×

ஒன்றிய அரசின் அலட்சியத்தால் கிடப்பில் உள்ள வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வருமா?எதிர்பார்ப்பில் நெசவாளர்கள்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள வைகை உயர்தொழில்நுட்ப நெசவு பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் நெசவுத் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான நெசவாளர்கள் நெசவு தொழிலை முழுநேர தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு நெசவாளர்கள் விசைத்தறிக் கூடங்களிலும், அவரது சொந்த வீடுகளிலும் தறி அமைத்து உற்பத்தி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்தப்பகுதியில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டத்தில் கீழ் சேலை, வேட்டி, சீறுடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் விசைத்தறி மூலமாக பல்வேறு உயர்ரக காட்டன் சேலைகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் இப்பகுதி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு அப்போதை மாநில அரசு தேனி-மதுரை சாலையில் டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நெசவு பூங்கா அமைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டது. மேலும் சுமார் 105 கோடியில் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த பூங்காவிற்கு வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா என்று பெயரிடப்பட்டது. இந்த பூங்காவிற்கு மத்திய அரசு 40 சதவீதமும், மாநில அரசு 9 சதவீதமும் நிதி வழங்குவது என்றும், மீதமுள்ள 51 சதவீத பங்கை நெசவு பூங்காவின் பங்குதாரர்கள் வங்கிகளின் உதவியுடன் வழங்குவது என்றும் திட்டமிடப்பட்டது. அதன்படி மாநில அரசின் பங்களிப்பு தொகையான ரூ.4 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால்ழ ஒன்றிய அரசின் பங்களிப்பான 40 சதவீத நிதி கடந்த 10 ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்படாததால் நெசவாளர்கள் எதிர்பார்த்த இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த பங்குதாரர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள நெசவு பூங்காவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பார்வையிட்டு சென்றனர். திட்டத்தை செயல்படுத்துவதற்க்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நிதியும் ஒதுக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். தற்போது உள்ள திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. எனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்றி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை வேண்டும்’’ என்றனர்….

The post ஒன்றிய அரசின் அலட்சியத்தால் கிடப்பில் உள்ள வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வருமா?எதிர்பார்ப்பில் நெசவாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Vaigai Hi-Tech Weaving Park ,Union Government ,Andipatti ,D. Subpulapuram Exclusion Area ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...