×

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, போலந்து உள்பட பல வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்து வருகின்றனர்

சென்னை: சென்னையில் நடைபெறும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் செஸ் வீரர்கள் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. செஸ் போட்டிகளை வரும் 28ம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 2022ம் ஆண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியை, உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து இந்தப் போட்டியைத் தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த வேண்டும் என முன்னெடுத்த முயற்சியின் பலனாக அந்த வாய்ப்பு நமது நாட்டிற்கு கிடைத்தது. அந்த வாய்ப்பும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சியால் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது. போட்டி தொடங்க 3 நாட்களே உள்ள நிலையில், சென்னையில் செஸ் போட்டிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரும்பிய இடமெல்லாம் பல்வேறு வகையிலான செஸ் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. 188 நாடுகளில் இருந்து வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.  இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடக்கி வைக்க பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவும் என பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார். ஜூலை 28ம் தேதி அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையார் விமான தளத்திற்குச் செல்கிறார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கிற்கு செல்கிறார். அங்கு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆளுனர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 2,500 பேர் உலகம் முழுவதிலும் இருந்து வருகிறார்கள். உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்க சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஒட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் வீரர்கள், வீராங்கனைகள் வந்தால் எந்தவித தடையின்றி செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் அவர்களை வரவேற்று அழைத்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.  முதல் நாளில், உஸ்பெகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஹாங்காங், வேல்ஸ், உருகுவே, செர்பியா, வியட்னாம் என 12 நாடுகளில் இருந்து 32 வீரர்கள் சென்னை வந்தனர். தொடர்ந்து, நேற்றும் வீரர்கள் வருகை தந்தனர். அதற்கான விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று அதிகாலை உகாண்டா, கோஸ்டாரிகா, கேமன் தீவு, கஜகஸ்தான், கயானா ஆகிய நாடுகளை சேர்ந்த 6 வீரர்கள் வந்தனர். இன்று காலையில், நைஜீரியா, தான்சான்யா, போலந்து, எஸ்டோனியா, ரஷ்யா, பல்கேரியா, செர்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த 16 வீரர்கள் வந்தனர்.  காலை 10.55 மணி அளவில் கோமோரோஸ் தீவு, ஜாம்பியாவை சேர்ந்த 12 வீரர்களும், 12.40 மணிக்கு ஐஸ்லாந்தை சேர்ந்த ஒரு வீரரும் வந்தனர். அதேபோன்று நேற்று முன்தினம் இரவு செக் குடியரசு, உருகுவே, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, நியூசிலாந்து, பார்படோஸ், உக்ரைன், இங்கிலாந்து, பப்புவா நியூ கினியா, ஈரான், கேமேன் ஐஸ்லாந்து, கனடா, தென்கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 31 பேரும் வருகை தந்தனர். நாளையும் இன்னும் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு வீரர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் எ.வ.வேலு, மதிவேந்தன், மெய்யநாதன் ஆகிய மூவரும் தொடர்ந்து இது தொடர்பான பணிகளை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக நவீன உள் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 28ம் தேதி தொடங்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி நிறைவடைகிறது….

The post சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, போலந்து உள்பட பல வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்து வருகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Russia ,Poland ,Chennai ,International Chess Olympiad ,44th International Chess Olympiad tournament ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...