×

அடியார்க்கு பொன் அள்ளித்தந்த சொர்ணாம்பிகை

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள காத்திருப்பு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகை சொர்ணாம்பிகை என்ற நாமத்தில் அருட்பாலிக்கிறார்.
சொர்ணம் என்றால் தங்கம். இந்தப் பெயர் இந்த ஊருக்கு வந்ததற்கு காரணம் உண்டு. இத்தலம் வந்த நால்வரில் ஒருவரான சுந்தரர், பொன் வேண்டி இறைவனை நோக்கி பாடினார். அவரது பாடலைக் கேட்டு இறைவன் சற்றே ஒளிய, இறைவி அவருக்கு பொன்னை அள்ளித் தந்ததால் இந்த ஊர் திருசொர்ணபுரம் எனவும், இறைவி சொர்ணாம்பிகை எனவும், இறைவன் சொர்ணபுரீஸ்வரர் எனவும் அழைக்கப்படலானார்கள்.

சுந்தரரின் பாடல் கேட்டு இறைவன் சற்றே ஒளிந்ததால் இன்றும் கருவறை இறைவன் சற்றே இடதுபுறம் ஒதுங்கி அருட்பாலிக்கிறார். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று சுந்தரருக்கு நாணயங்களால் கனகாபிஷேகம் நடைபெறும். அந்த நாணயங்களை ஆண்டு முழுவதும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். இந்த ஊர் பெண்கள் புதிதாக நகைகள் வாங்கினால் அதை அம்மன் பாதத்தில் வைத்து வணங்கி விட்டு பின்னரே எடுத்துச் சென்று அணிகின்றனர். இதனால் அன்னை சொர்ணாம்பிகை தங்கள் வீட்டில் மேலும் தங்கம் தழைக்கச் செய்வாள் என்பது அவர்களது நம்பிக்கை.

இந்த ஊருக்கு காத்திருப்பு என்று இன்னொரு பெயரும் உண்டு, அந்தப் பெயர் வரக் காரணமான புராணக் கதையும் ஒன்று உண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன் காத்யாயன முனிவர், தனது பத்தினியுடன் இங்கு வசித்து வந்தார். அவருக்கு குழந்தை இல்லை. பல ஆண்டுகள் இறைவனை நோக்கி தவமிருந்தார். இறைவன் மனம் இரங்கினார். பார்வதி தேவியே அவருக்கு மகளாக அவதரித்தார். தவமாய் தவமிருந்து பெற்ற மகளை கண்ணை இமை காப்பது போல் காத்து, வளர்த்து வந்தார் முனிவர். அவளுக்கு காத்யாயினி என்று பெயரிட்டார். காத்யாயினிக்கு திருமண வயது வந்தது. மணமகனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள் தேவி. இறைவன் அவளை திருவீழி மலைக்கு வரச்சொல்லி மணந்து கொண்டார்.

இங்கு காத்யாயினி இறைவனுக்காக காத்திருந்ததால் இத்தலம் காத்திருப்பு என அழைக்கப்படலாயிற்று. இன்றும் வழக்கத்தில் இந்தப் பெயரே நிலவுகிறது. ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ராஜகோபுரம் உள்ளே நுழைந்ததும் நீண்ட பிராகாரம். பலிபீடம், கொடிமரம், கொடிமர விநாயகர் நடுவே இருக்க அடுத்துள்ளது மகாமண்டபம். நந்தியும் பலி பீடமும் நடுவே இருக்க, உள்ளே கருவறையில் இறைவன் சொர்ணபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கீழ்த்திசை நோக்கி அருட்பாலிக்கிறார். சுந்தரருக்காக இறைவன் ஒளிந்ததால், கருவறை இறைவன் சற்றே இடதுபுறம் ஒதுங்கியே அமர்ந்துள்ளார்.

இடதுபுறம் அன்னை சொர்ணாம்பிகை தனிக் கோயிலில் கீழ்த்திசை நோக்கி அருட் பாலிக்கிறாள். இங்கு அன்னை இறைவனுக்கு இடது புறம் அமர்ந்து கீழ்த்திசை நோக்கி அருட் பாலிப்பது அபூர்வ அமைப்பாக சொல்லப்படுகிறது. அன்னை மேல் இரு கரங்களில் பத்மத்தையும், உத்ராட்ச மாலையையும் சுமந்து, கீழ் இரு கரங்கள் அபய ஊரு ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் அருட் பாலிக்கிறாள். அன்னை தன் கீழ் இரண்டு கரங்களில் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்து சொர்ணலட்சுமியாக காட்சி தருகிறாள். கொளதம முனிவர் சந்திரனுக்கு சாபமிட, சந்திரன்  இங்கு வந்து அன்னையிடம் முறையிட, அன்னை சந்திரனின் சாபத்தை விலக்கி, சந்திரன் மீண்டும் பழையபடி ஒளி வழங்க அருள் புரிந்தாள்.

இதனால், சந்திரனின் பிறை வடிவம் அன்னையின் சிரசில் காணப்படுகிறது. மேலும், அன்னைக்கு இங்கு கிரீடம் இல்லை. மாறாக, தலைமுடியே கிரீடமாக அமைந்துள்ளது சிறப்பு தோற்றமாக கருதப்படுகிறது. ஒரு சமயம் மயூர விநாயகரின் சாபத்தால் சர்ப்ப ராஜன் வாசுகி தன் பலம் முழுவதையும் இழந்தான். இழந்த தன் பலத்தை மீண்டும் பெற என்ன செய்வது என்று புரியாது தவித்த சர்ப்ப ராஜன் மகாவிஷ்ணுவை நாடினான். மகாவிஷ்ணு காவிரி ஆற்றங்கரையில் லிங்கப் பிரதிஷ்டை செய்து சொர்ணபுரீஸ்வரரை வணங்கி வரும்படி பணித்தார். அதன்படி வாசுகி ராஜன் இத்தலம் வந்து இங்கு அருட் பாலிக்கும் இறைவன் இறைவியை பல மண்டலம் பூஜை செய்து இழந்த பலத்தை மீண்டும் பெற்று, சாப விமோசனம் பெற்று, நாகலோகம் சென்றான்.

எனவே, இத்தலம் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. ஆலயத்தின் தல விருட்சம், மூன்று. வன்னி, வேம்பு, மாதுளை என இந்த மூன்று விருட்சங்களும் ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ளன. ஆலய ஈசானிய பாகத்தில் உள்ள சொர்ண புஷ்கரணியே ஆலய தீர்த்தமாகும். வள்ளி, வேம்பு இரண்டு தல விருட்சங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பின்னி வளர்ந்துள்ளன. பௌர்ணமி அன்று 27 விளக்கு ஏற்றி இத்தல விருட்சங்களை வலம்வர திருமணத் தடை நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். வைகாசி மாதம் வளர்பிறை பஞ்சமியில் கொடியேற்றத்துடன் 10 நாள் பிரம்மோற்ஸவம் தொடங்கும். 10ம் நாள் சுந்தரருக்கு பொன் அளக்கும் திருவிழா நடைபெறும்.

கார்த்திகை சோம வாரங்களில் இறைவன் இறைவிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. நாகை மாவட்டம் சீர்காழி காரைக்கால் பேருந்து சாலையில் சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள காத்திருப்பு என்ற கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம்.

தொகுப்பு: மல்லிகா சுந்தர்

Tags : sirenampigai ,
× RELATED தெளிவு பெறுவோம்