×

தேனி, சேலத்தை ஒதுக்கிவிட்டு சின்ன மம்மி அழைப்புக்காக காத்திருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மவுனமே சிறந்தது என்று எந்த தலைவர் சொல்றாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மதிப்பீட்டு குழுவில் உள்ள தெர்மாகோல் மாஜி அமைச்சர் அல்வா  மாவட்டத்துக்கு போனாராம். எப்போதும் கலகலப்பாகவும், சிரித்த முகத்துடன் மைக்கை பார்த்ததும் மடை  திறந்த வெள்ளம்போல பேசுவாராம். ஆனால், அல்வா மாவட்டத்தில் மைக்கை  பார்த்ததும், நாம் இங்கிருந்து நகர்ந்தால் போதும் என நடையை கட்டினாராம்.  அப்போது நிருபர்கள், இலை கட்சியின் நிலவரம் குறித்து  கேள்வி எழுப்ப ஒரு பெரிய கும்பிடு மட்டும் போட்டு விட்டு, ‘கட்சியை பற்றி  இங்கே பேசினால் நல்லா இருக்காது’ என சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனாராம். கட்சியே போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டு இருக்கு… இதுல நாம ஏதாவது சொல்ல போய் பிரச்ைன வரப்போகுது என்று மவுனமாக இருப்பதே சிறந்தது என்று நினைக்க தொடங்கி இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இருப்பதே நாலு பேரு.. இதுல கோஷ்டி பூசல் வேறயா.. எந்த கட்சியில இந்த பிரச்னை நடக்குது…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் மாவட்டத்தில் தாமரைக் கட்சியில் பல புதுவரவுகள் வந்து, இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்களாம். லேடிஸ் மேட்டரில் சிக்கிய மாஜி எம்எல்ஏ, பவர்புல் கட்சியிலிருந்து வந்த நான்கு எழுத்து பெயர் கொண்டவர் போன்ற பல முக்கிய பதவிகளை உள்ளடக்கியவர்கள் இம் மாவட்டத்தில் இருக்கிறார்களாம். புது வரவுகளால் இவர்களுக்குள் கோஷ்டி சண்டை தலை தூக்கியுள்ளதாம். இந்நிலையில் புதுசா வந்த ஒரு வரவு இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேல் சென்று தான்தான் அடுத்த தலைவர்போல் மாஸ் காட்டிவருவது தாமரை கட்சி நிர்வாகிகள் மத்தியில் மேலும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறதாம்.போன வாரம் நகரத்தலைவர் பதவிக்காக கட்சியில் சேர்ந்த பழனியாண்டவர் பெயரைக் கொண்ட கவுன்சிலர், மாவட்ட, மாநில நிர்வாகிகளையும் தாண்டி தான் மாவட்டத்தில் தாமரைக் கட்சியின் தலைவர் என்று முத்திரை பதித்து வருகிறாராம். நகரமன்றக் கூட்டத்தில், இலை கட்சி கவுன்சிலர் கூட கேட்காத நிலையில் தான் தேசிய கட்சி தனி இருக்கை ஒதுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வெளியே நடப்பு செய்தாராம். இந்நிலையில், குடியரசு தலைவர் வெற்றி பெற்றதை மாவட்டத்தில கட்சியில் யாரும் கொண்டாடாத நிலையில் தன்னுடைய தலைமையில் மாவட்ட தலைநகரில் கொண்டாடி பெரும் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டியுள்ளாராம். இதனால் மாஜி எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர் உள்ளிட்ட பலரும் அச்சத்தில் இருக்கிறாரார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சின்ன மம்மியை தவிர வேறு யாரு கூப்பிட்டாலும் அணி மாற மாட்டேன் என்று யாரு பிடிவாதம் பிடிக்கிறார்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடலோர மாவட்டத்தின் இலைக்கட்சியின் முன்னாள் அமைச்சரான மன்னர் பெயரை பின்னால் கொண்டவர், எப்போதுமே சின்ன மம்மிக்கு விசுவாசமானவராகவே இருந்தார். கட்சியில் இல்லாததால் அமைதி காத்து வருகிறார். தற்போது ஒற்றைத் தலைமை பிரச்னையில் தேனியும், சேலமும் உடைந்து கிடப்பதால், ஆதரவுக்காரர்களை சேர்த்து வலிமை கூட்டும் உணர்வில் இருதரப்புமே இவரை அணுகி இருக்கிறது. தூங்கா நகரத்திலிருந்து சேலத்துக்காரர் சார்பில் உதயமானவர் நேடியாகப் பேசி அழைப்பு விடுத்தாராம். கடலோர மாவட்ட நிர்வாகியான சாமியானவர் துவங்கி, தேனிக்காரர் வரை தங்கள் பக்கம் இழுக்க பேசி அழைப்பு விடுத்தனராம். எப்படியும் சின்ன மம்மி தரப்பில் இருந்து சிக்னல் வரும். அப்போது அந்தப்பக்கம் மாறிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில், தேனி, சேலம் தரப்பினரை தவிர்த்து விட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சி கொடியை நடுவதில் என்ன பிரச்னை… யாரு குழப்புனா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டம் பாக்கம்னு முடியுற தாலுகாவுல பிரம்மதேசம் இருக்குது. இந்த ஏரியாவுல சில நாட்களுக்கு முன்னாடி, என்டிகே கட்சி சார்புல, தஞ்சை மன்னனோட பிறந்த நாள் விழா கொண்டாடியிருக்காங்க. கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக கட்சிக்காரங்க, கட்சியோட கொடியை நடுவதற்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அதுக்கு, அப்பகுதி ஜனங்க, உங்கள் கட்சியில் ஒருத்தர் கூட இந்த ஏரியாவுல இல்லையே, அப்புறம் எதுக்கு கம்பம் நடுறீங்கன்னு கேட்டு வாக்குவாதத்துல ஈடுபட்டிருக்காங்க. போலீசார் சமரசம் செஞ்சி வெச்சிருக்காங்க. அதுக்கு அப்புறமாக, இரவு நடந்த கூட்டத்துல, என்டிகே கட்சியோட ஒருங்கிணைப்பாளர், தஞ்சை மன்னனின் வரலாற்றை தப்பு, தப்பா பேசிட்டாராம். அதோட இல்லாம, என் கட்சி கொடி கம்பத்தை நடக்கூடாதுன்னு, சொன்னவன் யாரு, அவன தூக்கிட்டு வாங்கடான்னு பேசினாராம். இதனால லோக்கல் அரசியல் கட்சிக்காரர்களுக்கும் என்டிகே தலைவருக்கும் அடிதடி நடக்க இருந்த சூழல்ல, மழை வந்து அனைவரையும் அந்த இடத்தில் இருந்து ஓட விட்டுடுச்சாம். இதனால் போலீசார் இரவு நிம்மதியாக தூங்க போனாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சின்ன மாவட்டத்தில் என்ன பிரச்னை…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘சின்ன மாவட்டத்தில் இலை கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க சேலத்துக்காரர் அணியில் கடும் போட்டி நிலவி வருகிறதாம். மாஜி எம்பி, எம்எல்ஏ ஆகியோர் சேலத்துக்காரரை நேரிடையாக சந்திக்காமல், கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து காய் நகர்த்தி வருகிறார்களாம். இதில் சின்ன மாவட்ட மாஜி எம்எல்ஏ, சேலத்துக்காரர் அணியில் பவர்புல்லாக இருந்து வரும் மாஜி அமைச்சரை நேரில் சந்தித்து மாவட்ட செயலாளர் பதவியை கேட்டு வருவதாக சின்ன மாவட்ட இலைக்கட்சி தொண்டர்களுக்குள் அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post தேனி, சேலத்தை ஒதுக்கிவிட்டு சின்ன மம்மி அழைப்புக்காக காத்திருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Theni ,minister ,Salem ,wiki Yananda ,Uncle ,Peter ,Thermocol ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு