×

செங்கம் அருகே அருள்பாலிக்கிறார் சித்திர, விசித்திர குப்தர்களின் பாவங்களை போக்கிய ஈசன்

பிரமஹத்தி  தோஷம் நீங்க முருகப்பெருமான் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும்  சேயாற்றின் வடகரையில் காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை என்றழைக்கப்படும் ஊர்களில் 7 சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டு தோஷத்தில் இருந்து விடுபட்டார். இந்த சிவாலயங்கள் “சப்த கரைகண்டம்’ என்றழைக்கப்படுகின்றன.

அதேபோல் முருகப்பெருமானை ஏவிய செயல், அன்னையை சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிவந்தது. இதனால் அன்னை சேயாற்றின் தென்கரையில் மண்டகொளத்தூர், கரைபூண்டி, தென் பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டு ஆகிய ஊர்களில் ஏழு சிவாலயங்களை உருவாக்கி வழிபட்டு பாவத்தில் இருந்து விடுபட்டாள். அவை ‘சப்த கைலாயங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

சப்த கயிலாய தலங்களில் 7வது தலம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வாசுதேவம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்பாள் சவுந்தரநாயகி என்ற திருநாமத்தோடும், இறைவன் ஸ்ரீபக்தவச்சலேஸ்வரர் எனும் திருநாமத்தோடும்  அருள்கிறார். தல விருட்சமாக வில்வமரம் உள்ளது.
பழங்காலத்தில் ஆட்கொண்டேஸ்வரர் என்று இந்த ஈசன் போற்றப்பட்டிருக்கிறார்.

இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. வாசுதேவராஜா என்பவர் இவ்வூரை ஆட்சி செய்திருக்கிறார். இதற்கு அடையாளமாக கோட்டையும் உள்ளது. அதன் அருகே 8 அடி உயர ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது. சிறந்த வைணவ பக்தரான வாசுதேவராஜா, ஸ்ரீவீர நாராயண பெருமாள் கோயிலை கட்டியதாலேயே இவ்வூர் வாசுதேவம்பட்டு என்றழைக்கப்படுகிறது.

இத்தலத்தின் பெருஞ்சிறப்பே இத்தல ஈசனை சித்திர, விசித்திர குப்தர்கள் பூஜித்து சாபவிமோசனம் பெற்றார்கள் என்பதுதான்.  எமலோகத்தில் ஜனன-மரண கணக்குகள் எழுதுவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சபிக்கப்பட்ட சித்திர-விசித்ர குப்தர்கள் இத்தலத்திற்கு வந்து, மனம் நெகிழ்ந்து பூஜித்து சாபவிமோசனம் பெற்று இக்கோயிலின் ஈசான்ய மூலையில் தனிச் சந்நதிபெற்று எழுந்தருளியிருக்கின்றனர்.

தெற்கு நோக்கிய பிரதான நுழைவாயில் மண்டபத்தில் ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கியவாறு விநாயகர், சோமாஸ்கந்தர், முருகர், நந்தி தேவரின் சிலைகள் அமைந்துள்ள பிரபை மட்டுமே காணப்படுகின்றன. உள்ளே நுழையும்போது 12 கால் மண்டபத்தில் சப்த கன்னியர் சிலை ரூபமாக அமர்ந்துள்ளதை காணலாம். அடுத்துள்ள நான்கு கால் மண்டபத்தில் துவார பாலகர்களும், மூலவரை வணங்கியவாறும் நந்தியும் உள்ளனர்.

மண்டபத்தின் தெற்கு மேடையில் நால்வர் சிலைகளும் வடக்கில் காசி லிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி சிலைகளும் உள்ளன. ஈசனின் சன்னதியை நெருங்கும்போதே உடலெங்கும் அருள் வெம்மை பரவுகிறது. ஈசன் ஆட்கொண்டேஸ்வரர், லிங்கத் திருமேனியில் பேரருள் பெருக்கி அருள்பாலிக்கிறார். விபூதியின் வாசம் அவ்விடத்தை நிறைத்து கணநேரம் நம்மையறியாது நம் கண்கள் மூடுகின்றன. அவரைத் தொழுது வலம் வருகையில் விநாயகரும், வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகரும் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.

ஈசான்ய பகுதியில்  நவகிரகங்கள் உள்ளன. தனிக்கோயிலில் அம்பாள் சவுந்தரநாயகி, அரசிபோல பேரழகு மிளிர கம்பீரமாக வீற்றிருக்கிறாள். சரணாகதியாக அவளிடம் நம் மனதை அர்ப்பணித்து விட்டால் போதும், யுகம்தோறும் நாம் மறந்தாலும், தான் மறக்காது காத்தருள்வாள் அன்னை. பிரம்ம சக்தி அருவுருவாக பிரவாகமாக ஓடும் அற்புத சன்னதி. அம்பாள் நான்கு கரங்களோடு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அவளை தரிசித்து வெளிவரும்போது தாயை பிரிந்து செல்லும் சேயைப்போல ஆழ்ந்த பாசம் நம்மைச் சூழ்கிறது.

Tags : Sengum ,Guptas ,
× RELATED செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...