×

தீர்த்தமலையில் அருள்பாலித்து தீரா பிணிகளை தீர்த்து வைக்கும் தீர்த்தகிரீஸ்வரர்

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த தீர்த்தமலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோயில். இந்த மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் காணப்படுகிறது. இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள், மூலிகை காற்றை சுவாசிப்பதால் நோய் நொடிகள் நீங்குவதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாள் ‘வடிவாம்பிகை’ என்ற பெயரிலும், விநாயகர் ‘சித்தி விநாயகர்’ என்ற பெயருடனும் அருள்பாலிக்கின்றனர்.

வனவாசத்தின்போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை, மாய வேலைகள் செய்து கடத்திச் சென்றான் ராவணன். ராவணனை வதம் செய்து சீதையை மீட்ட ராமன், அயோத்தி திரும்பினார். செல்லும் வழியில் இங்கு வந்தபோது, சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்கு தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டு வரும்படி அனுமனிடம் கூறினார். ஆனால் அனுமன் வருவதற்கு காலதாமதமானது. எனவே ராமர், தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார். ராமர் விட்ட பாணம், பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக்கொண்டு ராமர், சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ‘ராம தீர்த்தம்’ என்று பெயர்.

இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். தான் வருவதற்குள் ராமபிரான், தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால், கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது இத்தலத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது. அது ‘அனுமந்த தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு, இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ராமபிரான், இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று பெரும் சிறப்புக்குரிய ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. இதன் காரணமாகவே இங்குள்ள இறைவன் ‘தீர்த்தகிரீஸ்வரர்’ என்ற பெயரில் அழைக்கப்படுவதாக பெயர் காரணம் கூறப்படுகிறது. இங்குள்ள ராம தீர்த்தத்தில் நீராடி தீர்த்தகிரீஸ்வரரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல்ரீதியான எந்தவித வியாதியாக இருப்பினும் அவை தீரும் என்பது ஆண்டாண்டு காலமாய் பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கை. இது தவிர மகப்பேறு, குடும்ப ஒற்றுமை, சகல ஐஸ்வரியம் கிடைக்கவும், கடன் தொல்லை தீரவும், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கிறார்கள்.


தல விருட்சம் பவளமல்லி மரம். இந்த தல விருட்சத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்ற பிரார்த்தனையை முன் வைப்பவர்கள், மஞ்சள் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர், இங்குள்ள பெரிய புற்றை வழிபடுவதோடு, தொட்டில் கட்டி வேண்டுதல் வைக் கின்றனர். மேலும் நாகப்புற்றை வணங்கினால் நாகதோஷம் நீங்குவதாகவும் பக்தர்கள் தெரிவிக் கின்றனர். தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து, முடி எடுத்தல், காது குத்துதல் ஆகிய நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Tags : Lord ,Tiramalai ,
× RELATED திருவாரூர் மாவட்ட கலெக்டர் விளக்கம்...