kugan ,
× RELATED இசைக்கு வயது கிடையாது: வித்யாசாகர்