×

தீராத நோய் தீர்க்கும் திருக்காமீஸ்வரர்

புதுச்சேரி வில்லியனூர்

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், தனது அடியையும் முடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார். இதில் பிரம்மன் செய்த தவறால் அவருக்கு சாபம் ஏற்பட்டது வருத்தப்பட்ட பிரம்மன் சிவனிடம் தனது பாவத்தை போக்கும் படி வேண்டினார். சிவனும், தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வவனம் படைத்து சிவபூஜை செய்தால் சாபம் நீங்கும்” எனக் கூறி மறைந்தார்.

பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்மதீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்திலிருந்து விடுபட்டார். சோழர் கால கோயில் 11ஆம் நூற்றாண்டில் தர்மபாலச்சோழன் என்ற மன்னன் இந்த கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. இவனது முன்ஜென்மப் பயனால் வெண்குட்டம் ஏற்பட்டது. இந்த நோய் நீங்க, இத்தலக் குளத்தில் நீராடி, சிவனை வழிபட்டு குணம் பெற்றான். எனவே வில்வவனமாக இருந்த இங்கு ஒரு நகரை உருவாக்கி, சிவனுக்கு கோயில் கட்டி வில்வநல்லூர் என பெயரிட்டான்.

இதுவே காலப்போக்கில் வில்லியனூர் ஆனது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை பெரிய கோவில் என்று அழைப்பது போன்று, ‘புதுச்சேரியின் பெரிய கோவில்’ என்று இக்கோயிலை மக்கள் அழைக்கின்றனர். தென்பகுதியில் அமைந்துள்ள இராஜகோபுரம் 97 அடி உயரம் மற்றும் 9 நிலைகளுடன் கட்டப்பட்டுள்ளது. சோழர்களின் சிற்ப கலைநுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கோவிலில் உள்ள சிற்பங்கள், உள்நாட்டினரையும், வெளிநாட்டினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளன. 2 பிரகாரங்களிலும் விநாயகர், முருகன், பைரவர், நவக்கிரகங்கள், முத்துக்குமாரசாமி, துர்க்கை, தட்சணாமூர்த்தி.

வலம்புரி விநாயகர், ஆயிரம் லிங்கங்களை உடைய சிவன், ஈசான லிங்கம், பர்ண லிங்கம், நாயன்மார்கள், சோமாஸ் கந்தர், நடராஜர், அறுபத்து மூன்று நாயன்மார்கள் உள்ளிட்ட பல சிலைகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கோவில் திருவிழா வெகு விமர்சையாக 13 நாட்கள் நடைபெறுகிறது. இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் அருள்பாலிப்பதால் இத்தலம் முக்தி தலமாக விளங்குகிறது. இங்குள்ள இறைவனை பிரம்மன், நரசிம்மன், இந்திரன், சூரியன் ஆதிசேடன், மன்மதன், சந்திரன் ஆகியோர் பூஜித்துள்ளனர். ஆடிப்பூரத்தில் இத்தல அம்மனுக்கு பிரம்மோற்சவம் நடக்கிறது.

முக்கிய திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி பிரம்மோற்சவம், தேர்த்திருவிழா. ஆனித் திருமஞ்சனம் ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு பிரம்மோற்சவம், ஐப்பசி கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், கார்த்திகை லட்ச தீபம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

தீராத நோய்கள் தீரும்

குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுகப்பிரசவம் வேண்டுபவர்களும் பிரசவநந்தியிடம் வேண்டிக் கொண்டு அந்த நந்தி தங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி மாற்றி வைக்கின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறியதும் பூஜை செய்து நந்தியை மீண்டும் திசை மாற்றி வைக்கின்றனர்.

செல்வது எப்படி?

புதுவைக்கு தென்மேற்கில் 10 கிலோ மீட்டர் தொலைவில் வில்லியனூர் என்னுமிடத்தில் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

பிரசவ நந்தி

கோகிலாம்பிகை அம்மனுக்கு எதிரே பிரசவ நந்தி உள்ளது. கர்ப்பிணி பெண்கள் கோகிலாம்பிகை அம்மனுக்கு அர்ச்சனை செய்து, இந்த நந்தியை தென்புறமாக திருப்பி வைத்து வழிபாட்டால், சுகப்பிரசவம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய மூன்று தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் கோவிலின் 2 பிரகாரங்களை கடந்து மூலவராக வீற்றிருக்கும் சுயம்பு லிங்கத்தின் மீது காலை நேரத்தில் விழுகிறது. இந்த அதிசயத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

Tags : Thirukkamiswara ,
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!