×

நோய் தீர்க்கும் ஆனந்தவள்ளி சமேத கைலாசநாதர்

விருதுநகரில் இருந்து 43 கிமீ தொலைவில், காரியாபட்டியிலிருந்து நரிக்குடி செல்லும் சாலையில் சூரனூர் உள்ளது. இந்த ஊர் கூவனூர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மிகவும் பழமையான ஆனந்தவள்ளி சமேத கைலாசநாதர் ஆலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் தற்போது ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோயிலில் ஆனந்தவள்ளி சமேத கைலாசநாருக்கு தனியாக சன்னதி உள்ளது. மேலும் மகாவிஷ்ணு, மகாலட்சுமி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோயிலின் முன்னும், பின்னும் 2 குளங்கள் உள்ளன.
தல வரலாறு பண்டைய காலத்தில் சூரனூரை பத்மாசுரன் என்ற அசுரன் ஆண்டு வந்தான்.

ஒரு சமயம் பத்மாசுரன் சிவபெருமானை நினைத்து நீண்ட காலம் தவம் இருந்தான். அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த சிவனும் அவன் முன் தோன்றினார். ‘தான் யார் தலை மீது கை வைத்தாலும் அவர்கள் மரணமடைய வேண்டும்‘ என்ற வரத்தை வழங்குமாறு பத்மாசுரன் வேண்டினான். சிவனும் அந்த வரத்தை அருளினார்.

தனக்கு கிடைத்த வரத்தை சோதிக்க விரும்பிய பத்மாசுரன், சிவனிடமே  தனது சோதனையை நடத்த முயன்றான். அதிர்ச்சியடைந்த சிவன் அங்கிருந்து மாயமானார். இருப்பினும் சிவனை, பத்மாசுரன் தொடர்ந்து சென்றான். சிவனை காக்க அங்கு மோகினி வடிவில் வந்த விஷ்ணு, தந்திரத்தை கையாண்டு அசுரனை அழித்தார். விஷ்ணுவால் பத்மாசுரன் அழிக்கப்பட்டதால் அப்பகுதிக்கு சூரனூர் என பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிற்காலத்தில் பாண்டியர் ஆட்சி காலத்தில் இங்கு ஆனந்தவள்ளி சமேத கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டதாகவும், இப்பகுதியில் வாழ்ந்த அசுரனை அழித்த விஷ்ணுபெருமானுக்கு இந்த கோயிலில் தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக கல்வெட்டுகள் உள்ளன. உட்புற சுவர்கள் மற்றும் தூண்களில் பாண்டிய அரசின் மீன் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

தற்போது இக்கோயிலில் தினமும் 4 கால பூஜை நடைபெறுகிறது. வைகாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் இக்கோயிலில் விமர்சையாக திருவிழாக்கள்  நடத்தப்படுகின்றன. இங்கு வந்து மனமுருக வழிபடுவோரின் நோய்கள் அனைத்தும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. தினமும் இக்கோயிலுக்கு சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.

Tags :
× RELATED வித்தியாசமான தகவல்கள்