×

மலை கிராமங்களின் காவலன் குகையில் அமர்ந்து மக்களை காக்கும் சேர்வராயன் சுவாமி

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏற்காடு அமைந்துள்ள சேர்வராயன் மலை, பூமியிலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. இந்த மலையில் நடுநாயமாக அமைந்திருக்கிறது சேர்வராயன் கோயில். சேர மன்னர்கள் ஆண்ட வரலாற்று சிறப்பு ெபற்ற மலையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மலைவாசிகளால், மலையை குடைந்து இக்கோயில் கட்டப்பட்டது.

இங்கு காவேரியம்மன் உடனுறை சேர்வராயன் சுவாமி கொலுவிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புனிதமும் ஐதீகமுமாயிருந்த ஒரு சேர்வைகாரன் கீழேயிருந்து மலை மேலுள்ள ராமர் கோயிலுக்கு வந்து சேர்ந்தான். அங்கேயே தங்கினான். அவனுடைய தெய்வபக்தி அவனுக்கு பேரையும், புகழையும் பெற்று தந்தது. அவன் இறந்த பிறகு, அந்த கோயிலை மக்கள் சேர்வராயன் கோயில் என அழைக்க தொடங்கினர்.

அக்கோயிலில் சேர்வராயனுக்கு சிலையும் வைக்கப்பட்டது. நாளடைவில் சேர்வராயன் கோயில் உள்ள மலைக்கும், சேர்வராயன் மலை என பெயர் ஏற்பட்டது என்று செவிவழித்தகவல்கள் கூறுகின்றன. கோயில் கருவறைக்கு செல்ல வேண்டுமென்றால் முதுகை வளைத்து கொண்டு தான் செல்ல முடியும். மாமன்னராயினும், சாதாரண மனிதராயினும், இறைவன் முன்பு அனைவரும் சரிசமம்.

சிரம் தாழ்ந்தே யாரும் இறைவனை வணங்க வேண்டும் என்ற கோட்பாட்டை உணர்த்திக் கொண்டிருக்கிறது சேர்வராயன் கோயில். கோயிலில் சிலையாக வீற்றிருக்கும் சேர்வராயன் மீது, மலை உச்சியிலிருந்து நீர் தானாக விழுந்து அபிஷேகம் செய்வது அதிசயம். சேர்வராயன், காவேரி அம்மன் சிலைகளுக்கு பின்புறம் குகை நீள்கிறது.

சுவாமி கருவறையை தொடர்ந்து ஒரு சுரங்கப்பாதை செல்வதாகவும், அது 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு திருக்குளத்திற்கு அழைத்து செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சுரங்கப்பாதையின் முடிவை அறிய முடியவில்லை என்பது வியப்பு. சேர்வராயன் மலையிலிருந்து கர்நாடக மாநிலத்தின் தலைக்காவேரி வரை 480 கிலோ மீட்டர் குகை நீண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த கோயிலின் எதிரில் தென்கிழக்கு திசையில் பழமையான கிணறு இருக்கிறது. கோயிலில் இருந்து சிறு கற்கள் மூன்றை எடுத்து வந்து, கிணற்றை பார்க்காமல் திரும்பி நின்று கொண்டு மூன்று கற்களையும் ஒவ்வொன்றாக எறிய வேண்டும். மூன்று கற்களில் ஒன்று மட்டும் விழுந்தால்கூட போதும் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

மலைகிராம மக்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன்பு சேர்வராயனிடம் அனுமதி கேட்டே நடத்துகின்றனர். குகையில் இருந்து உலகை காப்பவர் சேர்வராயன் என்பது மக்களின் நம்பிக்கை. கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக தேர் திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், சேர்வராயன்- காவிரியம்மன் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இதில் 67 மலைகிராம மக்களும் திரண்டு வந்து தேர் வடம் பிடித்து இழுத்து கோயிலை சுற்றி வலம் வருவர். தேரோட்டத்தின்போது, சூரை தேங்காய்கள், சில்லரை காசுகளோடு தாங்கள் பயிரிட்ட காபி கொட்டைகள், மிளகு, தானியங்களை வாரி இறைத்து சேர்வராயனை வழிபடுவது ஆண்டாண்டு காலமாய் தொடரும் வழக்கம். இதில் ஏற்காடு மட்டுமல்லாமல் சேலம், தர்மபுரி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும் அலையென திரண்டு சேர்வராயனையும், காவேரி அம்மனையும் வழிபட்டு செல்கின்றனர்.

Tags : Sarvarayan Swamy ,cave ,villages ,hill ,
× RELATED கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர அவகாசம்