×

பிரதோஷ தாண்டவம்

நடனக் கலைஞர் திரு. உடுமலை செந்தில் சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ சமயங்களில் பிரதோஷ தாண்டவத்தையும், சந்தி நடனத்தையும், வில்வ அர்ச்சனை அபிநயமும் புரிந்து வருகிறார்.

.அது என்ன பிரதோஷதாண்டவம், சந்தி நடனம்? என்ற கேள்வி மனதில் எழ ஒரு மாலைப் பொழுதில் திரு.செந்தில் அவர்களை சந்தித்தோம்.

உடுமலையில் பிறந்து வளர்ந்தேன். சிறுவயதிலிருந்தே நாட்டியத்தின்மீது எனக்கு தீராக் காதல் இருந்தது.  பழனி முத்துசாமிப்பிள்ளை அவர்களிடம் நாட்டியம் கற்றேன். நாட்டியத்திற்கு ஆதிகாரணன் நடராஜர். அந்த நடராஜப் பெருமானின் திருவருளால் சிற்ப சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்து நடனம் ஆடுகின்றேன். கிட்டத்தட்ட ஆயிரம் ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை ஆராய்ந்து அங்குள்ள சிலைகளின் அபிநயம் உள்ள சூழல், அதற்கான காரணம் போன்றவற்றை ஆராய்ந்து பின் அதை என் நாட்டியங்களில் பயன்படுத்துகிறேன். ஆலகால விஷத்தை உண்ட ஈசனை தூங்கவிடாமல் தேவர்கள் ஆடிப்பாடி மகிழ்வித்தனர்.

அதனால் மகிழ்ந்த ஈசன்  சாயங்கால வேளையில் நந்தியம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே ஆடிக்காட்டிய தாண்டவமே பிரதோஷ தாண்டவம்.
சிவபெருமானின் தாண்டவங்களில் திரிபுர சம்ஹார தாண்டவத்திலும், பிரதோஷ தாண்டவத்திலும் பார்வதி அவருடன் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதோஷ தாண்டவ காலத்தில் ஈஸ்வரனுக்கு பிஞ்சகன் என்று பெயர். பிஞ்சகன் என்றால் மயில் தோகையுடன் ஆடுபவன் என்று பொருள். ஈசன் மயில் தோகையுடன் ஆடும் அந்தத் தாண்டவத்தையும் பிரதோஷ தாண்டவம் என்று கூறுவர். மயில் தோகையினால் விசிறும்போது உண்டாகும் காற்றுக்கு விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி உண்டு.

ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டன் விஷத்தை முறிக்கும் மயில் தோகையுடன் நடனம் ஆடுவது பொருத்தம்தானே? எனவேதான் பரமேஸ்வரன் மயில் தோகையுடன் பிரதோஷ தாண்டவம் ஆடுகிறார்.  இந்த தாண்டவ வகை சிற்பங்கள் தஞ்சை பெரிய கோயிலில் மட்டும் 81 கரணங்கள் உள்ளன. மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடிய நிலை, காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலய சிற்பங்கள், கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலய சிற்பங்கள், சுருட்டப்பள்ளி சிவன் கோயில் என பல்வேறு ஆலயங்களில் தாண்டவ சிற்பங்களைக் காணலாம்.

ஈசனின் ஆலயத்தைச் சுற்றி அந்தந்த இடங்களில் உள்ளஅஷ்டதிக்பாலகர்களான நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இந்திரன், அக்னி, யமன், போன்றோருக்கு ஆலய ஈசன் தரிசனமளிப்பதாக ஐதீகம். இந்த எட்டு பேர்களுக்கும் தரிசனம் தரவே பிரதோஷ நேரத்தில் ஈசன் ஆலய வலம் வருகிறார். அதன்படியே அந்தந்த இடங்களில் நான் ஆடும் நடனமே சந்தி நடனம். இந்திர மூலையில் ஆடும்போது மல்லாரி ராக இசை இது போன்று ஒவ்வொரு மூலைக்கும் ஒரு ராகம் இசைக்கப்பட்டு ஆடுதல் மரபு. ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் ஒவ்வொரு சிவாலயத்தில் பிரதோஷ நேரத்தில் அபிஷேகம் செய்யும் போது ஈசனின் முன்னிலையிலும், பக்தர்கள் முன்னிலையிலும் ஆடுவதை என் பிறவிப்பயனாகவே கருதுகிறேன் என்று சொல்லும் போதே நெகிழ்கிறார் அவர்.

கடந்த இருபது வருடங்களாக பிரதோஷ தாண்டவமாடி வரும் திரு.செந்தில் சமீபத்தில் தன்னுடைய 459ஆவது பிரதோஷ தாண்டவத்தை. திருவண்ணாமலை மருதாடு புரந்தரீஸ்வரர்  முன் ஆடி முடித்திருக்கிறார். ஒரு முறை ஆடிய கோயிலில் மறுமுறை ஆடாது வருடத்தில் வரும் 25 பிரதோஷங்களிலும் தவறாமல் பிரதோஷ நடனமாடி வரும் திரு.செந்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், காளஹஸ்தி, ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகர் உட்பட பல்வேறு திருக்கோயில்களில் பிரதோஷ தாண்டவத்தை பிரதோஷநாயகன் முன் என்னை ஆடவைத்த ஆடல் வல்லானின் கருணையை எண்ணி எண்ணி மனம் கசிகிறேன் என்கிறார்.  

ஒவ்வொரு ஊரிலும் ஆடும் போது அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகளையும், நாட்டுப்புறக் கலைகளையும், அவர்கள் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றையும் நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். ஒவ்வொரு பிரதோஷ நடனத்திலும் ஒவ்வொரு பாடம் கற்றுக்கொள்கிறேன். நாட்டியமாட ஆத்மார்த்தமான அர்ப்பணமும், முகங்களில் பாவங்களும், நாட்டியத்தோடு ஒன்றும் எண்ணமுமே தேவை என நான் உறுதியாக நினைக்கிறேன். உயர்ந்த பட்டாடை உடுத்தி, ஆரம், காசு மாலை, ஒட்டியாணம் அணிந்து கொண்டுதான் நாட்டியமாடவேண்டும் என்பது இல்லை. பிளாஸ்டிக் பூக்களால் ஆன மாலைகள் அணிந்தும், கவரிங் நகை அணிந்து கொண்டும்கூட ஆடலாம்.

இந்த வகை நடனம் தவிர திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் சந்நதியில் பச்சைப்பதிகத்திற்கு ஆடியதும், திருவையாறு ஐயாரப்பர் ஆலய சித்திரை பசலி விழா பிரம்மோற்சவத்தில் ஆலயத்தை ஐயாரப்பர் ஏழு முறை வலம் வருவார். அப்போது அந்த ஏழு முறையும் சப்தபிரதட்சிண நாட்டியம் ஆடியதும். திருப்பதி பிரம்மோற்சவத்தின் போது திருமலையப்பன் முன் ஆடியதும் என் பாக்கியம் என்கிறார் திரு.செந்தில் அவர்கள். இந்த மிகச்சிறிய வயதிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருது, அபிநய திலகம் உட்பட பல்வேறு பட்டங்கள் பெற்றுள்ளார்.இவர் மேன்மேலும் பல நூறு பிரதோஷ தாண்டவம் ஆட வாழ்த்தி விடைபெற்றோம்.

- ந.பரணிகுமார்

Tags :
× RELATED சிதம்பர ரகசியம் என்றால் என்ன?