×

நாக தோஷம் போக்கும் ஆதிகேசவப் பெருமாள்

திருவாரூர் மாவட்டத்திலுள்ளது இஞ்சிகுடி. அழகிய கிராமம். முன்னொரு காலத்தில் இங்கிருந்த சந்தனக்காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார் துர்வாச முனிவர். அவரது தவத்தை மதலோலை என்ற அரக்கி கலைக்க முயன்றாள். அவளது தவறான செய்கையினால் முனிவரின் தவம் கலைந்தது. முனிவரின் எதிரே காம விகாரத்தோடு நின்று கொடிருந்தாள் மதலோலை. தவம் கலைந்ததால் முனிவருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. அவளை சினங்கொண்டு சபித்தார் முனிவர். அவரது சாபத்தால் மதலோலை கருவுற்றாள்.

அவளுக்கு அம்பரசன், அம்பன் என இரு புதல்வர்கள் பிறந்தனர். இருவருமே அசுரர்கள். அவர்கள் அசுரத் தன்மையோடு வளர்க்கப்பட்டனர். இருவரும் வளர்ந்ததும் அவர்கள் தேவர்களுக்கும், மானிடர்களுக்கும், துறவிகளுக்கும் பெரும் துன்பம் விளைவித்தனர். வேதனைப்பட்ட அவர்கள் கந்தவனத்தில் எழுந்தருளியிருந்த சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களை அந்த அசுரர்களிடமிருந்து காப்பாற்ற முடிவு செய்த சிவபெருமான் தனது இடதுபாகத்தில் அமர்ந்திருந்த பார்வதி தேவியை புன்னகையோடு நோக்கினார். அவரது பார்வையின் பொருளை உணர்ந்தாள் அன்னை.

ஓர் அழகிய இளம் பெண்ணாய், கண்டவர் மயங்கும் பேரழகு கொண்டவளாய் உருவெடுத்தாள். பின் அந்த அசுரர்களின் முன்னே போய் நின்றாள். அசுரர்கள் இருவரும் அந்தப் பெண்ணைப் பார்த்தனர். அவளது அழகில் மதி மயங்கினார்கள். மணந்தால் அவளைத்தான் மணப்பது என இருவரும் முடிவு செய்தனர். அப்போது திருமால் ஒரு வயோதிகர் உருவில் அங்கு தோன்றினார். அந்த இரு அரக்கர்களும் அந்தப் பெண்ணை தங்களுக்கே மணம் முடித்து தர வேண்டும் என அந்த வயோதிகரிடம் கேட்டனர். அதைக்கேட்ட வயோதிகர் சிரித்தார்.

‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?’’ எனக் கேட்டனர் இருவரும். ‘‘ஒரு பெண்ணை எப்படி இருவர் அடைய முடியும்?’’ கேட்டார் வயோதிகர். ‘‘அப்படியானால் இவள் எங்களுக்கு கிடைக்க மாட்டாளா?’’ ஏக்கத்துடன் கேட்டனர் இருவரும் ‘‘உங்களில் பலசாலி யாரோ அவனுக்கு இவள் கிடைப்பாள்’’ ‘‘சண்டையிடுங்கள். யார் பலசாலி என்பதை நிரூபித்துவிட்டு இவளை மணந்து கொள்ளுங்கள்’’ முதியவர் சொன்னபடி இரு அரக்கர்களும் சண்டையிட்டனர். பயங்கரமான சண்டை இருவருக்கும் நடந்தது. முடிவில் அம்பரன் தன் தம்பி அம்பனை கொன்றான். வெற்றி பெற்ற மகிழ்வில் அம்பரன் அந்தப் பெண்ணை நெருங்கினான். இளம் பெண் உருவில் இருந்த அம்பிகை காளியாக உருவெடுத்தாள்.

தன் சூலாயுதத்தை ஏவி, அம்பரனை வதம் செய்தாள். தேவர்களும் மக்களும் நிம்மதி அடைந்தனர். அம்பரனைக் கொன்றும் காளிக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இதைக்கண்ட திருமால் காளியிடம் சாந்தி அடைந்து முன்போல் சிவபெருமானின் இடது பாகத்தில் இருந்தருள வேண்டினார். தேவியும் அப்படியே இறைவனின் இடப்பாகத்தில் அமர்ந்தாள். இறைவன் பார்வதீஸ்வரர் என்ற பெயரிலும் இறைவி சாந்த நாயகி என்ற பெயரிலும் அருட்பாலிக்கும் சிவாலயம் கீழ் திசையில் இருக்க மேற்கில் திருமாலின் ஆலயம் உள்ளது.

அழகிய இந்த ஆலயத்தில் திருமால் ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் சேவை சாதிக்கிறார். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்திருந்தாலும் ஆலய முகப்பு மேற்கு திசையில் சாலையோரம் அமைந்துள்ளது. முகப்பில் மகாமண்டபத்தை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இடதுபுறம் பிள்ளையார் திருமேனியும் வலதுபுறம் ஆஞ்சநேயரின் திருமேனியும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை, உடையவர், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், நிகமாண்ட தேகர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். கருவறையில் ஆதிகேசவப்பெருமாள் ஸ்ரீதேவி பூ தேவியுடன் அருட்பாலிக்கிறார். கருவறை முகப்பின் வலது புறம் லட்சுமி நாராயணனும் எதிரே கருடாழ்வாரும் அருட்பாலிக்கின்றனர்.

இத்தலத்தின் தலவிருட்சம் நெல்லிமரம். இந்த ஆலயத்தில் இரண்டு நாகங்கள் வசிப்பதாகவும் அவைகள் பெருமாளை தரிசிப்பதுடன் தனது சட்டையை உரித்து பெருமாள் காலடியில் வைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளன என பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். காலை 9 மணி முதல் 11 மணி வரை. மாலை 5 மணி முதல் 7 மணி வரை. ஆலயம் திறந்திருக்கும். மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்து மார்க்கத்தில் பேரளம் ரயில்வே நிலையத்திலிருந்து ½ கி.மீ. தொலைவில் உள்ள இஞ்சிகுடி கிராமத்தில் சாலை ஓரம் உள்ளது இந்த ஆலயம்.

தொகுப்பு: ஜெயவண்ணன்

Tags : Adigesava Perumal ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள்...