×

நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

பாலஸ்தீன் நாட்டில் நாசரேத் எனும் சிறிய கிராமம் உள்ளது. அங்கு வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள் எங்களை மீட்பதற்கு மெசியா பிறப்பார் எனும் எதிர்பார்ப்புடனே காத்திருந்தனர். மெசியா சாதாரணமான பெண்மணி வழியாக இவ்வுலகில் பிறப்பார் என்ற எதிர்பார்ப்பிருந்ததால் ஏறக்குறைய எல்லா பெண்மணிகளுமே மெசியா தன் வழியாக இவ்வுலகிற்கு வர மாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்புடனே காத்திருந்தனர். இச்சூழலில் நாசரேத்தில் வாழ்ந்த மரியாள் என்ற பெண்ணை கடவுள் தெரிவு செய்கின்றார். மரியாள் குழந்தைப்பருவத்திலிருந்தே இறைவனின் திட்டத்தினை உணர்ந்தே வாழ்ந்தார். கன்னிமை எனும் வாக்குறுதியினையும் ஆண்டவருக்கு அளித்திருந்தார்.

மரியாள் திருமண வயதினை எட்டியபோது அவரின் பெற்றோர் சூசை என்ற இளைஞருக்கு மரியாவை மண ஒப்பந்தம் செய்தனர். தச்சுவேலை செய்து வந்த சூசையோ நீதிமானாகவே வாழ்ந்து வந்தார். இதனால் இறைவனின் திட்டம் நிறைவேற இருவருமே ஒத்த கருத்துடையவர்களாகவே வாழ்ந்து வந்தனர். ஒருநாள் மரியாள் தன்னுடைய வேலைகளையெல்லாம் கவனித்து, என்ன நடக்கிறது என்பதனை உய்த்துணர்வதற்கு முன்பாகவே கபிரியேல் எனும் வானதூதர் தன்முன் நிற்பதைக் காண்கின்றார்.

இதனைக் கண்டு எழுந்த மரியாவை நோக்கி வானதூதர், அருள் நிறைந்தவரே வாழ்க, ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார். பெண்களுக்குள் ஆசீர்பெற்றவர் நீர் என வாழ்த்துகின்றார். தொடர்ந்து மரியா அஞ்ச வேண்டாம், ஆண்டவர் உமக்கு அரும் பெரும் செயல் செய்துள்ளார். நீர் ஒரு மகனைப் பெற்றெடுப்பீர், அவருக்கு இம்மானுவேல் என பெயரிடுவீர். அவர் தம் மக்களை தம் பாவங்களிலிருந்து மீட்டெடுப்பார் என்கின்றார்.

இறைவன் தன்னை மீட்பரின் தாயாக தெரிவுசெய்தமையை எண்ணி வியப்படைகின்றார். அதே நேரத்தில் இது எப்படி நிகழும்? என கேள்வி கேட்கின்றார். உடனே வானதூதர் தெளிவுப்படுத்திய பிறகு, இதோ, நான் ஆண்டவரின் அடிமை: உமது வார்த்தையின் படியே எனக்கு நிகழட்டும் என பதிலுரைக்கின்றார். மேலும் வானதூதர், எலிசபெத் முதிர்ந்த வயதில் கருத்தாங்கியதை எடுத்துரைக்கின்றார்.

மரியாவும் எலிசபெத்தைத் தேடிச் செல்கின்றார். மூன்று நாட்கள் பயணம் செய்து அயின்கரிம் சென்று சேர்கின்றார், எலிசபெத்திற்கு உதவி செய்கின்றார். மரியாள் எலிசபெத்தை சந்தித்தவுடன் எலிசபெத் தூயஆவியால் முற்றிலும் தூண்டப்பட்டு, பெண்களுக்குள் பேறுபெற்றவர் நீர்;. என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்றுரைக்கின்றார்.

