×

சபரிமலை ஐயப்பன்

1. ஐயப்பனின் சரிதத்தைச் சொல்லும் மிகப் பழமையான நூல், பூதநாத உபாக்கியானம்.

2. சத்தியம், தர்மத்தைக் காப்பவனாக, தர்மசாஸ்தாவாக ஐயப்பன் யோக நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் ஆலயம், சபரிமலை.

3. சின்னஞ்சிறு பாலகனாக, பந்தளராஜன் மகனாக ஐயப்பன் அருளாட்சி புரியும் அற்புதத் தலம் குளத்துப்புழை.

4. பார்கஸ்பத்தியம் எனும் நீதி நூல், துவாரகைக்கு அருகே உள்ள ரைவத பர்வதத்தில் ஐயப்பன் நித்யவாசம் புரிகிறார் என்கிறது.

5. அச்சன் கோயிலில், வனப்ரஸ்தனாக காட்சியளிக்கிறான் ஐயப்பன். தியானத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த சிற்பம் பார்க்கப் பார்க்க அழகு.

6. மகர ஜோதியாகத் தோன்றி பக்தர்கள் மன இருள் போக்கிடும் மணிகண்டன், ஆண்டுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் இடம், காந்தமலை.

7. ஐயப்பன் தனது அவதார தினத்தில்தான் மகர ஜோதி வடிவாகக் காட்சியளிக்கிறார் என்பதாலேயே, மகர ஜோதிக்கு தனிச் சிறப்பு
நிலவுகிறது.

8. புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்ற கோலத்தில், வில்லும் அம்பும் ஏந்திய வீரமணி கண்டனாக ஐயப்பன் அமைந்திருக்கும் இடம் எரிமேலி.

9. கலியுக வரதனான ஐயப்பனுக்கு பூரணை, புஷ்கலை எனும் இரு மனைவியரும், ஸத்யகன் எனும் மகனும் இருப்பதாக சில புராணங்கள் சொல்கின்றன.

10. புலிப்பால் கொண்டுவரச் சென்றபோது வழியில் ஐயப்பன் நீராடி நித்ய கர்ம அனுஷ்டானங்களைச் செய்தது, பேரூர் தோடு எனும் நீரோடையில்தான் என்கின்றனர்.

11. பம்பை நதிக்கரையில் நடைபெறும் அன்னதானத்தில் ஐயப்பனும் கலந்து கொள்வதாக நம்பப்படுகிறது. இந்த அன்னதானத்தை ‘பம்பா ஸத்தி’ என்றழைக்கிறார்கள்.

12. இல்லறத்தில் நல்லறம் காணும் குடும்பஸ்தனாக ஆரியங்காவு தலத்தில் காட்சி தருகிறான் ஐயப்பன். இங்கே இவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

13. தமிழகத்திலும், கேரளத்திலும் வழிபடப்படும் ஐயனார், மாசாத்தான், சாத்தப்பன், கண்டன் சாஸ்தா, பொய் சொல்லா மெய்யர் எனும் தெய்வங்களும் ஐயப்பனின் பல்வேறு வடிவங்களே.

14. அழுதை நதிக்கரையில் மகிஷியோடு ஐயப்பன் போரிட்டதைக் காண வந்த ஈசன், தன் வாகனமான காளையைக் கட்டி வைத்த இடம் ‘காளை கட்டி’ எனும் தலமாக விளங்குகிறது.

15. கேரளத்தில் ஐயப்பனுக்காக உள்ள ஆலயங்களில் பதினெட்டுக் கோயில்களை பரசுராமர் நிர்மாணித்ததாக ஐதீகம் நிலவுகிறது. இந்த ஆலயப் பணிக்காக, ஆரம்பத்தில் கேரளம், பரசுராம க்ஷேத்திரம் என்றே அழைக்கப்பட்டது.

16. கரிமலை மேட்டின் உச்சியில் உள்ள கரிமலைக் கிணறு, ஐயப்பன் ஓர் அம்பை விட்டு உண்டாக்கியதாக ஐதீகம். தன்னைக் காணவரும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக இப்படி ஓர் ஏற்பாட்டை ஐயப்பனே செய்திருக்கிறார்.

17. நாட்டின் எல்லையைக் கடந்து காட்டிற்குள் கோயில் கொள்வதற்காக மணிகண்டன் நுழைந்தபோது அங்கிருந்த முனிவர்களும், தவசிகளும் அவரை வணங்கி, அவருக்கு வேத விதிப்படி விக்ரகம் அமைத்து பொன்னாலான கோயில் அமைத்து வழிபட்ட தலமே பொன்னம்பலமேடு.

18. ஐயப்பன், மகிஷியோடு போரிட்டபோது, வில், வாள், பரிசை, குந்தம், பரிகம், ஈட்டி, முட்தடி, முல்லம், கதை, பாசம், அங்குசம், சக்கரம், பரசு, பிந்தி, வேல், கடுந்திலை, வீரச்சக்கரம், கரிகை எனும் 18 ஆயுதங்களைப் பயன்படுத்தினாராம். அவையே பின்னர் 18 படிகளாக அமைந்தன என்றும் கூறுவர்!

19. ராமபிரான் காலத்திய சபரிக்கு, ஐயப்பன் அவதார காலத்தில்தான் மோட்சம் கிட்டியது என்றும், ‘சபரிமலை’ என்று பெயர் வந்ததும் அதனால்தான் என்றும் சொல்வார்கள்.

20. புனித பம்பையிலே நீராடிவிட்டு சிறிய பாதையிலேயே சுமார் 7 கிலோ மீட்டர் நடந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும். சரண கோஷம் சொல்லிக் கொண்டே சென்றால், கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைதான்!

தொகுப்பு: ச. சுடலைகுமார்

Tags : Sabarimala Iyyappan ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து...