×

ஊட்டி குருசடி காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு தகர கொட்டகைகள் அகற்றம்

ஊட்டி : ஊட்டி குருசடி காலனி பகுதியில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தற்காலிக தகர கொட்டகைகள் அகற்றப்பட்டன. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் வருவாய்த்துறை, நகராட்சி, ெநடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அங்கு கடைகள் முளைத்துள்ளன. குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக விளங்கும் மத்திய பஸ் நிலையம், ஊட்டி ஏ.டி.சி., உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வருவது மட்டுமின்றி அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன. இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல், குருசடி காலனி பகுதியில் நகராட்சி பார்க்கிங் தளம் அருகே அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறமுள்ள நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து மாட்டு கொட்டகைகள் உள்ளிட்டவை  அமைக்கப்பட்டிருந்தன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நகராட்சி ஆணையர் காந்திராஜன் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, நகரமைப்பு அலுவலர் ஜெயவேல் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் மீனாட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகைகள் மற்றும் கொட்டகைகள் போன்றவற்றை அகற்றினர். மேலும், பார்க்கிங் பகுதியில் இருந்த தற்காலிக கடைகளையும் இடித்து அகற்றினர். குருசடி காலனி பகுதியில் இருந்த மொத்தம் 12 தற்காலிக கொட்டகைகளை அகற்றினர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,“குருசடி காலனி பகுதியில் நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தகர கொட்டகைகள் அகற்றப்பட்டுள்ளன. இதேபோல், நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும்’’ என்றனர்….

The post ஊட்டி குருசடி காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு தகர கொட்டகைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Ooty Kurusadi Colony ,Ooty ,Kurusadi Colony ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...