×

அற்புத வாழ்வருள்வார் ஆத்ம நாதர்

மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவதலம் ஆவுடையார் கோயில். இத்தல ஈசன் ஆத்மநாதர். இறைவி யோகாம்பாள். தல மரமாக குருந்த மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது. புராண காலத்தில் இத்தலம் திருப்பெருந்துறை, சதுர்வேதிமங்கலம், சிவபுரம் என்றெல்லாம் வழங்கப்பட்டது. ஆத்மநாதர் கோயில் சிற்பக்கலைக்கு சான்றாக சிறப்புற கட்டப்பட்டுள்ளது. இங்கு இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவன், அம்பாள் சிற்பமும், புலையன், புலத்தி வேடத்தில் வந்த சிற்பமும் உள்ளது. இதில் அம்பாள் கழுத்தில் சங்கிலி, கையில் சுருள் வளையல் அணிந்து, பையுடன் இருக்கிறாள். இதுதவிர ஆகமங்கள் கூறும் நிவர்த்திகலை, பிரதிபாகலை, வித்யாகலை, காந்திகலை, சாந்திதீதாகலை ஆகிய பஞ்சகலைகளையும் பஞ்சாட்சர மண்டபத்தின் மேல் பகுதியில் சிற்ப வடிவில் காணலாம்.

இத்தல விநாயகர் வெயிலுவந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருட்பாலிக்கிறார். இந்த சிவதலத்தில் வழிபடுவோர்க்கு குருபலன் கூடும். மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர். தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு திருமணவரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்திக்க உடனே அப்பிரார்த்தனை நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ரூபம்(வடிவம்), அரூபம் (வடிவம் இல்லாமை), அருவுருவம்(லிங்க வடிவம்) ஆகிய மூன்று வடிவங்களில் அருளும் சிவன் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (ஸ்தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார்.

இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு “ஆத்மநாதர்’ என்று பெயர் ஏற்பட்டது. ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம். கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள்.

ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான். எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.
இத்தல மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியன், சிவப்பு அக்னி, பச்சை நிறம் சந்திரனாக கருதப்படுகின்றன. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர்.

இத்தலத்தில் குருவாக இருந்து ஈசன் மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி, சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார். இதன் அடிப்படையில், ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சந்நதிக்கு கொண்டு சென்று, படைக்கல்லில் ஆவி பறக்க கொட்டி விடுகின்றனர். அப்போது சந்நதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும். சுவாமி அரூப வடிவானவர் என்பதால், அரூபமாகி விடும் ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது. மூன்றாம்கால (காலை 11 மணி) பூஜையின் போது மட்டும் தேன்குழல், அதிரசம், வடை, பிட்டு, தோசை, பாயசம் படைக்கப்படுகிறது.

பொங்கலன்று வாழை இலை போட்டு, 16 வகை காய்கறிகளுடன், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் மற்றும் கரும்பு போன்றவை நிவேதிக்கப்படுகிறது.
தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத் தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சந்நதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சந்நதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். இவளது அபிஷேக தீர்த்தம் மற்றும் குங்குமத்தை பிரசாதமாக தருகின்றனர்.

இவளது சந்நதி முன்பாக தொட்டில், வளையல் கட்டி வழிபட்டால் புத்திரப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யமாட்டார்கள். ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது. குரு இருக்குமிடத்தில் சிஷ்யர்கள், மரியாதை கொடுப்பதற்காக அவர்முன்பு அமராமல் நின்று கொண்டிருப்பார்கள். இக்கோயிலில் ஆத்மநாதருக்கு மரியாதை செய்யும் விதத்தில், மாணிக்கவாசகர், சொக்க விநாயகர், முருகன், வீரபத்திரர் ஆகியோர் நின்ற கோலத்திலேயே இருக்கின்றனர்.

இத்திருத்தலத்தில் சோமாஸ்கந்தர் ஸ்தானத்தில் விளங்குகிறவர் மாணிக்கவாசகர். இவருக்குத்தான் உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தை பக்தோர்ச்சவம் (அடியார்க்குச் செய்யும் உற்சவம்) என்று சிலர் கூறுவர். வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி பிரம்மாவை சாரதியாக்கி சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். அச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப்போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத்தொடங்கின. தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து சிவபெருமான் வில், அம்பு என எதையும் பயன்படுத்தாமல் அசுரர்களை பார்த்து சிரித்தார்.


அசுரர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்களின் உதவி இல்லாமல், அசுரர்களை அழித்ததை கண்ட தேவர்கள் தலை குனிந்தனர். இந்த சம்பவம் இத்தலத்தில் ஜனவரி. 3ம் தேதி அன்று வெள்ளிக்கிழமை நிகழ்த்திக் காட்டப்பட  உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சென்றால் அங்கிருந்து ஆவுடையார்கோயிலுக்கு பேருந்து வசதி உள்ளன.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?