 இதனைக் கேட்டு மனமகிழ்ந்து மரியா பின்வருமாறு பாடுகின்றார். என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகின்றது. தொடர்ந்து சில மாதங்கள் எலிசபெத்தோடு தங்கியிருந்து உதவி செய்த பின்பு மரியா நாசரேத்திற்கு திரும்பினார்.இச்சமயத்தில் மரியாவின் தாய்மையைப் பற்றிய அச்சம் சூசையப்பரை வாட்டி வதைக்கின்றது. குழம்பிப்போய் நின்ற அவருக்கு வானதூதர் காட்சியளித்தார். சூசையே, மரியாவை உம் மனைவியாக ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம் என்றுரைத்தார். தொடர்ந்து மரியாவையும், அவரின் குழந்தையையும் பாதுகாப்பதில் சூசை ஆனந்தம் கண்டார்.

சூசையப்பரும், மரியாவும் மீட்பரின் வருகைக்காக தங்களையே தயார் செய்தனர். ஒரு நாள் சூசையப்பர் நகரத்திற்குச் சென்ற போது, ஒரு பொதுவிடத்தில் உரோமைப் போர்ச்சேவகன் அரச கட்டளையைப் படித்துக் கொண்டிருந்ததைக் கேட்கின்றார். அதில் உரோமைப் பேரரசன் மக்கள் தொகையை கணக்கெடுக்க விரும்புகிறான். ஒவ்வொருவரும் தத்தம் ஊருக்கு சென்று பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அரச கட்டளையை எடுத்துரைக்கின்றான். சூசையப்பரும், மரியாவும் பெத்லகேமிலிருந்து வந்த குடும்பம் என்பதால் பெத்லகேமை நோக்கி புறப்பட்டனர்.

கடுமையான குளிருக்கு மத்தியில் 3 நாட்கள் பயணம் நீடித்தது. அரச கட்டளையை ஆண்டவரின் கட்டளையாக எண்ணி கீழ்ப்படிந்தனர். மூன்றாம் நாள் பெத்லகேமை நெருங்கினர். ஏற்கனவே களைப்புற்றிருந்த நிலையில் சத்திரத்தை நாடி ஓடினர். ஊரில் தங்க இடமில்லாததால் ஊருக்கு வெளியே வந்தனர். மாட்டுத் தொழுவமே கிடைத்தது. அதனை சுத்தம் செய்து இல்லிடமாக்கினர்.கடவுள் குறித்த நேரம் வந்தது. இயேசு பிறந்தார். மரியாள் தம் மகனை வெள்ளைத்துணியில் பொதிந்து கிடத்தினார். பிறந்த குழந்தையை சூசையப்பரும், மரியாவும் ஆராதித்தனர்.

இயேசுவின் பிறப்புச்செய்தி வானதூதர்களால் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இன்று பெத்லகேமில் உங்களுக்காக ஒரு மீட்பர் பிறந்துள்ளார் என்றுரைத்து, விண்ணில் இறைவனுக்கு மகிமையும், மண்ணில் மனிதருக்குச் சமாதானமும் உண்டாகுக என்று புகழ்ந்து பாடினர். இடையர்கள் இயேசுவைக் காண பெத்லகேம் விரைந்தனர்.  மாட்டுத்தொழுவத்தில் சூசையப்பரையும், மரியாவையும் குழந்தையையும் கண்டு வானதூதர் உரைத்தது உண்மையென சான்று பகர்ந்தனர். தங்களிடமிருந்த ஆட்டுக்குட்டியைப் பரிசாக்கி, வானதூதர் கூறிய காட்சியை எடுத்துரைத்து மகிழ்ந்தனர்.

குழந்தை பிறந்து எட்டு நாட்கள் ஆன பின்பு பெயர் சூட்டுவது பாலஸ்தீன வழக்கம். குழந்தை பிறந்த எட்டு நாட்களுக்கு பின்பு, மரியா இயேசு என பெயர் சூட்டினார். 40 நாட்களுக்கு பின்பு தாய் தனது தலைப்பிள்ளையை எடுத்துக்கொண்டு எருசலேம் கோவிலில் கடவுளுக்கு காணிக்கையாக்க வேண்டும் என்பது யூதச் சட்டம். முதல் குழந்தை கடவுளுக்குரியது.  ஆதலால் ஒரு செம்மறி குட்டியையாவது அல்லது இரண்டு மாடப்புறாக்களையாவது கொடுத்து அக்குழந்தையைப் பெற்று கொள்வது வழக்கம்.
 
அவர்கள் ஏழையாக இருந்ததால் மாடப்புறாக்களைக் காணிக்கையாக்கினர்.காணிக்கைச் சடங்குகள் முடிந்த போது ஆலயத்திற்கு வந்த முதியவர் சிமியோன், இவர் 50 ஆண்டுகளாக மீட்பருக்காக காத்திருந்தவர். குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் புகழ்ந்தார். இப்போது உமது அடியானை அமைதியுடன் போக விடும். ஏனெனில் என் கண்கள் மீட்பரைக் கண்டுகொண்டன. பின்பு மரியாளிடம் குழந்தையைக் கொடுத்து, இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்கள் பலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாய் அமையும் என்றார்.

கீழ்த்திசை நாட்டில் வாழ்ந்து வந்த ஞானிகள் மெசியாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்கள் பாலஸ்தீன் நாட்டில் மெசியா பிறப்பார். அவர் தோன்றும் காலம் அண்மையிலுள்ளது. அப்போது அதிசய விண்மீன் தோன்றும் என்றெல்லாம் அறிந்திருந்தனர். அன்றாடம் இரவில் விண்மீனைக் கவனித்து வந்தனர். ஒரு நாள் அதிசயமான விண்மீனைக் கண்டவுடன், இது தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அருங்குறி என்றுணர்ந்து, தங்கள் குடும்பம், தொழில் இவற்றை விட்டுவிட்டு பயணம் மேற்கொண்டனர். பல பாலைவனங்களைக் கடந்து, விண்மீனைப் பின்பற்றி பயணமாகினர்.

 பல நாட்கள் பயணத்திற்கு பின்பு எருசலேம் நகரை அடைந்தனர். அப்போது விண்மீன் மறைந்து விட்டது. குழம்பி போன அவர்கள், விளக்கம் கேட்டு அரசரைத் தேடிச் சென்றனர்.கொடூரமும், தீய எண்ணமும் தன்னகத்தே கொண்ட ஏரோது அரசக்குருக்களை அழைத்து, மெசியாவின் பிறப்பைப் பற்றி விசாரித்தான். மிக்கேயாஸ் எனும் தீர்க்கதரிசி பெத்லகேமில் மெசியா பிறப்பதாக எழுதியுள்ளதை ஞானிகள் தெரிவித்தனர். நயவஞ்சகம் பிடித்த ஏரோது ஞானிகளிடம் இனிமையாக பேசினான்.

தானும் மெசியாவை வணங்க வருவதாக கூறினான். இதனைத் தொடர்ந்து ஞானிகள் பெத்லகேமை; நோக்கி புறப்பட்டனர். எருசலேமை வி;ட்டு வெளியே வந்தவுடன் விண்மீன் தோன்றியது. ஞானிகளும் அதனைப்பின்பற்றி குழந்தை இயேசுவிடம் சென்றனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பொன், தூபம், வெள்ளைப்போளம் ஆகியவற்றை பரிசாக்கினர். தொடர்ந்து கனவில் எச்சரிக்கப்பட்டதால் தங்கள் நாடு திரும்பினர். இயேசுவின் பிறப்பு கொணர்ந்த வெற்றியின் நிகழ்வு ஆண்டுதோறும் நினைவுகூரப்படுவதற்காக அல்ல, மாறாக நமது வாழ்வைத் திருத்தி அமைத்து கொள்ளவே என்பதனை உணர்ந்து பயணிப்போம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அருட்பணி. குருசு கார்மல் சி.ஏ, கோட்டாறு மறைமாவட்டம்.

Tags : Savior ,
× RELATED 143 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி உலக...