×

விடுதியில் மாணவி தற்கொலை விவகாரம் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களிடம் சிபிசிஐடி போலீஸ் இன்று விசாரணை: பாதுகாப்புக்கு போலீசார் குவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசினர் உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களிடம் சிபிசிஐடி போலீசார் 3வது நாளாக விசாரணை நடத்துகின்றனர். திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் திருத்தணி அருகே தெக்கலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி சரளா, பிளஸ் டூ படித்துவந்தார். பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவி, சில நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், டிஐஜி சத்தியப்பிரியா, எஸ்பி கல்யாண் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நேற்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது சொந்த ஊரில் மாணவி சரளாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து முதல் நாள்‌ பள்ளி விடுதியில், தங்கியுள்ள மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். 2வது நாளாக மாணவியின் பிரேத பரிசோதனையை  முழுமையாக வீடியோ காட்சிகளுடன் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர்.இந்த நிலையில், 3வது நாளாக இன்று சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் போலீசார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இதில் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிபிசிஐடி விசாரணை நடக்கவுள்ள நிலையில், கீழச்சேரி பஸ் நிலையம், பள்ளி நுழைவு வாயில், பள்ளி வளாகம், விடுதி அருகே டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ,  தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பள்ளி வளாகத்தில்  கண்ணீர் புகை குண்டு வாகனமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும்  நிறுத்தப்பட்டுள்ளது. மாணவி விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை முடிந்ததும் பள்ளி திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.    …

The post விடுதியில் மாணவி தற்கொலை விவகாரம் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களிடம் சிபிசிஐடி போலீஸ் இன்று விசாரணை: பாதுகாப்புக்கு போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : CBCID police ,Thiruvallur ,Geezachery ,Dinakaran ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி