×

வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலத்தில் பழமையான கற்கோயில் கட்டிடத்தில் செடிகள் நிரந்தரமாக அகற்றப்படுமா?: பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த ஆதிச்ச மங்கலம் ஊராட்சியில் பழமையான கற்கோவிலில் உள்ள செடிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த அறநிலையத்துறை முன்வர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சைவ சமயக் கோயில்கள்,வைணவ சமயக் கோயில்கள், அம்மன் கோயில்கள், விநாயகர் கோயில்கள், முருகன் கோயில்கள், சௌர சமயத் திருக்கோயில்கள், அனுமார் கோயில்கள், அய்யப்பன் திருக்கோயில்கள், நவக்கிரக கோயில்கள், இதர தெய்வங்களின் திருக்கோயில்கள் கிராம தேவதைகள், குல தெய்வ மற்றும் காவல் தெய்வங்களின் கோயில்கள் என ஆயிரக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில கற்கோயில்கள் ஆகும். இவை கடும் வெயில் மழை புயல் போன்ற இயற்கையின் சிற்பங்களுக்கு ஈடு கொடுத்து கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. இக்கோயில்கள் அவ்வப்போது தமிழக அறநிலையத் துறையினரால் அடையாளம் காணப்பட்டு புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. இருப்பினும் கிராமப்புறங்களில் உள்ள பழமையான கோயில்கள் இயற்கையின் சீற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதிலமடைந்து வருகின்றது. குறிப்பாக இவ்வகை பழமையான கற் கோயில்கள் மறைக்கப்படும் அரசமரம் உள்ளிட்ட மரங்கள் முளைப்பதால் கோயில்கள் வேகமாக சிதிலமடைந்து வருகின்றது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆதிச்ச மங்கலம் கிராமத்தில் பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இக்கோயில் கருங்கல் மற்றும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் இருந்த வாகனங்கள் வைப்பு அறை சமையலறை முன்மண்டபம் சுற்றுச்சுவர் ஆகியவை முற்றிலும் சிதிலமடைந்து விட்டது. இருப்பினும் கருங்கல்லால் கட்டப்பட்ட கோயில் பகுதி மட்டும் அப்படியே உள்ளது. இக்கோயிலில் அவ்வப்போது அரசமரம் உள்ளிட்ட மரங்கள் முளைப்பதும் அவைகளை அவ்வப்போது கிராமத்தினர் மூலம் அப்புறப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இவ்வகை மரக்கன்றுகள் முளைத்து வேர் விட்டு மரமாக ஆனதை அடுத்து கோயிலின் வடகிழக்கு பகுதியில் மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.எனவே இதுபோன்று பழமையான கோயில்களில் முளைத்து வரும் மரக்கன்றுகளை ரசாயன மருந்தினைப் பயன்படுத்தி முற்றிலும் அழித்து கோயில்கள் சேதமடையாமல் பாதுகாத்திட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அறநிலையத்துறை பழமையான கோயில்களை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து பகுதிகளிலும் உள்ள பழமையான கோயில்களில் முளைத்துள்ள மரக்கன்றுகளை உரிய நிதி ஒதுக்கீடு செய்து ரசாயன மருந்தினைப் பயன்படுத்தி அளித்து பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்….

The post வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலத்தில் பழமையான கற்கோயில் கட்டிடத்தில் செடிகள் நிரந்தரமாக அகற்றப்படுமா?: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Adichamangalam ,Valangaiman ,Adicha Mangalam Panchayat ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு