×

மதங்களை கடந்த நினைவுச்சின்னம் குழந்தை இயேசு பேராலயம்

சேலம் மாநகரின் பரபரப்பான ஓமலூர் சாலையில், புதிய பஸ் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது அழகே உருவான குழந்தை இயேசு பேராலயம். மதங்களை கடந்து மனங்களை இணைக்கும் ஒப்பற்ற புகழ் பெற்றது இந்த பேராலயம். தியாகமும், கருணையும், அன்பும், அறமும் போற்றும் குழந்தை இயேசு பேராலயம் வளர்த்தெடுத்த வரலாறும் மிகவும் அரியது என்கின்றனர் பங்குத்தந்தைகள்.

1930ம் ஆண்டில் திருத்தந்தை பதினோராம் பத்தி நாதரின் ஆணையின் பேரில், பாண்டிச்சேரி உயர்மறை மாவட்டத்தின் கீழுள்ள பகுதிகளைப் பிரித்து சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கி, சேலம் மறை மாவட்டம் உதயமானது. புதிய மறை மாவட்டத்தின் முதல் ஆயர் ஹென்றி புரூனியர். வசதிகளே இல்லாத காலத்தில் அன்றைய குருக்களின் தியாகத்தால், கடின உழைப்பால் சேலம் மறை மாவட்டம் வளர்ந்தது.

சேலம் மறை மாவட்டத்தின் தலைமைப் பங்காகிய செவ்வாய்பேட்டையிலிருந்து 1953ம் ஆண்டு அரிசிபாளையம் பங்கு பிரிக்கப்பட்டது. சேலம் நான்கு ரோட்டில் உள்ள புனித சவேரியார் இளங்குருமட ஆலயத்தை மையமாக கொண்டு அரிசிபாளையம் பங்கு அமைக்கப்பட்டது. டி.அருள் இப்பங்கின் முதல் பங்கு குருவாக நியமிக்கப்பட்டார்.

புதியதாக உருவாக்கப்பட்டபோது இப்பங்கு அரிசிபாளையம், பெரமனூர், சாமிநாதபுரம், பள்ளப்பட்டி, அழகாபுரம், ஜான்சன்பேட்டை, வீராணம் ஆகிய பகுதிகளை தன்னகத்தே கொண்டிருந்தது. இதுதான் தற்போது இதயங்களை ஈர்க்கும் குழந்தை இயேசு பேராலயமாக திகழ்கிறது. 1991ல் குழந்தை இயேசு பேராலய நேர்ந்தளிப்பு விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

அன்று முதல் தூய சவேரியார் பங்கு, குழந்தை இயேசு பேராலயப் பங்காகப்பெயர் மாற்றமும், இடமாற்றமும் பெற்று விளங்குகிறது. குழந்தை இயேசு பேராலயம், சேலம் மாநகர மைய பகுதி அரிசிபாளையத்தில் நான்கரை ஏக்கரில் பிரான்ஸ் நாட்டு கோத்திக் கட்டட வடிவமைப்புப்படி கட்டப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 5,000 பேர் கூடி ஜெபிக்கும் வண்ணம் உள்ளது. ஆலயத்தினுள் உள்ள வண்ணக்கண்ணாடி வேலைப்பாடு, இயேசுவின் வாழ்வியல் கலை நயத்தோடு அமைக்கப்பட்டுள்ளது.

அழகிய பீடத்தில் குழந்தை இயேசு திருச்சொரூபம், ஒரே பளிங்கு கல்லால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் சகோதரரால் செதுக்கப்பட்டது. இதற்கான செலவினத்தை சேலத்தை சேர்ந்த இந்து சகோதரி ஏற்றுக்கொண்டார். மேலும், இறைமக்களின் நிதியுதவி சேர்ந்து மதங்களை கடந்து, சேலம் மாநகரின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது. இப்பங்கு ஆன்மீகத்திலும், கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் போன்ற பல நிலைகளிலும் வளர்ந்துள்ளது.

மறைந்த முன்னாள் மறைமாவட்ட முதன்மை குருவாகிய  எஸ்.அமல்ராஜ் தம் பணி வாழ்வில் வெளிபடுத்திய ஆன்மீக அக்கறையும், சமூக, பொருளாதார, கல்வியில் மக்கள் பால் கொண்ட அன்பும், இரக்கமுமே இப்பங்கின் இன்றைய நிலைக்கு வித்தாக அமைந்துள்ளது. இன்று 11300 கத்தோலிக்க கிறிஸ்தவர்களை கொண்ட இப்பங்கு இதுவரை 10 குருக்களையும், 32 அருட்சகோதரிகளையும், 3 துறவறச் சகோதரர் களையும் உருவாக்கியுள்ளது என்கின்றனர் மூத்த கிறிஸ்தவ முன்னோடிகள்.

Tags : Jesus Church ,infant ,
× RELATED ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் பிறந்த...