×

சீன போர் கைதிகளை அடைத்து வைத்த 157 ஆண்டு பழமையான நடுவட்டம் சின்கோனா ஜெயில்: சுற்றி பார்க்க பயணிகளுக்கு அனுமதி கிடைக்குமா?

ஊட்டி:  சீன போர் கைதிகளை அடைத்து வைத்திருந்த 157 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரிட்டிஷார் காலத்து நடுவட்டம் சின்கோனா சிறைச்சாலையை பயணிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டம், அவர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. அதேசமயம் சுதந்திர போராட்ட தியாகிகளின் நரக பூமியாகவும் இருந்தது.தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவில் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்களை கண்டறிந்து, அவர்களை அடித்து துன்புறுத்தினர். மேலும், பலரையும் அழைத்து வந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறைகளில் அடைத்து வைத்து அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா, நடுவட்டம் சின்கோனா கட்டிடங்கள் மற்றும் மஞ்சூர் அருகேயுள்ள கேரிங்டன் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட அலுவலகம் ஆகியவை சிறைகளாக இருந்தன. இவை மூன்றுமே மிக மோசமான சிறைகளாக இருந்துள்ளன. 1850களில் ஊட்டி – கூடலூர் சாலை இடைப்பட்ட நடுவட்டம் பகுதியில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. அந்த சமயங்களில் நாடு முழுவதும் மலேரியா பாதிப்பு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால், மலோியா நோய்க்கு மருந்தான சின்கொய்னா நாற்றுகளை பெரு மற்றும் பொலிவியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நடுவட்டம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நடவு செய்தனர். இவற்றை நடவு செய்ய உள்ளூர் பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்களை பயன்படுத்தினர். இப்பணிகள் மிகவும் மந்தமாக நடந்தது. இதனால், 1856 முதல் 1960 வரை நடைபெற்ற ஓபியம் போர் என்று அழைக்கப்பட்ட பிரிட்டீஷ் – சீன போரில் ஆங்கிலேயர்களிடம் போர் கைதிகளாக பிடிப்பட்ட சீனர்கள் நாடு கடத்தப்பட்டு நீலகிரிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் சுமார் 200 பேர் நடுவட்டம் சிலைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தொட்டபெட்டாவில் உள்ள சின்கோனா சிறையில் 200 பேரும், கேரிங்டன் பகுதியில் உள்ள சிலையில் 100 பேரும் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து நடுவட்டம், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் சின்கோனா பயிரிடும் பணிகள், மருந்திற்காக அவற்றின் பட்டைகளை உரிக்கும் பணிகளில் சீன கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர். 1865ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இந்த சிறை செயல்பட்டது. சுதந்திரத்திற்கு பின், நடுவட்டம் சிறைச்சாலை அதை சுற்றியுள்ள தேயிலை தோட்டம் ஆகியவை, தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்தின் (டேன்டீ) பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த சிறைச்சாலையை புனரமைக்க முடிவு செய்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் நிதி பெறப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இச்சிறைச்சாலையின் வரலாறு, கை விலங்கிடப்பட்ட சீன கைதியின் பொம்மை, காவலர் பொம்ைம, சிறையில் ஓய்வெடுக்கும் சீன கைதி, கைதிகள் மீதான புகார்களை விசாரிப்பதற்கான நீதிமன்றம் போன்ற அமைப்பு  உருவ பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை கட்டிடத்தின் முகப்பில் சீன கைதிகளை கொண்டு சின்கோனா பயிரிடப்பட்டது, நன்கு வளர்ந்த மரத்தில் இருந்து மருந்திற்காக பட்டையை உறித்து, ஆங்கிலேய அதிகாரிகளின் மேலாண்மை ஆகியவை தத்ரூபமாக ஓவியமாக வரையப்பட்டுள்ளது. அங்குள்ள டேன்டீ தேயிலை தொழிற்சாலை, மாதிரி தேயிலை தொழிற்சாலையாக மாற்றப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த சூழலில் கழிப்பிட வசதி இல்லை. மேலும் சில மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.  இதற்கிடையே, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, 157 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுவட்டம் சின்கோனா சிறைச்சாலையில் மேலும் சில மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகையில்,“சின்கோனா சிறை அருங்காட்சியகத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கூடுதலாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பழமை மாறாமல் பராமரித்து மீண்டும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாவட்ட நிர்வாகமும், டேன்டீயும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், நீலகிரிக்கான சுற்றுலா முக்கியத்துவம் அதிகரிக்கும்’’ என்றனர். இதேபோல், தொட்டபெட்டா சின்கோனா வளாகத்தில் உள்ள சிறைச்சாலையையும் புனரமைத்து அருங்காட்சியமாக மாற்றினால், தொட்டபெட்டா செல்லும் பல சுற்றுலா பயணிகள் இந்த பாரம்பரிய மிக்க கட்டிடங்களை பார்க்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு….

The post சீன போர் கைதிகளை அடைத்து வைத்த 157 ஆண்டு பழமையான நடுவட்டம் சின்கோனா ஜெயில்: சுற்றி பார்க்க பயணிகளுக்கு அனுமதி கிடைக்குமா? appeared first on Dinakaran.

Tags : Cinchona Jail ,
× RELATED தொட்டபெட்டா சின்கோனா பகுதியில்...