×

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?

* இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 31

‘கண்ணுதல் வானவன் கனகச் சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம்’ என்கிறார், கம்பர். சிதம்பரம் ஆகாயத் தலம் என்பதால் நடராஜரை ‘வானவன்’ என பொருத்தமுறப் பெயரிட்டு அழைக்கிறார் கவிச் சக்கரவர்த்தி. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா ? இடதுபதம் தூக்கி ஆடும் நடராஜன் அடிபணிவையே !’ என இசைப்பாடல்கள் ஏற்றிப் போற்றும் சிதம்பர நாதனை சுந்தரமூர்த்தி சுவாமிகள் எப்படி தரிசித்தார் என நாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் சேக்கிழார் சுவாமிகளின் பெரியபுராணத்தைத் தான் புரட்ட வேண்டும் ! மெய், வாய், கண், மூக்கு, செவி இவை ஐம்புலன்கள்.

சித்தம், புத்தி, மனம், அகங்காரம் இவை நான்கு கரணங்கள். ராஜசம், தாமசம், சத்துவம் இவை மூன்று குணங்கள். நடராஜரின் தனிப்பெருங்கூத்தை கண்டதில் கண்ணைத் தவிர மற்ற நான்கு புலன்களும் வேலை நிறுத்தம் மேற்கொண்டன. கரணங்களில் சிந்தையைத் தவிர மற்ற முக்கரணங்களும்  மூச்சொடுங்கிப் போயின. மூன்று குணங்களில் ராஜசத்தையும், தாமசத்தையும் அடக்கி சத்துவ குணமே தலைதூக்கி நின்றது. ஆன்மாவை லயிக்கச் செய்வதே ஆலயம். சிதம்பரக் கோயில் அத்தகைய அனுபவத்தைச் சுந்தரருக்குத் தந்தது என விவரிக்கிறது. ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள’ என்ற பெரியபுராணப் பாடல்.

நடராஜப் பெருமானுக்கு வலப்பக்கத்திலேயே அருவமாக ஆராதிக்கப்படும் சிதம்பர ரகசியத் திருச்சந்நதி அமைந்துள்ளது. பஞ்ச பூதத் தலங்களில் தில்லை ஆகாயத்தலமாகப் போற்றப் பெறுகிறது. பூமிக்குரிய தலம் திருவாரூர், காஞ்சிபுரம். நீருக்குரிய தலம் திருவானைக்கா, காற்றுக்குரிய தலம் காளஹஸ்தி, அக்னிக்குரிய தலம் அண்ணாமலை, அவ்வாறே சிதம்பரம் பெருவெளியாகிய ஆகாயத் தலம் என்பதால் சிதம்பர ரகசியச் சந்நதியில் ‘அங்கு  இங்கெனாதபடி எங்கு பிரகாசமாய் ஆனந்த பூர்த்தி யாகி அருளொடு விளக்கும்’ அருவ இறைவனுக்கு வில்லப் பொன்னிதழ் மாலை சார்த்தப் பெற்றுள்ளது. தில்லை வாழ் தீட்சதர்கள் திரை விலக்கிக் கற்பூர தீபம் காட்டுவார்கள். பலகணி மூலமாகவே பக்தர்கள் தரிசிக்க முடியும். அம்பலத்தில் ஒரு ரகசியம் அமைந்திருப்பது ஆச்சரியம் தானே !

நடராஜப் பெருமானுக்கு அருகிலேயே அருவுருவமாக ஸ்ரீ சந்திரமௌலீசுராக விளங்கும் ஸ்படிகலிங்கம் அமைந்துள்ளது. வலப்பக்கம் சிதம்பர ரகசியமும், இடப்பக்கம் ஸ்ரீசிவகாம சுந்தரி தரிசனமும், இடையிலே ஆனந்த நடராஜரின் அற்புத மூர்த்தமும் நாம் கண்டு கண்டு களிக்க வேண்டியவை. திறந்திருக்கும் திருக்கோயிலுக்குள் அழைத்து இறைவனை இதயபூர்வமாக வழிபட்டு நற்பண்புகள் வளரப்பெற்றால் திறக்காடி சிறைக்குள் அகப்பட்டுத் தவிக்கின்ற அவலநிலை மக்களுக்கு எற்படாது. ஆலயம் தொழுவது சாலவும் நன்றல்லவா !

சிதம்பரம் நடராஜர் தன்னை நேரிடையாக வந்து வணங்காதவர் இல்லங்களுக்கும் தாமே எழுந்தருளுகிறார். ‘என்ன ஆச்சர்யம்?’ என வியப்பால் விழி விரிகிறதா! ஆமாம்! கருவறையை விட்டு மூலவரான ஸ்ரீநடராஜ மூர்த்தியே ஆண்டுக்கு இருமுறை தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் உற்சவராக உலா வருகிறார். ஆனித் திருமஞ்சனத்தில் போதும், மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போதும் தான் இந்த அற்புதம் நடக்கிறது. நம்மேல் நடராஜர் காட்டும் கருணைக்கு இது ஒரு உதாரணம் ! கருவறை மூலவர் தெருவரை உலாவருவது வேறெங்கும் காண முடியாத எட்டாவது அதிசயம் !   நடராஜரின் திருநடனம் இருவிழிகளுக்குள் அடங்காத இன்பம்! யார் காண நானமிடுகிறார் சிவன் என சிதம்பரம் வரலாறு சிறப்பாக கூறுகிறது. அருணகிரிநாதரும் திருப்புகழில் அதியற்புதமாகப் பாடுகிறார்.
 
