×

புரட்டாசி வழிபாட்டுக்கு உகந்த தலம் சங்ககிரி மலைக்கோட்டையில் அருள்பாலிக்கும் இரட்டை பெருமாள்

சேலத்தை அடுத்துள்ள சங்ககிரியில் அமைந்துள்ளது பிரம்மாண்ட மலைக்கோட்டை. சங்கு வடிவிலான மலையை கொண்ட ஊர் என்பதால், சங்ககிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் பிரம்மாண்டமாக திகழும் கோட்டையில் மலை உச்சியில் அமைந்திருக்கிறது பழம் பெருமை வாய்ந்த சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில். அதே போல் மலையடிவாரத்தின் முதல்வாயிலில் சென்னகேஸ்வரர் கோயிலும், அடுத்த வாயிலில் வரதராசப்பெருமாள் கோயிலும் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது.

தமிழகத்தில் மிகவும் உயரமான வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டையில் விஜயநகர அரசர்களால் 15ம் நூற்றாண்டில். கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. வரதராஜ பெருமாள் கோயிலில், புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்படும். வருடத்தின் மற்ற நாட்களில் இந்த கோவில் பூட்டியே தான் இருக்கும். யாரேனும் பூஜைக்கு தேதி கொடுத்தால் மட்டுமே மற்ற நாட்களில் மேலே வந்து அர்ச்சகர்கள் திறப்பார்கள். கோயில் கல்யாண மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், அந்தக் கலையின் உச்சத்தை வெளிப்படுத்தி வியக்க வைக்கிறது.

கோட்டையில் 9வது வாயிலை கடந்து, மலை உச்சிக்கு சென்றால் சென்னகேசவப் ெபருமாள் கோயில் உள்ளது. புரட்டாசி மாதத்தின் முக்கிய விழா நாட்களில் மட்டுமே இந்த கோயிலும் திறக்கப்படுகிறது. விழா நாட்கள் தவிர, மற்ற நாட்களில் உற்சவர் மலையடிவாரத்தில் வைக்கப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு பெருமாள் கோயிலும், சிவன்கோயிலும் ஒரே மலைக்கோட்டையில் இருப்பது கூடுதல் சிறப்பு. அதற்கு மத்தியில் பழமையான மசூதியும் இருப்பதும், காலம் கடந்தும் மதநல்லிணக்கத்திற்கான அடையாளமாக திகழ்கிறது என்கின்றனர் சமய ஆர்வலர்கள்.

இதே போல் தமிழகத்திலுள்ள பெருமாள் கோயில்களில் சயனக்கோலம், தியானக்கோலம், நின்றருளும் கோலத்தில் தனித்தனியாக திருமாலை காண முடியும். ஆனால் இங்குள்ள வரதராசப்பெருமாள் கோயில் கோபுரத்தின் இடப்புற வாயிலில் மூன்று நிலைகளிலும் திருமால் நின்று அருள்பாலிக்கும் அபூர்வத்தை  காணலாம். சென்னகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார். புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதம். அதேபோல் நமது முன்னோர்களின் விடுதலை மாதமாகவும் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம்.

சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார்.  அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர் என்பது மக்களின் நம்பிக்கை. புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். இதன் காரணமாகவே புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மீக வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அந்த புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகள் அனைத்தும் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.

அந்த மாதத்தின் நான்கு சனிக்கிழமைகளிலும் நாம், பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வழிபட வேண்டும். ஊரில் எத்தனையோ பெருமாள் கோயில்கள் இருந்தாலும், சில முக்கிய கோயில்களுக்குப் போகும் போதுதான் அதற்குரிய புண்ணிய பலன்களை அனுபவிக்க முடியும். அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் மட்டுமே நடை திறந்து அருள்பாலிக்கும் சங்ககிரி கோட்டை பெருமாள் கோயில்கள் அற்புத சக்தி கொண்டவை என்கின்றனர் வைணவ முன்னோடிகள்.

Tags : Arulpali ,Perumali ,hill fort ,Sankagiri ,
× RELATED மக்களவைத் தேர்தல்: திருச்சியில் பாஜக...