×

மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்து இறப்பு விகிதத்தை குறைப்பது எப்படி? கால்நடை மருத்துவர் விளக்கம்

நீடாமங்கலம் : மழைக்காலங்களில் ஆடுகளின் இறப்பு விகிதததை குறைக்க பராமரிப்பது எப்படி என்பது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் (அறிவியர்) சபாபதி விளக்கம் அளித்துள்ளார்.நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நடந்த கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. அதில் பங்கேற்ற கால்நடை மருத்துவர் சபாபதி கூறியதாவது:தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்து இருக்கிறது. இதனால் திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் ஆடுகள் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும் முக்கிய பங்காற்றி வருகிறது. தென்மேற்கு பருவக் மழைக்காலங்களில் ஆடுகளின் இறப்பு விகிதம் ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் உள்ளது. இதை தகுந்த மழைக்கால பராமரிப்பு மூலம் தவிர்க்கலாம். கொட்டகை பராமரிப்பு, தட்பவெப்ப நிலை, உணவு ஊட்டம் மற்றும் நோய் தொற்று போன்ற நான்கே காரணிகள் மழைக்காலங்களில் ஆடுகளை அதிகம் பாதிக்கின்றன.ஆட்டு கொட்டகைகள் பள்ளமாக இருந்தால் அவற்றில் நீர் தேக்கம் ஏற்படக்கூடும். எனவே அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவற்றில் மண் கொண்டு மேம்படுத்தி வைப்பதன் மூலம் ஈரத்தை குறைக்கலாம். அல்லது தற்காலிக கொட்டகைகளை மேடான பகுதிகளில் அமைத்து ஆடுகளை பாதுகாத்துக் கொள்ளலாம்.தட்பவெப்ப நிலை பொறுத்த வரை கடுமையான மழை நேரங்களில் மிகுந்த குளிரூட்டம் ஏற்பட்டு மிக முக்கியமாக ஆட்டுக்குட்டிகளுக்கு குளிர் ஜன்னி ஏற்படலாம். எனவே இது போன்ற இளங்குட்டிகளை சிறிய பாதுகாப்பான அறைகளில் அடைத்து வைத்து தென்னைநார், கடலைக்கூடு மற்றும் மரத்தூள் போன்ற வற்றால் மெத்தைகள் அமைத்து கொடுத்து கதகதப்பாக வைத்திருக்கும் பட்சத்தில் அவை பாதுகாப்பாக இருக்கும். உணவு ஊட்டத்தை பொறுத்தவரை பசும்புற்களை அறுவடை செய்வதும் மேய்ச்சலுக்கு விடுவதும் அரிது. மேய்ச்சல் நேரங்களும் சுருங்கி விடுகின்றன. இது போன்ற தருணத்தில் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு தேவையான இலை தழைகள் மற்றும் புற்களை அறுவடை செய்து அவற்றினை தலைகீழாகத் தொங்க விட்டு நீரினை வடித்து நிழலிலேயே உலரச் செய்து பயன்படுத்தலாம். மழைக்காலங்களில் சிறிதளவு பசும்புற்களையும், நன்கு பாதுகாக்கப்பட்ட வற தீவனங்களான வைய்க்கோல், கடலைக் கொடி மற்றும் தட்டைப் பயறு கொடி போன்றவற்றையும் பயன்படுத்தலாம். ஆனால் கலப்பு தீவனத்தை 100- 300 கிராம் வரை ஆடு மற்றும் சினை அளிப்பதன் மூலம் கால்நடைகளை உணவு தட்டுப்பாட்டில் இருந்து தவிர்க்கலாம். நோய் தொற்றைப் பொறுத்தவரை மழை காலங்களில் நல்ல நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் கொட்டகையை சுத்தமாகவும் ஈரம்மின்றி வைத்துக் கொள்வதோடு அனைத்து தடுப்பூசிகளையும் மழைக் காலத்திற்கு முன்னரே போட்டு விட வேண்டும். ஆடுகளுக்கு நீல நாக்கு நோய், பி. பி. ஆர். துள்ளுமாறு நோய், சப்பை நோய் தொண்டை அடைப்பான் போன்ற அனைத்து தடுப்பூசிகளையும் போட்டு பாதுகாப்பது நல்லது. மழைக்காலங்களில் கொட்டகைக்கு தக்கவாறு ஆடுகளின் எண்ணிக்கையை குறைத்து வைத்துக் கொள்வது நல்லது. மேலும் பி காம்ப்ளெக்ஸ் டானிக்கை தினமும் 5 முதல் 10 மில்லி வரை கொடுப்பதன் மூலம் ஆடுகளின் நோய் எதிர்ப்பு சக்தியை நன்கு தக்க வைத்துக் கொள்ள இயலும். மழைக்காலங்களில் போதிய மருத்துவ வசதி கிடைக்க பெறுவதில் சிக்கல் இருப்பதால் கழிச்சல், பசியின்மை, மற்றும் வயிறு உப்பிசம் போன்ற கோளாறுகளுக்கு தேவைப்படும் அடிப்படை செய்திகளை வைத்துக் கொள்வது நல்லது. கடந்த ஆண்டு கோமாரி நோயினால் ஆடுகள் அதிகம் இறந்து இருப்பதால் அதற்கான தடுப்பூசிகளையும் செய்து கொள்வது நல்லது. எந்த தடுப்பூசியும் போடாதவர்கள் பிபிஆர் மற்றும் துள்ளுமாறி நோய்க்கான தடுப்பூசிகளை முதன்மையாக செலுத்திக் கொள்வது சாலச்சிறந்தது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

The post மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்து இறப்பு விகிதத்தை குறைப்பது எப்படி? கால்நடை மருத்துவர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Nidamangalam ,Agricultural Science Station ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலம் வேளாண் அறிவியல்...