கருணை ம்ருகேந்திர அன்பர் உடன் உரகேந்தரர் கண்ட கடவுள் நடேந்திரர்’மிருக இந்திரர் புலிக்கால் முனிவர் எனப் புகழப்படும் வியாக்கிரபாதர். உரக இந்திரர் பதஞ்சலி முனிவர் எனப் பேசப்பெறும் ஆதிசேடன். இவர்கள் இருவரும் காண நட இந்திரராகிய கூத்தர் புரியு் பரதமே இதயத் தலமாக விளங்கும் இணையற்ற தில்லையில் இடையறாது நடைபெறுகிறது. உலக இயக்கம் அம்பலக் கூத்தனின் ஆட்டத் தால்தானே தொடர்கிறது. ‘யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே - என்பது திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு மந்திரம்.

‘பூலோக கைலாசம் எனப் புகழப்பெறும் தில்லைச் சிதம்பரம் புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பெரும் பற்றோடு பூசித்த தலம் ஆதலால் பெரும்பற்றப் புலியூர் எனவும் , தங்கள் கூரை, வேயப் பெற்றதால் பொன்னம்பலம் எனவும், தில்லை என்னும் மூலிகை மரங்கள் மிகுந்த இடம் ஆதலால் தில்லை வனம் என்றும் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கிறது.  மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறப்பிடம் பெறுவது சிதம்பரம். குமரகுருபரர் இதை அழகாகக் குறிப்பிடுகிறார்.
 
தீர்த்தம் என்பது சிவகங்கையே !
எத்தரும் தலம் எழில் புலியூரே!
மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே !
 ‘கனக சபை மேவி அனவரதம் ஆடும் கடவுள்’

ஜகஜோதியாக விளங்குகிறார் என்கிறார் அருணகிரி நாதர். அந்த நடராஜரை தில்லை வாழ் அந்தணர்கள் சிறப்பாகப் பூசிப்பதை.
 
‘‘வேத நூன் முறை வழுவாமே தினம்
வேள்வியால் எழில்புனைமூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே !’’

-    என்றும் பாராட்டி மகிழ்கிறார். இத்திருப்புகழ் வரிகளை முதன் முதலாகக் கேட்டு, மயங்கி பின்னர் தான் திருப்புகழ் ஏடு தேடும் பணியில் இறங்கினார் வடக்குப்பட்டு திரு. சுப்ர மணியர். எனவே ‘திருப்புகழ்’ வருவதற்கு மூல காரணம் நடராஜரே !

 *  நடராஜர் ஆண்டுக்கு ஆறுமுறை அபிஷேகம் ஏற்கிறார். முகற் குளியில் விடியற் காலையில் தானே நிகழவேண்டும் ! தேவர்களுக்கு விடியற்காலமான மார்கழியில் மஹா அபிஷேகம் நிகழ்கிறது.  ‘மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப் போகுது’ என மனம் உருகினார் நந்தனார் என்பது நாம் அறிந்ததுதானே ! மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் மற்ற ஐந்து அபிடேக விசேடங்கள் நிகழ்கின்றன. மாணிக்கவாசகரின் திருவாசகமும், மூவர் தேவாரமும், பெரிய புராணமும், ஏன் ? திருப்புகழும் தில்லை நடராஜனின் திருவருளால் தான் தமக்குக் கிடைத்தன. எடுத்துச் சொல்ல இயலாத அளவிற்கு ஏற்றங்கள் பலபெற்ற தில்லை நடராஜர் ஆலயம் 51 ஏக்கர் நிலப்பரப்பில் விளங்குகிறது. 135 அடி உயரம் கொண்ட நான்கு ராஜ கோபுரங்கள், ஒவ்வொரு ராஜகோபுர வாயிலும் 40 அடி உயரம் கொண்டு விளங்குகிறது. ஆடல்வல்லான் ஆலயத்தில் நாட்டிய முத்திரைகள் நாட்டியிருக்க வேண்டுமே ! ராஜகோபுர வாயிலின் இரு பக்கங்களிலும் பரதக் கலை சிற்பங்கள் பாங்குடன் ஓங்கியுள்ளன.

முக்குறுனி, விநாயகர், கற்பக விநாயகர், சுப்ரமணியர், சோமசுந்தரர், சிவகாம சுந்தரி, பாண்டிய நாயகர் சண்முகம் என ஆலயம் பல சூழ ‘அம்பலம்’ விளங்குகிறது. நம் பலம் எல்லாமே அம்பலம் தானே ! அதனால் தான் நிகழ்ச்சிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் ‘திருச்சிற்றம்பலம்’ என திசை அதிர முழங்குகிறோம்!

( தொடரும்)
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்
படங்கள் : மது ஜெகதீஷ்

Tags : goddess ,god ,
× RELATED சித்தலிங்கங்கள்