×

திருத்தங்கல் பகுதியில் பயனின்றி கிடக்கும் பழைய கிணறுகள்

*தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை*குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மாத்தி யோசிப்போம்சிவகாசி : திருத்தங்கல் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நகரில் சிதிலமடைந்து கிடக்கும் கிணறுகளை போர்க்கால அடிப்படையில், தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சிவகாசி அருகே திருத்தங்கல்லில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரத்திற்கு ஒருமுறை வந்த தண்ணீர், தற்போது 25 நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. திருத்தங்கல் மண்டலத்திற்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தினமும் 20 லட்சம் லிட்டர் தேவை என்ற நிலையில், தற்போது 7 லட்சம் முதல் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருகின்றது. இதனால், 20 நாள் 25 நாளைக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகின்றது. நகரில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நகரில் உள்ள அனைத்து குடிநீர் கிணறுகளையும் தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். திருத்தங்கல் அருன்பாண்டி கூறுகையில், ‘திருத்தங்கல் பகுதியில் 80 ஆண்டுகள் பழைமையான குடிநீர் கிணறுகள் ஏராளமாக உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த கிணறுகள் மூலம்தான் குடிநீர் விநியோகம் நடைபெற்றது. இக்கிணறுகள் காலப்போக்கில் பயன்பாட்டிற்கு இல்லாமல் பாழடைந்து, பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாய் இக்கிணறுகள் தூர்வாராமல், குப்பைகள் குவிந்து மாசடைந்த நீர் உள்ளது. இதனால், கிணற்று நீரை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள இந்த கிணறுகள் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பின்றி காணப்படுவதால் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தனியார் லாட்ஜ் பின்புறம் உள்ள கிணறு இருந்த அடையாளமே தெரியாத அளவிற்கு குப்பைகளால் நிரப்பி அடைத்து வைத்துள்ளனர். திருத்தங்கல் பகுதி கிணறுகளை தூர் வாரினால், கோடைகாலத்தில் மக்களின் தண்ணீர் தேவைக்கு பயன்படுத்த முடியும். கிணறுகளை தூர்வாரி தூய்மைப்படுத்திய பிறகு, கிணற்றின் சுவர்களுக்கு வண்ணம் அடித்து, கிணற்றின் மேல்பாகத்தில் பாதுகாப்பான முறையில் இரும்பு ஜன்னல்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்….

The post திருத்தங்கல் பகுதியில் பயனின்றி கிடக்கும் பழைய கிணறுகள் appeared first on Dinakaran.

Tags : Thirutangal ,Durwari ,Mathi Yosippomsivakasi ,Thiruthangal ,
× RELATED முதியவரை தாக்கியவர்கள் மீது வழக்கு