×

பல்லுயிர்க்கும் படியளக்கும் பரமன்

மதுரை

படியளக்கும் லீலை 19-12-2019

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் விசேஷங்களில் பரமன் படியளக்கும் லீலை மிகவும் விசேஷமானதாகும்.ஆண்டு தோறும் மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும், அம்மனும் மதுரை புற வீதிகளில் வலம் வருகிற ‘அஷ்டமி சப்பரத் திருவிழா’ ஓர் உன்னதப் பெருவிழா.

உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் படி அளப்பது இறைவனே என்பதனை உணர்த்தி நிற்கும் விழாவாக, இத்திருநாள் ஆண்டுதோறும் மதுரையில் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. வரும் 19ம் தேதி இத்திருநாளை மாமதுரைக் கொண்டாடிக் களிக்கும் வேலையில் இந்நாள் குறித்த அற்புத புராணக்கதையை அறிவோம்.

 சிவபெருமான் வழக்கம்போல் உலகத்து உயிர்களுக்கு படி அளந்து வருகிறார். ஒரு நாள் சிவபெருமான் உயிர்களுக்கு படி அளக்க புறப்பட்டபின் கயிலையில் பார்வதிதேவி, சிவபெருமான் உண்மையிலேயே படி அளக்கத்தான் செல்கிறாரா? அது எல்லா உயிர்களுக்கும் கிடைக்கிறதா? என்பதை சோதிப்பதற்காக தேவி, சிமிழில்  இரண்டு கட்டெறும்புகளை போட்டு அதில் திருகு ஆணி இட்டு இடுப்பில் சொருகி கொள்கிறார். படி அளந்துவிட்டு கைலாயம் வருகிறார் சிவன். அப்போது பார்வதி தேவி சுவாமி, எல்லா உயிர்களுக்கும் படி அளந்தீர்களா?

‘‘எல்லா ஜீவன்களுக்கும் படி அளந்து தான் வருகிறேன்’’
 என்னிடத்தில் இரண்டு ஜீவன்கள் பசியோடு உள்ளது.
‘‘எங்கே அந்த ஜீவன்களை என்னிடத்தில் காட்டு’’

பார்வதிதேவி தன்னிடமுள்ள சிமிழை திறந்து காட்டினார். அப்போது இரண்டு கட்டெறும்புகளும் தனது வாயில் அரிசியை கவ்விக் கொண்டு சிமிழுக்குள் வலம் வந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட தேவியார், சிவனிடம் சுவாமி தங்களை சோதித்தமைக்கு என்னை மன்னித்தருள வேண்டும். என்றார்.

இந்நிகழ்வை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமியுடன் பிரியாவிடை, அம்மன் ரிஷப வாகனங்களில் ஏறி தனித்தனி சப்பரங்களில் மதுரையின் வீதிகளில் உலா வரும் அழகு அலாதியானது.

படியளக்கும் லீலை நடைபெறும் அன்றைய காலை 5.30 மணிக்கெல்லாம் சுவாமி, பிரியாவிடை அம்மன் ஒரு சப்பரத்திலும், அம்மன் மற்றொரு சப்பரத்திலும் உலா கிளம்புகின்றனர். கோயிலில் அம்மன் சந்நதி வாயிலில் புறப்பட்டு, கீழமாசி வீதி தேர்முட்டி தொட்டு மதுரையைச் சுற்றிய வெளிவீதிகளை வலம் வந்து திரும்பவும் கோயிலைச் சேர்கின்றனர். ஏறக்குறைய நான்கைந்து மணி நேரம் மதுரையை சுவாமியும், அம்மனும் வலம் வரும் இக்காட்சி நகரத்தை இன்னும் அழகாக்கி நிற்கிறது. இரு சப்பரங்களில் மீனாட்சியம்மன் சப்பரத்தை முழுக்க பெண்களே இழுத்து வருவது மேலும் சிறப்பிற்குரியது.

செல்லும் இடமெல்லாம் அத்தனை ஜீவராசிகளுக்கும் படியளந்ததை நினைவூட்டிட ரோட்டின் இருபுறமும் பட்டர்கள், பக்தர்கள் மங்கலத்துடன் மஞ்சள் கலந்த அரிசியைத் தூவுவதும், பட்டர்களிடம் பக்தர்கள் பிரசாதமாக அரிசியை பெற்றுச் செல்வதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. தூவப்பட்ட அரிசியைத் தேடிச் சேர்த்து சிறிய பொட்டலத்தில் கட்டியெடுத்து தங்கள் பூஜை அறைகளில் வைத்து வணங்குவதற்கென மக்கள் கொண்டு செல்லும் நடைமுறையும் இருக்கிறது. தங்கள் வீட்டின் விசேஷ காலங்களில் கொதிக்கும் உலைகளில் ஓரிரு இந்த அரிசி பிரசாதத்தைப் போட்டு சமைப்பதிலும் மதுரை மக்களிடம் ஆன்மிக நிறைவு வழிகிறது.

- செ. அபுதாகிர்.
படங்கள்: எஸ். ஜெயப்பிரகாஷ்

Tags : Paramedic ,
× RELATED மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற ஆடை...